அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Saturday, February 25, 2017

கொக்கென்று நினைத்தாயோ?

       ( கொச்சகக் கலிப்பா)

மருதநில உழவரெல்லாம்
     மழைகண்டு இன்பமுற
எருவதனை நிலத்திலிட்டு
     ஏரோட்டி விதைவிதைக்க
மருதநிலச் சிறுவரெலாம்
     வரப்பினிலே கூடிவர
அருள்வளரும் வேளாண்மை
     மகிழ்வோடு நடந்ததுவே!

உளைவாழ்ந்த நண்டொன்று
     குடுகுடென்று ஓடிவர
வளைபாந்தில் ஏதுமற்று
     எலிஉணவு தேடிவர
அளைபோந்த அரவமதும்
     ஆசையுடன் ஊர்ந்துவர
கிளைதாண்டி மயிலதுவும்
    குதித்தோடி வந்ததுவே!

குழிநண்டைக் கண்டஎலி
     கூர்பல்லால் கவ்விவர
வழிகண்டு கட்செவியும்
     எலியதனை வவ்விவர
விழிகொண்டு பார்த்தமயில்
     உரகமதைக் கொத்தியெழ
பழிகொண்டு வேளானும்
     மயில்கல் எறிந்தனனே!

தலைநேரே வந்தஇடர்
     தோகையொடு போனதென
நிலைமாறிப் பாம்பதனை
   பறக்கையிலே விட்டுவிட
பொத்தென்று விழுந்ததுவே
     பாம்புசிறு வன்தலையில்
நச்சென்று நண்டுவிழ
     எலிவிழுந்த தொருதலையில்  !

திண்ணென்று சிறுவருமே
     திடுக்கிட்டு ஓடைவிழ
கண்தூக்கம் கலைந்திட்ட
      கருமேதி நீரில்எழ
வன்முதுகின் மேலிருந்த
     கொக்கதுவும் பறந்துஎழ
கண்மயில்தான் சென்றவழி
     வெண்கொக்கும் பறந்ததுவே!

களப்பயிற்சிப் பெறவந்து
     கண்டுநின்ற மாணவரும்
களக்குறிப்பு நூலதனில்
     கச்சிதமாய் எழுதிநின்றார்
கொக்கென்றால் அச்சம்கொண்டு
      கானமயில் பறந்தோடும்'
அக்கறையாய் மாணவியர்
     அதுவும்தான் எழுதினரே!
    

Friday, February 24, 2017

இருபான் இமயம்

வீரர்:
என்நாடு என்றுரைத்தல்
     இறுமாப்புக் குரலாகும்
எம்நாடு என்றிருத்தல்
     இறும்பூதும் செயலாகும்
நம்நாடு என்றோதல்
     நறும்பூவாய் மணம் வீசும்
நமக்கெதிர் எவரென்று
     நம்நாடு காததிருப்போம்!

மக்கள்:
கண்துஞ்சாப் படைவீரர்
     கடுங்குளிரில் காத்திருக்க
மண்மீது குடியெல்லாம்
     மனமொப்பி வாழ்ந்திருக்க
பட்டாளக் குடிலிலே
     பனிமூடிப் போனதென்று
கேட்டறிந்த சேதியினால்
     கேடுற்றுப் போனோமே!

நாடு:
போனவர் போகவில்லை
     பனிமலையில் மாளவில்லை
வானவர்போல் எமது
     மனத்துள்ளே வாழ்கின்றார்!
தீரர் அவர் வீரம்
     தந்தாரெம் குழந்தைக்கும்
பாரதம் காத்த அவர்
     பல்லாண்டு வாழியவே!

: : 6-2-2017 அன்று
இமய பனிச்சரிவில்
வீரமரணம் அடைந்த
எமதருமை இருபது
வீரர்களுக்கு அஞ்சலி.

ஃபாத்திமா

அன்புச் சோதரியே இசுலாம் பெண்மணியே
அன்று  நடந்ததைக் கேட்பாய் மனதுடனே!

