அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Friday, November 29, 2019

அயற்சொல் மடலம்

தமிழில் உள்ள பிறமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சொற்களைக் காண கீழுள்ள இணைப்பைச் சொடுக்கவும். 

Wednesday, November 20, 2019

பெயர் வாங்கித் தந்தவன்

அவன்
வேறு யாருமில்லை
எனது
சட்டைப் பைக்குள்
வாசம் செய்யும்
தனிச் செயலன்;

அவனுக்கு
இவ்வுலக வேலை
எதுவுமில்லை
ஆனாலும்
என்னைப்
பெரிய ஆளாக்கிப்
பார்க்க வேண்டுமென்று
தீராத விருப்பம்!
அதனால் என்மீது
குறையுண்டு அவனுக்கு!

அவன்:
தமிழு தமிழுனு
படிக்கிறது என்னத்துக்கு?
போதும் ஐயா படிச்சது!
நாலு டாபிக்குல
நாலு சோக்கு அடிச்சமா
நாலுபேர் சிரிச்சாங்களா
பொழச்சமான்னு போங்க;
அவ்ளோதான் வாழ்க்க!

... இவ்வளவு சொல்லியும்
... அங்க என்ன பண்றீங்க,
அது என்ன டுவீட்டா?

நான்:
இல்லை,
இதுபேர் கீச்சு!

அவன்:
தெரியும்... தெரியும்...
ட்வீட்டுன்னு சொன்னா
வாய் கொறஞ்சி போகாது
அத எங்கிட்ட உடுங்க
இன்னைக்கு மட்டும்
நான் போடுறேன் ட்வீட்டு
அப்புறம்
லைக் எத்தனை
ரீட்வீட் எத்தனை
நீங்களே பாருங்க!

நான் :
டேய்.. டேய்..
என் கைபேசிய எடுக்காதே

அவன் :
... இந்தா புடிங்க
போட்டாச்சி ட்வீட்டு

ஐயாமார்களே!
சற்று நேரத்திற்குமுன்
போட்ட கீச்சு எனதில்லை!

என் செயலன்
என்னதான் போட்டிருப்பான்?
எட்டிப் பார்த்தால்...
அதற்குள்...
அந்தக் கீச்சிற்குக் கீழே
எட்டுத் தொடுப்பு!
பத்து விருப்பு!

இதுதான்
அவன் போட்டிருந்த கீச்சு,
"எந்த மரமானாலும்
காய்ச்சித் தொங்குகிற
எல்லாப் பழமும்
கொய்யாப் பழம்தான்"

Thursday, November 7, 2019

மரம் இல்லாது மழையேது

ஒற்றை மார்போடு
மலைமேலேறிய கண்ணகி
மரத்தடியில் நிற்பதாகத் தன்
கணவனுக்குத் தூதுவிட,

கோவலனின் புட்பக விமானம்
கண்ணகியைத் தேடி
சுற்றிச்சுற்றி அலைந்தது
எந்த மரமென்று தேடியல்ல;
மலையில் ஏது மரம்
என்ற வாதையில்.

கணவன் வாரானென்று
சலித்துப் போய்
மொட்டைப் பாறையில்
குதித்து உயிர்விட்ட
கண்ணகியைக்
கண்டு வருந்திய மேகம்
இப்போதெல்லாம்
நீராய்ச் சொரிவதில்லை
மழையாய்ப் பெய்வதில்லை
அங்கங்கே
காறித் துப்பிவிட்டுக்
கடந்து செல்கிறது.

நானோர் தனியன்

பிறந்தநாள் முன்னெடுப்பு!
பரிசும் பணமும் கையில்;
முதியோர் இல்லம் செல்லும்
பெருமைக்குப் பேர்
கருணை என்றாகியது.

முதியோர் இல்லத்தில்
பரிசும் பணமும்
கொடுத்து முடிந்த வேளை!
பெரியவர் ஒருவர்
அருகமர்ந்து சொன்னார்,
“பாவம் நீங்கள்!
ஆண்டவன் உங்களை
இப்படியும் சோதிப்பானோ?”

“என்ன ஆச்சு எனக்கு?”

“ஆண்டவனுக்கு உகந்தவர்
அவன் பாதுகாப்பில்
இருப்பார்தானே;
பிடிக்காது போனால்
உலகில் அலைந்து திரிய
விடுவார்தானே?”

"ஆமாம்!"

