மாலை மயங்கி வர
மனையாளும் கூட வர
மகிழுந்து ஊர்ந்த தம்மா
பாஞ்சாலன் ஊர் தாண்டி!
பூமகள் கூந்த லிலே
பூரண வகிடு போலே
வெட்ட வெளிக் காட்டில்
நெட்ட நெடுக்காய்ச் சாலை!
பஞ்சுநிகர் மேகங்கள்
பலவண்ணப் பட்டினிலே
மஞ்சள் வெளியினிலே
மயக்கும் முகத்தினிலே
செஞ்சாந்து இட்டதுபோல்
செம்பரிதி நின்றொளிர
நெஞ்சமெலாம் நெகிழ்ந்து
நேரமெலாம் போனதுவே!
அம்மம்மா!
வானில்தான் வனத்தில்தான் நிலவில்தான் ஒளியில்தான்
வனப்புக்குள் வனப்பத்தைத்தான் தீட்டிவைத் தானா;
தேனில்தான் தெங்கில்தான் கனியில்தான் கரும்பில்தான்
இனிப்பில்தான் இனிப்பைத்தான் ஊறவைத் தானா;
காவில்தான் ஒட்டைக்கும் நிலத்தில்தான் நெல்லுக்கும்
கல்லில்தான் தேரைக்கும் நீர்வைத் தானா;
பூவில்தான் புள்ளுக்கும் புவியில்தான் தேனிக்கும்
துளித்துளியாய் தேனைத்தான் உண்பித்தானா!
சக்தியிலே புத்தியிலே சாத்திரத்தின் நெறியினிலே
சாற்றைத்தான் ஊற்றித்தான் கொட்டிவைத் தானா
வித்தினிலே சத்தினிலே சத்தியத்தின் இருப்பினிலே
வியனுலகின் வீரியத்தை உள்வைத் தானா;
நி்த்திலத்தைச் சிப்பிக்கும் நித்திரையைத் தூயனுக்கும்
சித்தமதைச் சித்தருக்கும் கற்பித் தானா?
பக்தியிலே பதம்தெளிந்து பட்டறிவின் வழிநடந்து
பரமனைத் தொழுதெழுந்து வாழ்த்துவமே!