உலகெலாம் போற்றும் வீரம் அருகிருக்க
உலகமே வாழ்த்தும் மாதரசி நோயில்விழ

பலகாரம் வேண்டுமா தேவையெனில் சொல்வாய்.
பலகாலும் கேட்டதுதான் இப்போதும் கேட்கின்றேன்!

கடமையில் கண்நோக்கிக் கனிவுடன் அலிகேட்க
பதமாக மறுத்திட்டார் பெண்ணரசி பாத்திமா

நாமிருவர் மனமொப்பி நிக்காஹ் நடக்கையிலே
எந்தை முஹம்ம்மது(ஸல்) ஒன்றிதனை உரைத்தார் :

'மனம் எண்ணிப் பார்த்ததெல்லாம்
   மட்டற்று தரக் கேட்டு 
மனைவியின் ஹக்கை நிறைவேற்றாக்
     கணவனெனப் பேரெடுக்க வொண்ணாதே!

கண்ணிய இறைவனை என்றென்றும் நாடு!
கருணையில் தருவதை உளமோடு நாடு!'

எதிலும் மேலாக என்னுள்ளம் கொண்ட
இதுவே எம்தந்தை உரைத்திட்ட உண்மை!

கனிவோடு நீர்கேட்ட அன்பெனக்குப் போதும்;
கடமையில் தவறாத உமதுள்ளம் போதும்!

நயமாக எடுத்துரைத்தார் நாயகத்தின் அன்புமகள்;
நானிலத்தின் மானுடர்க்கு நிகரற்ற அன்னையவள்!

பாஞ்சாலக்குறிச்சிச் சாலை

மாலை மயங்கி வர
   மனையாளும் கூட வர
மகிழுந்து ஊர்ந்த தம்மா
   பாஞ்சாலன் ஊர் தாண்டி!

பூமகள் கூந்த லிலே
   பூரண வகிடு போலே
வெட்ட வெளிக் காட்டில்
    நெட்ட நெடுக்காய்ச் சாலை!

பஞ்சுநிகர் மேகங்கள்
   பலவண்ணப் பட்டினிலே
மஞ்சள் வெளியினிலே
   மயக்கும் முகத்தினிலே
செஞ்சாந்து இட்டதுபோல்
   செம்பரிதி நின்றொளிர
நெஞ்சமெலாம் நெகிழ்ந்து
   நேரமெலாம் போனதுவே!

அம்மம்மா!
வானில்தான் வனத்தில்தான் நிலவில்தான் ஒளியில்தான்
   வனப்புக்குள் வனப்பத்தைத்தான் தீட்டிவைத் தானா;
தேனில்தான் தெங்கில்தான் கனியில்தான் கரும்பில்தான்
    இனிப்பில்தான் இனிப்பைத்தான்  ஊறவைத் தானா;
காவில்தான் ஒட்டைக்கும் நிலத்தில்தான் நெல்லுக்கும்
   கல்லில்தான் தேரைக்கும் நீர்வைத் தானா;
பூவில்தான் புள்ளுக்கும் புவியில்தான் தேனிக்கும்
   துளித்துளியாய் தேனைத்தான் உண்பித்தானா!

சக்தியிலே புத்தியிலே சாத்திரத்தின் நெறியினிலே
   சாற்றைத்தான் ஊற்றித்தான்  கொட்டிவைத் தானா
வித்தினிலே சத்தினிலே சத்தியத்தின் இருப்பினிலே
   வியனுலகின் வீரியத்தை  உள்வைத் தானா;
நி்த்திலத்தைச் சிப்பிக்கும் நித்திரையைத் தூயனுக்கும்
   சித்தமதைச் சித்தருக்கும் கற்பித் தானா?
பக்தியிலே பதம்தெளிந்து பட்டறிவின் வழிநடந்து
   பரமனைத் தொழுதெழுந்து வாழ்த்துவமே!

