எனது தொன்மத்தின் மீதேறி
புராணங்கள் வந்தாலும்
தாங்கிக் கொள்கிறேன்.
என்ன செய்ய?
அங்கே என்,
பண்பாடு அல்லவோ
உறக்கத்தில் உள்ளது;
தூசிதட்டி எழுப்பும் வரை
தாங்கித்தான் ஆகவேண்டும்!
எனது எண்ணத்தின் மீதேறி
சுயத்தை மழுங்கடிக்கும்
பாசுரங்கள் வந்தாலும்
வாசித்து மகிழ்கிறேன்!
என்ன செய்ய?
தேம்பாக்கள், திருமுறைகள்,
சீறாக்கள், பாசுரங்கள்
அனைத்திலும் என்
இனிய தமிழ் அல்லவோ
உள்ளீடாய் உள்ளது!
எப்பொருளாயினும்
மெய்ப்பொருள் கண்டிடவே
வள்ளுவன் தந்தானே
வழி எனக்கு!
கீழடியைத் தோண்டியபின்
மண்மூடிப் போனவனை
மனது வெறுத்தாலும்
மன்னித்து அழைக்கிறேன்!
என்ன செய்ய?
மண்ணுக்குள் இருப்பது
மண் ஓடு மட்டுமல்ல;
உலகின் மூத்தகுடி நானெனும்
சிந்துவெளி நாகரிக நீட்சியதன்
உயிர்ப் புதையல்
உண்டெனவே!
வன்மம் எனக்கில்லை, எனக்கு
வன்முறையில் நாட்டமில்லை;
வஞ்சனை என்றுமில்லை;
பேடியே!
துஞ்சுபவன் நானல்ல;
தூய உயர் பண்பாடு
எனக்குண்டு!
நேரெதிரே வந்துபார்
வீரம் என்னவென்று
உலகுக்கே உணர்த்திடுவேன்!