"நான் ஆண்டவனுக்கு உகந்தவன்;
பாருங்கள் என்னை
நானோ
எங்கும் அலையவில்லை
இங்கேயே அமைந்துள்ளேன்.
நீங்கள்தாம் பாவம்!
கடவுளும் கைவிட்டாரோ?
அலைஅலையென
அலைகிறீரே”

சட்டெனத் திடுக்குற்றேன்!
அவர் கூறியது
என் மனதையா?
மனம் தாங்கும் உடலையா?

அகண்ட இப்புலனத்தில்
மனிதர் தம் முன்னே
தாமே கட்டிய
மாபெரும் கம்பிவலை;
வலைக்குள் குரங்கென
விடாது சுற்றும் அடம்!

அப்பக்கம் இப்பக்கம்
கம்பிவலை நடுப்பக்கம்;
எப்பக்க மனிதன் கைதி,
எப்பக்க மனிதன் கங்காணி?
யாருக்கு யார் கைதி?

நானோ கைவிடப்பட்டவன்?
நானே தனியன்!  

Wednesday, October 23, 2019

புத்தா!

புத்த தேவா
என்னை மன்னித்துவிடு!
ஒட்டி உலர்ந்த
உன் யாக்கை
எனக்கு வேண்டாம்.
எல்லோரும் எண்ணுகிறார்கள்
பசியின் ஆழ்ந்த மயக்கத்தில்
நீ பட்டறிவு பெற்றதாக;
நானறிவேன் அதை!
வெயிலில் வாடிக்
களைத்த உனக்கு
இதம் தந்ததே
அந்தப் போதிமரம்;
இதம் தந்த அறிவே
உனது புத்துயிர்ப்பு!

நீ புத்தனானது
போதிமரத்தால் அல்ல,
என்று நீ உன்
அரண்மனையின் இதம் நீங்கி
வெளிப் போந்தாயோ
அந்த நொடி...
ஓ கௌதமா
இல்லை இல்லை..
ஓ புத்ததேவா!

என்னை மன்னித்துவிடு!
ஒட்டி உலர்ந்த
உன் யாக்கை
எனக்கு வேண்டாம்!
என்னைப்போல் நீயும்
வறுமையில் வாழ்ந்திருந்தால்...
வெந்ததைத் தின்று
விதிவந்து செத்திருப்பாய்!
பசியில் பட்டறிவு
துளிர்க்கும் எனச் சொன்னது யார்? அரண்மணையின் இன்ப வாழ்வை
எனக்கும் தா!
அந்தத் துளிநேரத்தை...
நீ நீங்கிய போழ்தின்
ஆழ்ந்த அமைதியை...
நானும் பெறவேண்டும்!


தமிழில் பிறமொழிச் சொற்கள் வழங்கும் முறை

'வடசொல்லுள்ளும் பெயரல்லது செய்யுட்கு உரியவாய் வாரா' (சேனாவரையர்).

பொதுவாக, பெயர்ச் சொற்களையே ஒரு மொழி கடனாகப் பெறும். இதை மனதில் நிறுத்தி, பிறமொழிச் சொற்கள் தமிழில் வழங்கும் முறைகளைக் காண்போம்.

1  த், ஸ், ல் எனும் இடையெழுத்துகள்  'ற்' ஆகத் திரியும்
உத்சவம் - உற்சவம்
பஸ்பம் - பற்பம்
கல்பம் - கற்பம்

2 'ட' வில் தொடங்கும் பிறமொழி முதற் சொற்கள் 'த' என முதற்சொல்லாகத் திரியும்
டமருகம் - தமருகம்
டொப்பி - தொப்பி

 3 'ட' எனும் முதல் எழுத்து  'இ' முன்னெழுத்தைப் பெறுவதும் ஆம்.
டம்பம் - இடம்பம்

4 ஆகார ஈறு ஐகாரமாகும்
பிக்ஷா - பிச்சை

 5 ர, ல முன்னெழுத்துக்கு முன் 'இ' துணை முன்னெழுத்து சேரும்
ராமன் - இராமன்
லாபம் - இலாபம்


நிலா முகம்

நசைஇ பெருகிய ஒளிறுவா னிலவும்
வசையி லெழிலிய தன்னுரு மகிழ்ந்திட, வான்பொரு தேந்திய வளனெயி லடைஇய
தான்சிறை புக்கென வேண்டாவா மென்றிட, எய்தவு வந்ததெம் மில்லெனுங் குடிலே
எய்துப சிலைகொள் நீள்கோ டோட்டிட,
வீழ்ந்தது முன்றிற் கொட்டிற் கழுநீர்;

போழ்தெம் மேதியோ உறக்கம் நீங்கியே
மருங்குல் தணிப்பத் தன்வாய் வைத்திடக் கலங்கிய நீரினில் கலைந்திடு வுருகாண்
மருங்கி லோடி முகிழ்முகம் புதையி
வாழ்ந்தேம் நகையொடும் புத்தேள்
வாழ்ந்திடு மெந்தை யெந்தெய் வருளே!

