அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Monday, October 16, 2017

வெம்மை பூசிய வெயில்

பாகைமானியும்
வெப்பமானியும்
நூறு தாண்டிய பகல்

உண்டு கழித்து உறக்கம் கொண்டவர்
அனலைப் பழித்தனர்

வெயிலை அள்ளிப்பூசி
வியர்வையில் குளித்து
ஊண் மறந்த விவசாயி
மௌனம் பேசினான்!

Wednesday, September 20, 2017

உயிர்ப்பெண் எழுத்து

சொர்க்கம் நரகம்
அதிருக்குது ஒருபுறம்;
வர்க்கம் சாதி
ஏதும் அழிக்கும் மறுபுறம்! 

அத்தனையும் வென்றுவர,
பெண்ணேநீ எழுந்துவர,

நூலும் அறிவும்
இரைந்து கிடக்குது;
உயிரோடு மெய்யும்
இணைந்து கடக்குது! 

Friday, April 14, 2017

வெயில்


வெயில் காற்றைப்போல் இல்லை
எதையும் அசைக்கவில்லை;
வெயில் கடலைப்போல் இல்லை
எங்கும் அசைவில்லை;
வெயில் மழையைப்போல் இல்லை
எங்கும் இரைச்சலில்லை;
வெயில் நிழலைப்போல் இல்லை
எதையும் மறைக்கவில்லை.

அமைதியைப் பேணும் உரு
வெண்மையைப் போற்றும் உரு
ஏற்றத்தாழ்வு இல்லாது
எங்கணும் பரவும் உரு
வெயில், அதனால்:
கடுமையாய் அடித்ததெனக்
குளத்துநீர் குடித்ததென
மண்ணும் சுட்டதென
மரமும் பட்டதென
வாழ்வு இற்றதென
வளமும் அற்றதெனத்
தொட்டதெலாம் குற்றமெனத்
திட்டாதீர் மானுடரே!

Wednesday, April 12, 2017

ஒற்றைப் பருக்கை

தத்தித் தவழும் குழந்தையின் வாயில்
அழகை உதிர்த்தது;
துடைத்து நின்ற அன்னையின் கையில்
அமுதம் ஆனது!
அழகு மங்கையின் இதழோரத்தில்
காதல் ஆனது;
துடைத்த போதில் அவனின் மனதில்
போதையானது!
பந்தியில் மேய்ந்த தொந்தியின் வாயில்
அருவருப்பானது;
துடைத்து நின்ற கையில்  வழிந்து
எச்சில் ஆனது!
தளர்ந்து நின்ற தாத்தனின் வாயில்
நோயும் ஆனது;
துடைத்து நின்ற பாட்டியின் கையில்
பரிவும் ஆனது!
சோறு எனும் ஈரெழுத்து
ஒற்றையானது;
பலபலவாய்க் குணம் காட்டும்
பருக்கையானது.

Sunday, April 2, 2017

கானப் பறவை


உருவொன்றும் வேண்டாம்
கனவொன்றே போதுமென்றால்
காற்றைக் குடித்துத்
தாகம் தீர்க்குமோ
கானப் பறவை?

மதியொன்றும் வேண்டாம்
மந்திரமே போதுமென்றால்
கம்பளத்தில் பறந்து
வாழ்க்கையைத் தேடிடுமோ
சாதகப் பறவை?

மலரெதுவும் வேண்டாம்
மதுவொன்றே போதுமென்றால்
அமர்வதற்கு இடம்தேடிச்
சந்திரனைக் கொணர்ந்திடுமோ
தேன்சிட்டுப் பறவை?

மண் எதுவும் தேவையில்லை
வானமே போதுமென்றால்
காதலியைத் தேடிச்
சூரியனில் புகுந்திடுமோ
காதல் பறவை?

பணம்ஒன்றே போதுமெனப்
பரிதவித்து வாழ்ந்திருந்துப்
பிணத்திலும் காசுவாங்கி
நிணம் அழுகி வீழ்ந்துபோய்ப்
பதவியே போதுமெனப்
போக்கற்று ஆகிவிட்டுப்
பரமனின் அடிதேடித்
தலைகீழாய்த் தொங்கிடுமோ
வாழ்க்கையெனும் வௌவால்?

