அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Friday, April 14, 2017

வெயில்


வெயில் காற்றைப்போல் இல்லை
எதையும் அசைக்கவில்லை;
வெயில் கடலைப்போல் இல்லை
எங்கும் அசைவில்லை;
வெயில் மழையைப்போல் இல்லை
எங்கும் இரைச்சலில்லை;
வெயில் நிழலைப்போல் இல்லை
எதையும் மறைக்கவில்லை.

அமைதியைப் பேணும் உரு
வெண்மையைப் போற்றும் உரு
ஏற்றத்தாழ்வு இல்லாது
எங்கணும் பரவும் உரு
வெயில், அதனால்:
கடுமையாய் அடித்ததெனக்
குளத்துநீர் குடித்ததென
மண்ணும் சுட்டதென
மரமும் பட்டதென
வாழ்வு இற்றதென
வளமும் அற்றதெனத்
தொட்டதெலாம் குற்றமெனத்
திட்டாதீர் மானுடரே!

Friday, February 24, 2017

பாஞ்சாலக்குறிச்சிச் சாலை

மாலை மயங்கி வர
   மனையாளும் கூட வர
மகிழுந்து ஊர்ந்த தம்மா
   பாஞ்சாலன் ஊர் தாண்டி!

பூமகள் கூந்த லிலே
   பூரண வகிடு போலே
வெட்ட வெளிக் காட்டில்
    நெட்ட நெடுக்காய்ச் சாலை!

பஞ்சுநிகர் மேகங்கள்
   பலவண்ணப் பட்டினிலே
மஞ்சள் வெளியினிலே
   மயக்கும் முகத்தினிலே
செஞ்சாந்து இட்டதுபோல்
   செம்பரிதி நின்றொளிர
நெஞ்சமெலாம் நெகிழ்ந்து
   நேரமெலாம் போனதுவே!

அம்மம்மா!
வானில்தான் வனத்தில்தான் நிலவில்தான் ஒளியில்தான்
   வனப்புக்குள் வனப்பத்தைத்தான் தீட்டிவைத் தானா;
தேனில்தான் தெங்கில்தான் கனியில்தான் கரும்பில்தான்
    இனிப்பில்தான் இனிப்பைத்தான்  ஊறவைத் தானா;
காவில்தான் ஒட்டைக்கும் நிலத்தில்தான் நெல்லுக்கும்
   கல்லில்தான் தேரைக்கும் நீர்வைத் தானா;
பூவில்தான் புள்ளுக்கும் புவியில்தான் தேனிக்கும்
   துளித்துளியாய் தேனைத்தான் உண்பித்தானா!

சக்தியிலே புத்தியிலே சாத்திரத்தின் நெறியினிலே
   சாற்றைத்தான் ஊற்றித்தான்  கொட்டிவைத் தானா
வித்தினிலே சத்தினிலே சத்தியத்தின் இருப்பினிலே
   வியனுலகின் வீரியத்தை  உள்வைத் தானா;
நி்த்திலத்தைச் சிப்பிக்கும் நித்திரையைத் தூயனுக்கும்
   சித்தமதைச் சித்தருக்கும் கற்பித் தானா?
பக்தியிலே பதம்தெளிந்து பட்டறிவின் வழிநடந்து
   பரமனைத் தொழுதெழுந்து வாழ்த்துவமே!