ஒருகாணி நெலமிருந்தும்,
ஓட்டஓர் ஏரிருந்தும்;
உள்ளத்தில தெடமிருந்தும்,
உழுதுபாக்க மனசிருந்தும்;
மேக்கால மலையிருந்தும்,
கிழக்காலக் கடலிருந்தும்;
பேய்மின்னல் அடிக்கலயே,
பெய்யும்மழ பெய்யலயே!
சாடிவர ஆறிருக்கு,
சேர்த்துவெக்கக் குளமிருக்கு;
சாரல்கூட விழலியே,
காராடும் நனயலியே!
கேணியில நீர்எறச்சி
கேப்பைய போட்டுவெச்சா,
யாருகண்ணு பட்டிடிச்சோ
ஆடுதின்னும் தட்டையாச்சு!
பருத்திய வெதச்சுவச்சி
பஞ்சாகி வருமின்ன,
குச்சியா நின்னுபோச்சி
கட்டுக்கட்டா விறகாச்சு.
பயத்தம் வெதவெதச்சு
மஞ்சப் பூப்பூத்துக்
காயாகி வரும்போது
கருகியே போச்சுதையா!
கடனெல்லாம் கெடப்புலதான்
கண்டவனும் நகைப்பிலதான்;
கால்வயிறு அரைவயிற்றுக்
கஞ்சிகூடக் கனவுலதான்.
வெள்ளாம பாத்தவன்
வெளங்காமப் போனதுல
வெந்தபுண்ணு வேதனயில்
வேல்பாய்ச்சும் அரசாட்சி!