ஒற்றை வேலி

தளதளன்னு விளையும் போது
    வேலியொரு படை வீடு
விளையாத நிலத்திலது
    வெற்றுக் குறியீடு
வேலியைப் பிரித்து வந்தால்
வரகு வேகும் அடுப்பிலே
வாயாறக் குடித்து வைக்க
     வயிறு உண்டு வீட்டிலே
கனத்த மனம் உதறிக்
     காடு வந்தான் விவசாயி
ஒற்றை ஓணான் வேலியிலே
     ஒற்றை ஆளாய் விவசாயி

ஒருவர்க் கொருவர் உறவில்லை
ஒவ்வாத பகையுமில்லை - ஆனாலும்
ஓணான் ஓடுவதும்
ஒளிந்து நின்று பார்ப்பதுவும்
வேடிக்கை என்றும் விவசாயிக்கு

இன்று அது ஓடவில்லை
ஓட ஓர் இடமுமில்லை
காடெல்லாம் கரடாச்சு
மேடெல்லாம் தரிசாச்சு
மழை இல்லா மண்ணாச்சு
தழை எல்லாம் சருகாச்சு

நீரின்று அமையா உலகில்
யாரின்றுப்  போனான் உழவன்
ஏர் ஓடாக் காட்டினிலே
ஏதிலியாய் ஓணான்
தலையைத் தலையை ஆட்டித்
தாங்கா வேதனை காட்டியது!
துண்டு உதறித் தோளில் போட்டுத்
திரும்பி நடந்தான் விவசாயி!

நீரில்லா மனம்

ஒருகாணி  நெலமிருந்தும்,
     ஓட்டஓர்   ஏரிருந்தும்;
உள்ளத்தில  தெடமிருந்தும்,
     உழுதுபாக்க  மனசிருந்தும்;

மேக்கால  மலையிருந்தும்,
     கிழக்காலக்  கடலிருந்தும்;
பேய்மின்னல்  அடிக்கலயே,
     பெய்யும்மழ  பெய்யலயே!

சாடிவர  ஆறிருக்கு,
     சேர்த்துவெக்கக்  குளமிருக்கு;
சாரல்கூட  விழலியே,
     காராடும்  நனயலியே!

கேணியில   நீர்எறச்சி
     கேப்பைய  போட்டுவெச்சா,
யாருகண்ணு  பட்டிடிச்சோ
     ஆடுதின்னும்  தட்டையாச்சு!

பருத்திய  வெதச்சுவச்சி
     பஞ்சாகி  வருமின்ன,
குச்சியா  நின்னுபோச்சி
     கட்டுக்கட்டா  விறகாச்சு.

பயத்தம்  வெதவெதச்சு
     மஞ்சப்  பூப்பூத்துக்
காயாகி  வரும்போது
     கருகியே  போச்சுதையா!

கடனெல்லாம்  கெடப்புலதான்
     கண்டவனும்  நகைப்பிலதான்;
கால்வயிறு  அரைவயிற்றுக்
கஞ்சிகூடக்  கனவுலதான்.

வெள்ளாம  பாத்தவன்
     வெளங்காமப்  போனதுல
வெந்தபுண்ணு  வேதனயில்
     வேல்பாய்ச்சும்  அரசாட்சி!

Thursday, February 23, 2017

முடிவில்லாத் தொடர்வண்டி

கணகணன்னு
மணி உண்டு;
கூ கூவென்றுல
ஒலி  உண்டு;
கடைசிப்பெட்டியில்
பச்சைக் கொடியுண்டு!

கொடியும் அசைச்சாச்சு;
மணியும் அடிச்சாச்சு;
குப் குப் என ஓசையோடு
உயிருள்ள ரயில் வண்டி,
கடகடன்னு நகர்ந்தாச்சு!

சாட் பூட் த்ரீ கெலித்ததனால்
தேவகிதான் என்ஜின்;
ராமுவும் ரகுமானும் ஏசி பெட்டிகளாம்;
மாரியும் மேரியும் ஓசி பெட்டிகளாம்;
என்றும்போல் இன்றும்
வெள்ளையனே கார்டு
பச்சைநிறத் துண்டுத்துணி
பச்சைக் கொடியாச்சு.