Saturday, April 1, 2017

இடம் மாறும் உலகம்

இரண்டும் இடம் மாற
மனதினிலே பரிவு வரும்
இதயத்திலே காதல் வரும்

எங்கெங்கோ இடம் மாறும்
எண்ணங்களால் துயரம் வரும்
ஆசைகளால் மோசம் வரும்

கால்கள் தடுமாற
தள்ளாமை தேடி வரும்
காலம் தடுமாற. . . . .
காலமானார் செய்தி வரும்!

Friday, March 31, 2017

எனது தொன்மம்

எனது தொன்மத்தின் மீதேறி
புராணங்கள் வந்தாலும்
தாங்கிக் கொள்கிறேன்.
என்ன செய்ய?
அங்கே என்,
பண்பாடு அல்லவோ
உறக்கத்தில் உள்ளது;
தூசிதட்டி எழுப்பும் வரை
தாங்கித்தான் ஆகவேண்டும்!

எனது எண்ணத்தின் மீதேறி
சுயத்தை மழுங்கடிக்கும்
பாசுரங்கள் வந்தாலும்
வாசித்து மகிழ்கிறேன்!
என்ன செய்ய?
தேம்பாக்கள், திருமுறைகள்,
சீறாக்கள், பாசுரங்கள்
அனைத்திலும் என்
இனிய தமிழ் அல்லவோ
உள்ளீடாய் உள்ளது!
எப்பொருளாயினும்
மெய்ப்பொருள் கண்டிடவே
வள்ளுவன் தந்தானே
வழி எனக்கு!

கீழடியைத் தோண்டியபின்
மண்மூடிப் போனவனை
மனது வெறுத்தாலும்
மன்னித்து அழைக்கிறேன்!
என்ன செய்ய?
மண்ணுக்குள் இருப்பது
மண் ஓடு மட்டுமல்ல;
உலகின் மூத்தகுடி நானெனும்
சிந்துவெளி நாகரிக நீட்சியதன்
உயிர்ப் புதையல்
உண்டெனவே!

வன்மம் எனக்கில்லை, எனக்கு
வன்முறையில் நாட்டமில்லை;
வஞ்சனை என்றுமில்லை;
பேடியே!
துஞ்சுபவன் நானல்ல;
தூய உயர் பண்பாடு
எனக்குண்டு!
நேரெதிரே வந்துபார்
வீரம் என்னவென்று
உலகுக்கே உணர்த்திடுவேன்!

Thursday, March 30, 2017

சுட்டெரிக்கும் சூரியன்

வெறிச்சோடிய வீதியில்
பசிநேர விலங்கென
வெயில் தன்னந்தனியே
உலாத்திக்கொண்டிருந்தது!

சொறிபிடித்தத் தேகமென பனைகள்
சொல்லொணா சோகத்தில்;
அலைகின்ற காற்றும் அலைகடலும்
கலையாத மவுனத்தில்!

நீர் நீர் என்று அலைந்த
காற்றின் முகத்தில் கானல் நீர்;
தீயில் உருகி ஓடும்
ஒற்றைக் கோடுகளாய்த்
தார்ச் சாலைகள்!

தாங்கமுடியவில்லை எனச்
சூரியனும்
சூடு போக்கி உடல் குளிர
மலை தேடி மறைந்து
மேல்கடலில் மூழ்கிப் போனான்!

Sunday, March 26, 2017

உழைத்துப் பிழைக்கணும்

குடிகாரக் கணவன்:
ஊரெல்லாம் மகிழ்ந்திருக்க,
     உறவெல்லாம் சேர்ந்திருக்க,
ஊரெங்கும் கொண்டாடும்
உற்சாகப் பானமடி;
ஊக்கமோடு நான்உழைக்க
     அரசுதரும் பானமடி;
ஊக்கிவிடும் நம்அரசு
     ஊருக்கே  சேமமடி!

மனைவியின் கவலை:
விளைந்துவரும் கடலைச்செடி
     கால் அடியும் ஓங்கவில்லை;
களையெடுக்க நாளாச்சு
     கைக்காசும் போயாச்சு
விளையாது போய்விட்டால்
     விடியாமல் போய்விடுமே
விளையாட்டு கொள்ளாமல்
     உழைக்கவா மச்சானே!