பொருள் :
ஒளிதரும் வான் நிலவு குற்றமில்லாத தனது அழகிய உருவத்தைக் காண பெருகிய விருப்பம் கொண்டு, வானளாவிய கோட்டையுடைய அரண் போன்ற வீட்டிற்குச் சென்றால் சிறைபட நேருமென்று எண்ணி, சிறு குடிலாகிய எம் வீட்டில் உள்ள முற்றத்துக் கொட்டிலில் கழுநீர் கூடிய தொட்டியில் நெடுங்கோடு உடைய தன் ஒளியைப் பரப்பியது. அப்போது, எம் வீட்டு எருமை மாடு உறக்கம் நீங்கித் தனது தாகம் தீர்க்க வேண்டி அத் தொட்டியில் வாய் வைத்தது. அதுபோது கலங்கிய தன் முகம் கண்டு வருந்திய நிலவு மேகக் கூட்டத்தில் தன் முகத்தை மறைத்துக் கொண்டது. குடிசையில் வாழ்ந்தாலும் நாங்களும் நகை செய்து மகிழ்வுடன் வாழச் செய்தது இறைவன் அருளே!

Sunday, October 13, 2019

மிச்சம்

தேநீர் பருகுதல்
ஒன்றும் பெரிதில்லை
காலையில்...
மாலையில்...
மனம் மகிழ...
கிண்ணத்தை முழுதாக்கி
எண்ணம்போல் பருகியிருக்கிறேன்.

தேநீர் பருகுவது
ஒன்றும் பெரிதில்லை
ஆனால்,
என்றாவது ஒருநாள்
அதன்
கடைசி சொட்டுவரை
பருகியுள்ளேனா?

இன்றும் என்
அருமைத் தேனீர் என்முன்!
பருகிக் களித்துக்
கவிழ்த்துப் பார்க்கிறேன்
கிண்ணத்தில் ஏதோ
இன்னமும் மிச்சமுள்ளது
எதுவென்றுதான்
எனக்குப் புரியவில்லை?


தொலைந்து போனவன்

பொருட்கள் புத்திசாலிகள்!
வைத்த இடத்தில் அவை
பாதுகாப்பாய் அமர்ந்துகொள்ளும்;
இருக்குமிடத்தில்
பதவிசாய் அமைந்துகொள்ளும்;
தேவைக்குமேல் இடத்தை
அடைத்துக் கொள்வதில்லை;

பொருட்கள் புத்திசாலிகள்
அவை தொலைந்துபோவதில்லை;
மனிதனைத் தொலைத்துவிட்டு
தேடிக் கொண்டிருப்பவை!

மதுக் கிண்ணம்

எத்தனையோ தடவைகள்
அது குடித்திருக்கிறது
விதவிதமாக
மூச்சு முட்ட
மூக்கு முட்ட
தளும்பத் தளும்ப
ஆயினும்
ஒருபோதும் அது
போதை அடைந்ததில்லை.


ஆலமரம்

போதகரின் வீடு!
தட்டினேன் திறக்கப்பட்டது
'கடவுளைக் காண வேண்டும்' நான்
'வலதுபக்கத் தெருவில்
கடைசியில் இருப்பது தேவாலயம்
பாதர் இருப்பார்
சென்று காத்திருங்கள்
சற்றுநேரத்தில் வருவேன்
நாம் பேசலாம்' என்றார்
காத்திருக்க நேரமில்லை
கிளம்பிவிட்டேன்.