அம்மாக்கள் அப்பாக்கள்
எல்லாரும் கூலியாட்கள்!
நாலுமாடிக் கட்டிடத்தில்
நாளெல்லாம் வேலை
உண்பதற்கே உழைத்தார்கள்;
ஊன்தேய்ந்து மாய்ந்தார்கள்!

எஞ்சினும் பெட்டியும்
என்றென்றும் மாறும்;
எல்லாருக்கும் ஒருநாள்
எஞ்சின் வாய்ப்பு வரும்;
கார்டு மட்டும் மாறவில்லை
வெள்ளையனும் சோரவில்லை!

வெள்ளையனே வா!
என்றென்றும் கார்டு என
ஏன் உனக்கு வேலை?
எஞ்சினாய் பெட்டியாய்
மாற ஆசை இல்லையா;
மனம் ஏதுமில்லையா?

என்ன ஐயா நீங்க,
எல்லோரையும் பாருங்க!
கிழிஞ்சிபோன சட்டையாச்சும்
மேலிலே இருந்தாதான்
பின்னால் உள்ள பெட்டி
கை கோர்க்க வசமிருக்கும்
எல்லோருக்கும் சட்டை உண்டு;
எனக்கு ஏது சட்டை?
அப்பன் ஆத்தா உழைச்சாதான்
அரை வயித்துக் கஞ்சி
ஏழைபாழை எங்களுக்கு
ஏதிருக்குது மிஞ்சி?

கண்கள் நீர் கோர்க்க
காயம்பட்ட  மனம் வேர்க்க
சாட்டையடி பட்டதுபோல்
சமைந்துப் போனேன் நான்!

அவன் இவனல்லன்

இவன்!
பொருள் கடந்தால் இழப்பு வரும்;;
மனம் கடந்தால் துக்கம் வரும்;
உடல் கடந்தால் படுக்கை வரும்;
உயிர் கடந்தால் இறப்பு வரும்!
இங்கே!
எத்தனுக்கும் காலம் வரும்;
எளியனுக்கு மோசம் வரும்;
சுழன்றுவரும் உலக மெல்லாம்
சூழ்ச்சிதானே மிகுந்து வரும்!

இவன்வேறு!
பொருள் கடந்தால் எளிமை வரும்;
மனம் கடந்தால் ஞானம் வரும்;
உடல் கடந்தால் அமைதி வரும்;
உயிர் கடந்தால் இருப்பு வரும்!
அங்கே,
புத்தனுக்கும் மெய்ம்மை தந்த
போதிமரம் நெருங்கி வரும்;
வித்தினிலே ஊறி நின்ற
உண்மையெல்லாம் தானே வரும்!

வழிப்போக்கன்

எள்ளில் பூவுண்டு நெல்லில் பூவுண்டு
     அத்திப்பூ கண்டதும் உண்டோ? - ஆயின்
     பூபூத்தே காய்காய்ப்ப துண்டு -  வாய்ச்
சொல்லில் பொருளுண்டு செயலில் பொருளுண்டு
     சோம்பலில் பொருளேதும் உண்டோ? - அவன்
     சோற்றுக்கும் படியளப்பார் உண்டு.

தூயனில் கனிவுண்டு துறவிக்கும் கனிவுண்டு
     தீயனுக்குக் கனிவேதும் உண்டோ? - அத்
     தீயனுக்கும் தாயின்கனி வுண்டு - மிக்க
பயனுடை பலவுண்டு பயனில சிலவுண்டு
     பூமியில் நிலையேதும் உண்டோ? - ஆயின்
     பூவுலகில் வீண்ஏது உண்டு?

சாத்திரம் பலவுண்டு சொல்லவும் பலருண்டு
     சத்தியம் மறைவதும் உண்டோ? - இங்குச்
     சச்சரவும் குறையாது உண்டு - பெரும்
பாட்டைத் தந்தவன் பதவுரை தரவில்லை
     பட்டெனப் புரியவழி ஏது? - போ!போ!
     பாரினில் உன்வழியைப் பாரு!