தேறுவானோ இவன்?
பிச்சைக்கார வேடம்போட்டும்
     பத்துகாசு தேறலியே
எச்சிலிலை தொடப்போனா
     நாய்கூட பொறுக்கலியே
மிச்சமேதும் கையிலானால்
     மறுக்காமல் தந்துவிடு
சச்சரவு பண்ணாதே
     சுருக்கா நான்வந்திடுவேன்.

மனைவியின் கோபம்:
கொடுத்தக்காசு கரியாச்சு
     கொண்டதெல்லாம் கோலமாச்சு
அடுத்தஅடி வைக்குமுன்னே
     எட்டுஅடி இறங்கியாச்சு
கெடுப்பதெல்லாம் அரசுஎன்றால்
     கேடுவேறு என்னவாச்சு?
விடுப்பதெல்லாம் ஒன்றேதான்
     ஒழியட்டும் தீயரசு!

குடிகாரன் பேச்சு:
எல்லாமும் தந்தாங்க
     இலவசமாய்த் தந்தாங்க
நல்லாதான் நாம்வாழ
     நாலுகாசும் தந்தாங்க
பொல்லாத நேரத்தால்
     போக்கற்றுப் போனோம்நாம்
நல்லநேரம் வந்துவிட்டால்
     நாமகூட வாழ்ந்திடலாம்!

மனைவியின் அறிவுரை:
வளமெல்லாம் தானேவரும்
     வேலைசெய்ய மனதிருந்தால்!
வளமான நேரம்வரும்
     வாழும்வழி புரிஞ்சிருந்தால்!
அளவில்லா சூழ்ச்சிசெய்து
     அத்தனையும் சுரண்டுகின்ற
களவாணிக் கூட்டமதைக்
     கூண்டிலிடும் நேரம்வரும்!

என்ன நடந்தது?
கைகொட்டிச் சிரிப்பதற்குக்
     கையிரண்டு வேண்டாமா;
கையொன்றாய் அரசிருக்க
     குற்றவாளி நானாகூறு!
குடிவாழக் கொடுத்ததெலாம்
குடிக்கவும் போதலையே;
குடிமூழ்கிப் போனமாயம்
     கொஞ்சமும்தான்  புரியலையே

புரியும் வழி பார்:
விளைத்தவன் தன்பொருளை
விலைவைக்க உரிமையில்லை;
விளைநிலத்தில் ஊறுகின்ற
      நீரகூடச் சொந்தமில்லை;
இலவசங்கள் தந்துவிட்டு,
     ஏய்த்துஉடல் வாழ்ந்துவிட்டு,
சிலவற்றைக் கொடுத்துவிட்டு,
     சீரழித்தார் புரிந்துகொள்ளு!

இனி(து) வாழ்வோம்!
அரசுஇடும் திட்டங்கள்
அத்தனைக்கும் கணக்குவேண்டும்!
அரசியலில் அனைவருமே
     தன்காசில் வாழவேண்டும்!
உரம்கொண்டு உழைப்பவனே
உயர்வாக இருக்கவேண்டும்!
தரமான வாழ்வினையே
     தரணியுளார் பெறல்வேண்டும்!

    

    

    
   

    

Friday, March 24, 2017

கவி வாழ்க!

அழகைப்
பார்ப்பவன்  ரசிகனாகிறான் ;
அறிந்தவன் அன்பைத் தருகிறான்;
ஆராதிப்பவன் கவிஞனாகிறான்!

அவலத்தை
ஏற்பவன் கோழையாகிறான்;
எதிர்ப்பவன் புரட்சி செய்கிறான்;
உணர்பவன் கவிஞனாகிறான்!

உலகைப்
புரிந்தவன் வாழ்கிறான்;
புரியாதவன் சாகிறான்;
போற்றுபவன் கவிஞனாகிறான்!

மாற்றத்தை
ஏற்பவன் ஏற்றம் பெறுகிறான்;
மறுப்பவன் ஏமாளியாகிறான்
கடப்பவன் துறவியாகிறான்;
கையிலெடுப்பவன் கவிஞனாகிறான்!

