அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Friday, April 14, 2017

வெயில்


வெயில் காற்றைப்போல் இல்லை
எதையும் அசைக்கவில்லை;
வெயில் கடலைப்போல் இல்லை
எங்கும் அசைவில்லை;
வெயில் மழையைப்போல் இல்லை
எங்கும் இரைச்சலில்லை;
வெயில் நிழலைப்போல் இல்லை
எதையும் மறைக்கவில்லை.

அமைதியைப் பேணும் உரு
வெண்மையைப் போற்றும் உரு
ஏற்றத்தாழ்வு இல்லாது
எங்கணும் பரவும் உரு
வெயில், அதனால்:
கடுமையாய் அடித்ததெனக்
குளத்துநீர் குடித்ததென
மண்ணும் சுட்டதென
மரமும் பட்டதென
வாழ்வு இற்றதென
வளமும் அற்றதெனத்
தொட்டதெலாம் குற்றமெனத்
திட்டாதீர் மானுடரே!

Wednesday, April 12, 2017

ஒற்றைப் பருக்கை

தத்தித் தவழும் குழந்தையின் வாயில்
அழகை உதிர்த்தது;
துடைத்து நின்ற அன்னையின் கையில்
அமுதம் ஆனது!
அழகு மங்கையின் இதழோரத்தில்
காதல் ஆனது;
துடைத்த போதில் அவனின் மனதில்
போதையானது!
பந்தியில் மேய்ந்த தொந்தியின் வாயில்
அருவருப்பானது;
துடைத்து நின்ற கையில்  வழிந்து
எச்சில் ஆனது!
தளர்ந்து நின்ற தாத்தனின் வாயில்
நோயும் ஆனது;
துடைத்து நின்ற பாட்டியின் கையில்
பரிவும் ஆனது!
சோறு எனும் ஈரெழுத்து
ஒற்றையானது;
பலபலவாய்க் குணம் காட்டும்
பருக்கையானது.

Sunday, April 2, 2017

கானப் பறவை


உருவொன்றும் வேண்டாம்
கனவொன்றே போதுமென்றால்
காற்றைக் குடித்துத்
தாகம் தீர்க்குமோ
கானப் பறவை?

மதியொன்றும் வேண்டாம்
மந்திரமே போதுமென்றால்
கம்பளத்தில் பறந்து
வாழ்க்கையைத் தேடிடுமோ
சாதகப் பறவை?

மலரெதுவும் வேண்டாம்
மதுவொன்றே போதுமென்றால்
அமர்வதற்கு இடம்தேடிச்
சந்திரனைக் கொணர்ந்திடுமோ
தேன்சிட்டுப் பறவை?

மண் எதுவும் தேவையில்லை
வானமே போதுமென்றால்
காதலியைத் தேடிச்
சூரியனில் புகுந்திடுமோ
காதல் பறவை?

பணம்ஒன்றே போதுமெனப்
பரிதவித்து வாழ்ந்திருந்துப்
பிணத்திலும் காசுவாங்கி
நிணம் அழுகி வீழ்ந்துபோய்ப்
பதவியே போதுமெனப்
போக்கற்று ஆகிவிட்டுப்
பரமனின் அடிதேடித்
தலைகீழாய்த் தொங்கிடுமோ
வாழ்க்கையெனும் வௌவால்?

Saturday, April 1, 2017

இடம் மாறும் உலகம்

இரண்டும் இடம் மாற
மனதினிலே பரிவு வரும்
இதயத்திலே காதல் வரும்

எங்கெங்கோ இடம் மாறும்
எண்ணங்களால் துயரம் வரும்
ஆசைகளால் மோசம் வரும்

கால்கள் தடுமாற
தள்ளாமை தேடி வரும்
காலம் தடுமாற. . . . .
காலமானார் செய்தி வரும்!