இமாம் அவர்கள் வீடு!
பூட்டிய கதவில்
எட்டிப் பார்த்தது முகம்
'கடவுளைக் காண வேண்டும்' நான்
'தொழுகை நேரம் இது
செல்லுங்கள் பள்ளிக்கு
அத்தாவும் புறப்பட்டாச்சி
சல்லச் சொன்னாக'
பதில் வந்தது
காத்திருக்க நேரமில்லை
கிளம்பிவிட்டேன்

கிராமத்து எல்லை
களைப்பு நீக்கும் ஆலமரம்
பக்கத்தில் திருவோடு
படுத்திருந்தவன் பிச்சைக்காரன்
'கடவுளைக் காண வேண்டும்' நான்
'பார்த்துக் கொண்டிருக்கிறாய்' அவன்.

- எது? இந்த ஆலமரமா?
பதிலில்லை
- எதிரே காணும் காரிருளா?
பதிலில்லை
- எங்கும் பரவிய இப் பெருவெளியா?
பதிலில்லை
- போதகரும் இமாமும்...
"நிறுத்து! போதகர் பேசுவார்
பேச்சுதான் கடவுள் அவருக்கு!
இமாம் தொழுவார்
தொழுகையே கடவுள் அவருக்கு!"

- அப்படியானால், என்னை
இறையில்லம் ஏகச் சொன்ன
காரணம்?
"அங்கேதான் அவர்கள் உன்னைத் தன்வயப்படுத்த முடியும்"
- அப்படியானால், நீதான் கடவுளா?
"பைத்தியம்" என்று சொல்லித்
தூங்கிவிட்டான் பிச்சைக்காரன்!



பழைய மாணவன்

நான் உங்கள்
பழைய மாணவன்
நினைவிருக்கிறதா ஐயா?

இல்லையே, தம்பி!

உங்களது ஆசியால்
இன்று நான்
இந்நகரின் ஆணையர்.

நல்லது! உன் மனதுக்கு
உன்னைச் சிறப்பாக
அறிமுகப்படுத்திக் கொண்டாய்;
அது சரி!
உன் மனதுக்கு
என்னை எவ்வாறு
அறிமுகம் செய்துள்ளாய்?
அதைச் சொல்லு ...




Saturday, September 7, 2019

சந்திரயான் 2


அறையும் பொறையும் ஓர்ந்தொ துக்கி
மறையா வொளிகண் டுணர்ந்தே கிடவே
வீயாத் திருவின் விறல்கெழு ஓடம்
மாயாப் புகழின் சந்திர யானை
எண்நாள் திங்கள் அணைய ஏகினை!
பெண்ணாள் காமுறு தலைவன் கண்டு
வாயுறு முத்தம் வேண்டி நெருங்க
தாமுறு நாணந் தலையிஅம் மடவாள்
தடமில் போய தெங்ஙன மெனவே
வடவரை வெற்பன் சோர்ந்த னனோ?
விறலன் றிதுவென வீணர் சொல்லோ?
மறவன் நீயென் றுணர்ந் திடுக!
நாவலஞ் சாருயர் சிவனே
பாவலஞ் சூழிசை பாடினேம் அம்ம!      

Friday, August 9, 2019

நெல்லைத் தமிழ் - பகுதி 2

31. கூராப்பு - கருமேகம் குளிர்ந்து கருக்கொள்ளுதல். கூர = குளிர் மிகுதல்; முகில், முதிரம், திரள், விசுங்கம், விசும்பு, கொண்டல் என மேகத்தைக் குறிக்கப் பல சொற்களுண்டு. கூராப்பு என்பது தூறலுக்குச் சற்று முந்தைய நிலையைக் குறிப்பாக உணர்த்தும் சொல். அடுத்தது தூறல் அல்லது மழை என்னும் நிலை இது.
நெல்லைப் பேச்சு:
"ஏலே ஐயா, மொட்ட மாடீல துணி காயுது. வானம் கூராப்பா இருக்கு. செத்த, துணிய எல்லா எடுத்துக் கொடுத்திட்டுப் போ ஐயா" மரகதம் தன் மகனிடம் வேண்டினாள்.
"என்ன பண்ண? இன்னா அன்னான்னு ஒரே கூராப்பா இருக்கு. மழயத்தான் காணோம்" மருதப்பன் சக விவசாயியிடம் புலம்பினான்.