கடவுளை
ஏற்பவன் ஆத்திகனாகிறான்;
எதிர்ப்பவன் நாத்திகனாகிறான்;
உணர்பவன் ஞானியாகிறான்;
படைப்பவன் கவிஞனாகிறான்!

Wednesday, March 22, 2017

தில்லியில் எம் மூத்தகுடி

வளம் போச்சு - தமிழர்
நலம் போச்சு!
உடைஞ்சுபோன மனசாலே - நானூறு
உயிரும் போச்சு;
உடைமையெல்லாம் போனபின்னே
மானம்மட்டும் தங்கிப்போச்சு!
நீரெதுவும் இல்லாமல்
நிலமெல்லாம் காஞ்சிபோச்சு
விட்டகுறை தொட்டகுறை
அத்தனையும் பட்டுப்போச்சு!

தில்லியில் எமது
மூத்தகுடி விவசாயி
வெட்ட வெளியிலே
வெற்றுத் தரையிலே
வென்றெடுக்கும் வென்சமரை
வெற்றிகொள்ளும் முனைப்பிலே
சுட்டெரிக்கும் வெயில்தாங்கி
சுகம்போக்கும் குளிர்தாங்கி
மனதிலே  உரமேற்றி
உடலிலே உயிர்தேக்கி
உன்னதமாய்ப் போராடுகிறான்!

ஓட்டு எனப்பேரிட்டு
இட்ட பிச்சையிலே
பாராளு மன்றத்திலே
பாங்குடனே அமர்ந்துகொண்டு
கீழ்மேலாய் வீடுகட்டி
குளிருகின்ற காரெடுத்து
ஏரெடுத்துப் பாராமல் - நீ
எட்டிஎட்டிப் போவாயோ?
கடந்தும் செல்வாயோ - எமைக்
கண்டும் காணாமலும்?

பொறுமைஇன்னும் போகவில்லை
புரிந்துகொள் எம்வலியை!
இல்லையேல்,
எங்கள் கலப்பை இனி
உழுது புரட்டாது மண்ணை
உழுது புரட்டும் - உன்
புரட்டு அரசியலை!

எழும் எமது வீரகரம்
தொழும் இந்த வையகமே!

வலி = துன்பம், வலிமை.

Monday, March 20, 2017

தமிழர் விளையாட்டு


மாலைநேரம் வந்தாச்சு
     பள்ளிக்கூடம் விட்டாச்சு
மான்போலத் துள்ளித்துள்ளி
     வீட்டுக்கும் வந்தாச்சு
ஆசையோடு அம்மாதந்த
     அடைதோசை தின்னாச்சு
ஆரவாரக் கூச்சலோடு
     ஆலமரம் வந்தாச்சு!

பாண்டி:

எட்டடிக்கு நாலடியில்
     எட்டுக்கட்டம் போட்டாச்சு
ஒட்டாஞ்சில் எடுத்துவந்து
     வட்டமாக்கி வச்சாச்சு
அட்டில்லை பாங்கியரே
     பாண்டியாட வாருங்கள்
சுட்டிகுட்டி எல்லோரும்
     சுற்றிநின்று பாருங்கள்!

பச்சைக்குதிரை:

வரிசையிலே ஒருவனைத்தான்
     குதிரையெனக் கொள்ளவேணும்
சிறுவரெல்லாம் முதுகுதொட்டு
      குதிரையைத்தான் தாண்டவேணும்
வரிசைஒன்று முடிஞ்சதுமே
      உயரமதைக் கூட்டவேணும்
சிறுவன்யாரும் தாண்டலைனா
      குதிரையாக மாறவேணும்!

குள்ளமணி முன்னால்வந்து
     குனிந்தபடி நிற்கிறான்
குண்டுமணி ஓடிவந்து
     குதிரைமேல விழுகிறான்
கைஉதறிக் கால்உதறிக்
     குள்ளமணி வையுறான்
கைச்சூப்பும் பிச்சுமணி
     கலகலன்னு சிரிக்கிறான்.

கிளியந்தட்டு:

நாற்பதுக்கு இருபதடி
     நாலிரண்டு தட்டாச்சு
நான்குபேர் கைவிரித்து
     மறிப்பதற்கு நின்னாச்சு
எட்டித்தொடும் கிளியொன்று
     கோடெங்கும் ஓடிவர
எதிரணியில் ஐந்துபேர்
     எல்லைதொடும் கிளித்தட்டு.

தப்படித்துக் கிளியோட்டும்
     குறிஞ்சிநிலக் கொல்லையிலும்
உப்பெடுக்க அளங்களிலே
      நீர்பெருக்கும் நெய்தலிலும்
வரப்புயர நீர்பாய்ச்சும்
     மருதநிலம் காணுகின்ற
ஒப்பில்லா உழைப்பே
     ஓடியாடும் கிளித்தட்டு!

தட்டாங்கல்:

எடுப்பான ஏழுகல்
     தரையிலே வீசியாச்சு
அடுத்தகல் அலுங்காமல்
     ஒருகல் எடுத்தாச்சு
எடுத்தகல் மேல்வீசி
     தரைகல் ஒன்றெடுத்து
விடுத்தகல் எடுத்தகல்
      ஒருகை அடக்கமாச்சு!

எடுக்குங்கல் இரண்டிரண்டாய்
     எண்ணிக்கை கூடலாச்சு
தொடுப்பாக ஆறுகல்லும்
     ஒன்றாகப் பிடிச்சாச்சு
விடுகின்ற ஒருபணமும்
     இருமூன்றாய் சேரலாச்சு
எடுத்தாண்ட உவமானம்
     தட்டாங்கல் ஆட்டமாச்சு!

ஆடிடுவோம்:

கிட்டிப்புள், உப்புமூட்டை,
     கண்பொத்தி, கோலிக்காய்.
பட்டம் விடு,  பல்லாங்குழி,
     கிச்சுகிச்சு தாம்பாளம்,
வெட்டும்புலி, மரம் ஏறி,
     குலைகுலையாய் முந்திரிக்காய்
தொட்டுப்பிடி என்பதெலாம்
     தமிழர்தம் விளையாட்டே!

அத்தனையும் ஆடிடுவோம்
      ஆனந்தம் அடைந்திடுவோம்!
நித்தநித்தம் விளையாடி
      நலமனைத்தும் பெற்றிடுவோம்!
வித்தைபல கற்றிடுவோம்
      வீரமுடன் வாழ்ந்திடுவோம்!
  எத்திசையும் வென்றெடுக்கும்
      தமிழரென உயர்ந்திடுவோம்!

Thursday, March 16, 2017

தேவை இளநீர்பளிச்சென்ற வண்ணங்களில்
பளபளக்கும் போத்தல்களில்
குளிர் நச்சுப் பானங்கள்
மது, மதி, கணேஷ், கரன், தீபம்
என பலபல பேர்களில்
ஆர் கே நகர் கடைகளில்
விற்பனை!
தேவையில்லை இவையெதுவும்!

எங்கள் தாகம் தீர்க்க
எஙகளுக்குத் தேவை
இளநீர் மட்டுமே!

Saturday, March 11, 2017

சுத்தம் யாருக்கு?


சுத்தமான உடை
இதமான மாலைக்காற்று
நடைபயிலும் பூங்கா சற்று தூரத்தில் . . .

வழியில் வழக்கமான தெரு
நாய்கள் குரைத்தன;
கூட்டு சேரந்தன;
சுற்றி வளைத்தன;
தெருவில் அந்நியனாய் சுத்தம்!

தேர்தல் முடிவு
ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது;
யாருக்கு வேண்டும் சுத்தம்?

Saturday, March 4, 2017

வீரத் தமிழ்

தத்தத் தரிகிட தம்தம் தரிகிட
தித்தத் திரிகிட திம்திம் திரிகிட
                                                          (தத்தத்)
தொட்டுப் பாரடா கொட்டும் இடியடா
     வட்டப் பரிதியை சுட்டும் எரியடா!
முட்டப் பகையெனில் எட்டப் பாய்ந்திடும்
     கொட்டும் கைகளில் கோட்டை மண்ணடா!
                                                          (தத்தத்)
பட்டுத் தெறித்திடும் கொட்டும் பனியும்
     சீற்றக் கனலில் சட்டென மறையுது!
எட்டப் பறந்திடும் எச்சல் காக்கையே
     வட்டப் புயலிது தொட்டுப் பாரடா!
                                                          (தத்தத்)
கொட்டும் மழையிலும் கோடை இடியிலும்
     வெட்டிப் பாய்ந்திடும் வீரத் தமிழடா!
எட்டுத் திசையிலும் வெற்றி எமதெனக்
     கொட்டி முழங்கிடும் வீரத் தமிழடா!
                                                          (தத்தத்)
முட்டி தெறிபட பிட்டி இடிபட
     எட்டிப் போய்விடு வருகுது தமிழ்படை!
கொட்டம் அடக்கிட பகையும் பொடிபட
     கொட்டு முழங்கிட வருகுது தமிழ்படை!
                                                           (தத்தத்)