32. அல்லாடீட்டு - அல்லாட்டம் கொண்டு, அல்லாடிக்கொண்டு.
அல்லாட்டம் - (துயரத்தில்) அலைதல்.
(இறப்பில் இறப்பு ((past perfect), எழுதிக் கொண்டிருந்தான்(past continuous) போன்ற சொற்களில் உள்ள விட்டு, கொண்டு எனும் சொற்களை 'ட்டு' என்று சுருங்கப் பேசுவது வழக்கம். எழுதி விட்டான் - எழுதிட்டான்; எழுதிக்கொண்டிருந்தான்- எழுதிட்டிருந்தான். )
அல்லாடிக்கொண்டு - அல்லாடிட்டு; அழுத்தமான உணர்ச்சியை வெளிப்படுத்த 'அல்லாடீ. ட்டிருந்தான் என்றும் சொல்லுகின்றனர்.

33. சப்பளி - சிதைத்துத் தட்டையாக்கு
சப்பை, சப்பள் - தட்டையானது., சுவையற்றது.
"ஏன்டா அழுகுற" என்ற தாயிடம், "ராமுப்பய நான் செஞ்சு வெச்ச களிமண் புள்ளயார சப்பளிச்சிட்டுப் போய்ட்டான்" என்று சொல்லி அழுதான் அந்தச் சிறுவன்.
 - சிதைத்துத் தட்டையாதல் இங்கே பொருளானது.
" பத்து நாளுக்கு ஒருக்கா இந்தக் கொழாயில நல்ல தண்ணி வரும். அந்தக் கொழாயில தினமும் சப்பத் தண்ணி வரும்" - இது சங்கரன்கோயிலில் பேச்சு. - சுவையற்ற என்பது இங்கே பொருளானது.
சிதைத்துத் தட்டையாக்குவது 'சப்பளித்தல்' என்றால், சமனாகத் தட்டையாக்குவதற்கு என்ன சொல்? அதுதான் 'அப்பளித்தல்'. அப்பளித்தல் - சமனாகத் தேய்த்துத் தட்டையாக்கினால் கிடைப்பது 'அப்பளம்'.

34. ஒக்கல் - இடுப்பு
"ஏட்டீ, தம்பிய இப்படி ஒக்கல்லயே வச்சிட்டுத் திரிஞ்சா என்னக்கிதா அவன் நடக்கப் பழகுவான்" பக்கத்து வீட்டு பார்வதி அழகம்மையைக் கண்டித்தாள்.
ஒக்கல் = சுற்றம் (இலக்கியம்) "குறுமுயல் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு" - புறம் 34
"பெரும்புல் என்ற இரும்பேர் ஒக்கலை"- புறம் 69 ஒக்கலில் வைத்து அமுதூட்டேன் -  காந்திமதி அம்மை பிள்ளைத்தமிழ் - சொக்கநாதர்.

35. குண்டு = ஆழமான, உரக்குழி குண்டு = உருளை, குளம், பருமன், "தீநீர்ப் பெருங்குண்டு சுனைபூத்தக் குவளைக்" - புறநானூறு 116
குண்டு எனும் சொல் மேற்குறிப்பிட்ட பொருட்களில் தமிழகமெங்கும் வழங்கினாலும், 'ஆழமான', 'உரக்குழி' எனும் பொருள்களிலும் நெல்லை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
"அவென் குடிச்சிட்டு எந்தக் குண்டுல உழுந்துக் கெடக்கானோ. யாருக்குத் தெரியிம்?" :
குண்டு = ஆழமான, பள்ளமான.
"நாளக்கிதான் மேலக் குண்டு வய அறுப்பு வெச்சிருக்கேன், ஆத்தா" : மற்ற இடங்களைவிடத் தாழ்வான பகுதியில் உள்ள வயல், குண்டுவயல் எனப்படுகிறது.
"ஏட்டி இசக்கி, தொழுவத்துல இருக்க சாணிய குண்டுலக் கொட்டிட்டு வந்திரு" : குண்டு = உரக்குழி.

36. தாலம், தாலா = தட்டு, உண்கலம் உலோக உண்கலங்களைத் 'தாலா' என்று கிராமங்களில் வழங்குகின்றனர். "ஏலே, சண்ட போடாம அவனவன் தாலாவத் தூக்கிட்டு வெரசாப் போங்க" ராமாயி பிள்ளைகளைப் சத்துணவுப்பள்ளிக்குச் செல்ல விரைவுபடுத்தினாள். பெருந்தோள் தாலம் பூசல் மேவா - புறநானூறு 12
அண்மையில் ஜபல்பூர் சென்றிருந்தபோது, பல உணவகங்களில் உள்ள தகவல் பலகைகளில் இதைக் கண்டேன்: 1 थाली - ₹ 60 அதாவது 1 தாலி/plate/தாலம் சாப்பாடு = ரூபாய் 60. தாலம் நமதுதான். நமது கிராமங்களில் இன்னும் உயிரோடு. நகரத்தில்...ப்ளேட்?