Thursday, March 2, 2017

நெடுவாசல்

நெடுவாசல்
***************

வாடிவாசல் பாரடா துள்ளும்காளை கானடா
     நெடுவாசல் நானடா நேர்எனக்கு எவனடா?
கோடிகோடி வளமதைக் கொட்டித்தரும் வயலடா
     நாடிவந்த தாரடா நாடுவிட்டு ஓடடா!    
                                                                             

எரிவாயு தேடியா என்நிலத்தில் அலைகிறாய்
     என்னைநீ பாரடா எரிவாயு நானடா!
ஊர்மாற்றி ஒருவேசம் பேர்மாற்றி ஒருவேசம்
        என்றென்றும் பொருத்தமே சரியுனக்கு நரிவேசம்!
                                                                             

தோட்டாவைப் பாயவிட்டுக் கூடவே விஷமுமிட்டு
     முட்டாளே நீவந்து மீதேனை எடுப்பாயோ
பாட்டன்நிலம் தொட்டுவிடப் பட்டாவா தந்திட்டோம்
     எட்டிஉதை விட்டால் இமயத்தில் விழுந்திடுவாய்! 
                                                                             

முப்போக மண்ணடா முக்கனியும் தருமடா
     எப்போதும் வென்றிடும் தமிழன்தன் வீரமடா
இப்படையை வென்றிடவே எப்படையும் இங்கில்லை
     இப்போது நெடுவாசல் முப்போதும் தமிழ்வாசல்!
                                                                           

Wednesday, March 1, 2017

காக்கும் கரங்கள்!


புறவிருந்து நோக்கி வரஇருந்து காத்துப்
     பெண்ணாய்ப் பிறந்ததனால்,
பிறந்தஇடம் வாழ்த்தப் புகுந்தஇடம் போற்றப்
     பொறுமை காத்திடுவர் - பெண்கள்
     பொறுமை காத்திடுவர்!

வரவிருந்தால் சேமித்துக் குறையிருந்தால் நிறைவித்துக்
     குடும்பத்தைக் காத்திடுவர்;
வரவில்லாப் பொழுதினிலே சேமிப்பைத் தந்துதவி
     உற்றுளி உதவிடுவர் - பெண்கள்
     உற்றுளி உதவிடுவர்.

குன்றாப் புகழுடைய மாதர் பலருண்டு
     கொண்டாடும் குணமுமுண்டு;
பொன்றாத் துணையாய்க் கொண்டவர்பால் நின்று
     பொருந்தி வாழ்ந்தனரே - இசைபடப்
     பொருந்தி வாழ்ந்தனரே!

அறவழியும் சத்தியமும் காத்துநின்ற காந்திக்கும்
     முன்வடிவு யாரென்பீர்?
அறம்காத்தத் தில்லையாடி வள்ளியம்மை அறிவீரோ?
     அறம்காத்து உயிரிழந்தார் - மாண்பின்
     அறம்காத்து உயிரிழந்தார்!

விஞ்ஞானம் கைக்கொள்வர் விண்ணையும் சாடிடுவர்!
     எல்லையில் அச்சுறுத்தும்
அஞ்சலர் வெருண்டோட ஆயுதமும் கைக்கொண்டு
     வீரம் விளைக்க வந்தார் - குன்றா
     வீரம் விளைக்க வந்தார்.

போக்கிட மில்லாமல் பெண்ணில்லை காண்பீர்!
     புறங்காணல் என்றுமிலை;
போற்றும் நீதியினால் புவியாள வந்துற்ற
     பெண்கள் உயர்ந்தவரே! - என்றும்
     பெண்கள் உயர்ந்தவரே!

சட்டங்கள் திட்டங்கள் அத்தனையும் ஆளவந்தார்;
     சாற்றும் நெறிகண்டு,
பட்டங்கள் பலபெற்று பாரினில் ஓங்கிநின்றார்;
      வாழிய வாழியவே!- பெண்கள்
      வாழிய வாழியவே!

ஏறுதழுவு! போராடு!

இனி
தமிழச்சி தாய் தன் மகனுக்கும் மகளுக்கும்
புத்தகக் கூட்டினிலே
வெயிலுக்குக் குடையும் குளிருக்குப் போர்வையும்
கட்டாயம் எடுத்து வைப்பாள்!
தமிழர்தம் நலம் காக்கப்  பிள்ளைகள் தயார்
எந்நாளில் எப்பொழுதில்
போராட்டம் தொடருமென யாரறிவார்?

கலிங்கத்துப் பரணியின்
   காளியாய்த் தலைவிரித்து
   ஊழலும் லஞ்சமும்
   பேயாய் ஆடினவே!
பொய்யையும் புளுகையும்
     வெள்ளுடையில் மறைத்து
     அரசியலும் ஆளுமையும்
     பகட்டாய்ப் வந்தனவே பவனி!
அவர்கள்
சில காதம் போவதற்கும்
பல நூறு வாகனங்கள்!

பொய்சொன்ன வாய்க்குப் போசனமும் கிடைக்காமல்
மாத்திரையே உணவாக மூன்று நேரம் உண்டாலும்
மெய்யே சொல்வதில்லை என்று
அரிச்சந்திரன் தலையில் கைவைத்துச்
சத்தியம் செய்தவர்கள்
மாண்புமிகு சிறுமக்கள்!

கீழடியைத் தோண்டினார்கள்
ஒளிர்ந்தது எங்கள் தமி்ழர் பண்பாடு!
அடடா அது
சிந்துவெளி நாகரிக
நீட்சி என்றறிந்த சூழ்ச்சி மனிதர்கள்
மண் ஓடு மட்டும் கிடைத்ததென்று
மண் மூடிப் போனார்கள்
அரிக்கமேடும் ஆதிச்சநல்லூரும்
நொந்த கதை இதே கதை!
ஆனாலும்
பண்பாட்டுக் காளை வெளியில் போந்தது
இருண்டவர் கண்ணும் அறியாமல் போயிற்று!

தைப்பொங்கல் வந்தது!
தமிழர் வாழ்வு பொங்காமற் போயிற்று.

சொட்டு நீரும் தராதவனுக்கும்
அள்ளி அள்ளிக் கொடுத்தனர் மணலை;
கர்ப்பத்தையும் சுரண்டும் கயவர் கூட்டம்!
வற்றாத பரணி வாடி நின்று போயிற்று
பாலாறு முழுமையும் பாழாறாயிற்று
வையை வறண்டது
காவிரியும் கைவிரித்தது;
உழவர்கள் மாண்டார்கள்!
சிலர் மானமே பெரிதென்று
நான்று நின்று போனார்கள்!

பாவம்!
காளைக்கும் ஏன் சோகம்?
கூடப்பிறந்தவன் அவனாவது
துள்ளிக் குதிக்கட்டும் என்று
வாடிவாசல் நாடினர்;
பண்பாடு குலைக்கவே திட்டமிட்டப் பீட்டாவின்
சட்டம் காட்டித் தடுத்தது அரசு!
தடி கொண்டு விரட்டித்
தாக்கியது காவல்துறை!

அடேய்ய். . . !
மார்தட்டி எழுந்தது மாணவர் படை;
தோள்கொட்டிக் கிளம்பியது இளைஞர் படை;
எண்திசையும் அதிர்ந்தது;
ஏழுலகும் வியந்தது!

அன்றொரு நாள்,
போரில் உயிர் நீத்தார் கணவன்
எனக்கேட்ட தமிழச்சிதாய் தன்
மகனுக்கும் பூச்சூடித் தலைவாரிக்
களம்கான அனுப்பிச்
சூளுரைத்து நின்றாளே!

இன்று அவள்,
பாலகன் உண்டே கையில் என
அவனையும் இடுப்பில்கொண்டுப்
பண்பாடு காக்கவென்றே
புயலாய்க் களம் புகுந்தாள்!