37. கரைச்சல் = தொல்லை, நச்சரிப்பு (வட்டார வழக்கு) கரைச்சல் = உருக்குகை, கவலை (இலக்கிய வழக்கு) "ஐயய்ய்யே.. கரைச்சல் பண்ணாமெ தூரப்போ சனியனே" பேருந்து நிலையத்தில் பிச்சைக் கேட்டு நச்சரித்தவனைத் தூர ஓட்டினான், கந்தசாமி.
அழுவார் அழுவார் தம் தம் கரைச்சல்; திருவன் பெண்டிருக்கு அழுவார் இல்லை. (யாழ்ப்பாண வழக்கு.

38. பைய - மெல்ல, மெதுவாக பைய - பதுக்க (குமரி மா. வழக்கு)
"சைக்கிள்ல பையப் போடான்னா, கேட்டாத்தான. இப்பப் பாரு குப்புற விழுந்துக்கெடக்கான்.."
"பையப் பைய முன்னேறக் கையக் கொஞ்சம் காமி.." கண்ணதாசன்.
"வையகம் முழுதுடன் வளைஇப் பையென" - புறம் 69

(39) ஏலே! (இது இல்லாம திருநெல்வேலியா?)
ஆண்பால் விளி : ஏலே! லே! லேய்! ஏலேய்! ஏய்யா! ஏடே! ஏம்டே!
பெண்பால் விளி: ஏட்டீ! ஏமுட்டீ? ஏக்கீ! (இழி விளிச்சொல்)
ஆண்பால் வினவு: ஏம்லே? ஏம்லேய்? ஏன்டே? ஏன்டேய்?
பெண்பால் வினவு: ஏலா? ஏம்லா? .

40. நட்டாம - நின்றவண்ணம்
"என்ன அவசரமோ? வீட்டுக்கு வந்த பய நட்டாம நின்னுட்டே கஞ்சியக் குடிச்சிட்டு இப்பதான் வெளியில போனான்". உட்கார்ந்து கஞ்சி குடிப்பது இயல்பு. வெகு இயல்பாக 'அங்க நின்னுக்கிடிருக்கான்' என்று சொல்பவர்கள் 'நட்டாம' என்ற சொல்லின் மூலம் அவசரம், கோபம், எதிர்ப்பு என ஒரு அழுத்தம் கொடுக்கும் சொல்லைப் பயன்படுத்துவது வியப்புதான். நடுதல் என்பது இயற்கையான செடி போன்றவற்றை பூமியில் பதித்தலைக் குறிக்கிறது. நட்டுதல், நாட்டுதல் என்பன செயற்கையான கொடிமரம் போன்றவற்றை வலிய நிலைநிறுத்துதலைக் குறிப்பன. வெற்றிக்கொடி நாட்டுதலும் வலிய செய்யப்படும் ஒரு செயலே. நட்ட மரமா(க) என்பதே 'நட்டாம' ஆகியிருக்கலாம். இது சிற்றூர் வழக்கு. நகரம் சார்ந்த சிற்றூர்களில், 'நட்டக்க, நட்டாக்க' என்றும் வழங்குவதைக் காண்கிறேன். 'நட்டமரமாக' என்பது ,நட்டாக்க' ஆகியிருக்கலாம்.

41. உடல் கூறுகள் நெல்லை வழக்கில் :
செவிட்டுல - கன்னத்தில்
செவிள் - கன்னமும் காதும் சேர்ந்த பகுதி
முகர, மூஞ்சி - முகம்
பொடதி, பொடறி - பிடறி
ஒக்கல் - இடுப்பு
சங்கு - கழுத்து
பொறத்தால - முதுகில்
மேலுக்கு - உடம்புக்கு
மயிர் - இழிச்சொல்
மொழி - கணு, கைகால்களின் முட்டி எலும்பு,
மொண்ண, மொழுக்க - வழுக்கை
நொட்டாங்கை - இடது கை
தெத்துப் பல்லு - தெற்றுப் பவ்
ஒன்றரக் கண்ணு - ஒரு கண் ஊனம்