இப்படையை
எப்படைதான் வெல்லுமென்று
மேகத்துள் மறைந்து
பகலெல்லாம் ஓடிப் போந்தான் பகலவன்::
இரவினிலே விண்மீன்கள்
தமிழகத்தின் திசையெங்கும்
தரையினிலே வீழ்ந்த கதை
வியனுலகம் கண்ட
விந்தைக் கதை ஆனதே!

ஒன்றே எங்கள் இலக்கு என்று
எழுந்தது பார் இளைஞர் படை!
ஏறு தழுவுதல் எம் உரிமை!
வாடிவாசல்  திறக்கட்டும்!
காளைகள் சீறிப்பாயட்டும்!- அதனை
எங்கள் கைகள் தழுவட்டும்!

கேட்டதை மறுத்தார் மாண்பு இலார்;
சீப்பினை மறைத்திட்டால்
சீரிய திருமணம் நிற்குமென
வாடிவாசல் மறைத்திட்டார் பேடியர்.

அடடா!
செம்பருதிச் சுடரைக் கையால் தடுத்தவர்போல்
கருகிப்போய் வீழ்ந்தனர் கடையர்;
சூரியனைக் கண்டு
நாய்போல் குரைத்தவரும் சிலருண்டு.

எமக்கு,
நாட்கள் ஒரு கணக்கல்ல;
தடையேதும் பொருட்டல்ல;
நேர் எதிரே நிற்க வல்ல
நரன் எவனும் பிறக்கவில்லை!

வீரம் விளைந்தது!
அகிலமெங்கும் தமிழர்
ஆர்ப்பரித்து நின்றனர் ஆயினும்
அறவழி கொண்டனர்.

வாகனம் எரிந்து
மூவர் யாரும் சாகவில்லை;
அலுவலகம் எரிந்து
வெள்ளுடைகள் அழியவில்லை;
செல்லும்பாதைத் தடுக்கவில்லை;
குருதி ஏதும் சிந்தவில்லை;
குற்றங்களோ இல்லவே இல்லை!

உலகம் கண்டதுண்டா
இப் புரட்சி இந்நாளில்!
அறவழி உதவாதெனக் கூறியவர்
வாயடைத்துப் போனாரே!

இதோ!
விடியல் தெரிகின்றது!

தினம் தினம் சூரியன்
உதித்தெழும் நாடு
தமிழ்நாடென்று
சங்கே முழங்கு ! - வெற்றிச்
சங்கே முழங்கு!
வாழ்க தமிழ்!  வெல்க தமிழர்!

இவனும் உழவனே!

கோட்டை விதைப்பாட்டில்
     ஏழுகடல் நீர்தளும்ப
எட்டுஊர்க் காளைகளும்
     ஏர்தாங்கி உழுதுவர
மட்டில்லாக் கானம்
     மருதக் குயில்பாட
பெட்டைமயில் ஆணுடனே
     தோகை விரித்தாட

விளைந்த நெல்மணிகள்
     கோபுரமாய்க் குவிந்துஎழ
ஓஹோ ஹோவென்று
     ஊரார் ஆர்ப்பரிக்க
தேவதைகள் வந்து
     தலைமேல் பூப்போட
தூக்கம் கலைந்து
     அண்ணாந்து பார்த்தால்

மருத இலை பறிக்கும் மந்திஒன்று பல்லிளிக்க
கனவெல்லாம் கலைந்து நினைவும் திரும்பியதே!

மேய்ச்சலுக்கு விட்டகாளை
     எங்கென்று கண்நோக்க
நட்டநடு வயலில்
     மேய்ச்சல் காளையது
இட்டம்போல் தலையாட்டி
     ஊரான் பயிர்மேய
ஓஹோஹோ எனக்கூறி
     வயல்காரன் கல்லெறியக்

களைபறிக்கும் பெண்டிரெல்லாம்
     கைகொட்டிக் கூச்சலிட;
காளையதும் ஓடியது;
     கட்டில்லாமல் ஓடியது!
உச்சைக்கு உறக்கம்
     உழவனுக்கு ஆகாதென்று,
உழவனும் ஓடிப்போனான்
   காளைசென்ற வழிதேடி!