42. ஓர் ஊரின் அருகில் தென்திசையில் சந்தையும் வடதிசையில் சுடுகாடும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஊரில் ஒருவர் "தெக்கே போறேன்" என்று சொன்னால் அவர் சந்தைக்குப் போகிறார் எனப் பொருள். "அவன் வடக்கே போய்ட்டான்"  என்றால்.. உங்களுக்கே இப்போது புரிந்திருக்குமே!
ஊரின் அருகில் உள்ள குளம்,ஆறு போன்றவை, வயல் அல்லது தோப்புகள், இரவில் இயற்கை கழிப்பு இடம், விறகு சேகரிக்கும் காடு, இவை எல்லாவற்றையும் திசையாலேயே உணர்த்துவர். இது இயற்கையோடு ஒன்றி வாழ்வதின் ஒரு கூறு! நகரங்களில் இவ் வழக்கு கிடையாது. சென்னை மக்களுக்குத் திசையே குழப்பமான ஒன்றுதான்.

43. அந்தானிக்கி - அந்த மேனிக்கு. உடன் அப்படியே, அப்பொழுதே "ஒரு இடி இடிச்சது பாத்துக்க. அப்புறம் 'பளீருனு' ஒரு மின்னலு. அந்தானிக்கி புடிச்ச மழதான்..." லட்சுமி தன் தோழியிடம் கதை சொல்லிக்கொண்டிருந்தாள். ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து தொடர்பிடியாகச் சட்டென நடக்கும் செயலை இப்படித்தான் சொல்கிறார்கள். சிற்றூர் வழக்கு இவ்வாறிருக்க, நகரங்களில் "அந்தமானிக்குப் போனவன்தான். திரும்பி வரவேயில்லைலா" எனக் கதை சொல்லி முடிப்பார்கள். நகரத்து வழக்கு, 'அந்தமானி, அந்தாமேனி' என்பனவாகும்.

மேலும் சில சொற்கள்: குந்தானி - உருளைபோல் குண்டானபெண்.
கண்டமானியும் - கண்ட மேனிக்கு.
தோத்தானி - தோற்றுப் போனவன்/ள்.
புழுகானி/புழுகுனி - புழுகு பேசுபவன்

44. 'க்'
"என்னத்த சொல்லுயது. அவன்தான் ஒரு 'இக்கன்னா' வெச்சிட்டுப் போய்ட்டானே. ஒரு பொண்ணடி பாவம் பொல்லாதது பாத்துக்கிடும்". திருமணம் முடிஞ்ச மறுநாள் மாப்பிள்ளைக்காரன் பெண் பிடிக்கவில்லை, வேண்டாம்னு சொல்லிவிட்டு தான் வேலை பார்க்கும் ஊருக்குப் பேருந்தில் ஏறிச் சென்றுவிட்டான். காரணம் சொல்ல மறுத்து விட்டான். பெண் ஆதரவற்று நிற்கிறாள். ஊர்ப் பெரியவர்கள் காரணம் விளங்காமல், முடிவு எடுக்கமுடியாமல் பெண்ணுக்காகப் பரிதாபப்பட்டுப் பேசும் சொற்கள் இவை. 'இக்கன்னா' - இழுபறியில் நிறுத்தி வைக்கும் ஒரு குறிப்புச் சொல். மனிதனுக்குப் பசி என்ற ஒன்று இருக்கிறதே, அதற்காக! வேலை செய்வது எதற்காக? எனும்போது சொற்றொடர் முடிந்துவிடும். "மனிதனுக்குப் பசி என்ற ஒன்று இருக்கிறதே, அதற்காகக்.." இங்கே 'க' வைத்தாயிற்று. எழுதுவதையும் நிறுத்தியாயிற்று. தொடர் முடியவில்லை. மேலும் என்ன சொல்லப்படும் தெரியாது. இதுதான் தொங்கலில் விடுவது.ஒற்று இடுவதின் வலிமை இங்கே புரிகிறது. க், ச், த், ப், எல்லாம்தான் இருக்கிறது. 'க்' முதலில் வருகிறது; அதனால், முதலில் வருவதையே ஆள்வது வழக்கம்தானே. தொணப்பாதே (நெல்லை?) - நச்சரிக்காதே, தொணதொணக்காதே

45. பேச்சு!
நீரு என்ன சொல்லுதீரு? பேச்சுன்னா எல்லாம்தா. பேசிப்புட்டான், பேசிட்டான், பேசிப்போடுவேன் - திட்டுதலைக் குறிக்கும். பேசிட்டான், பேசிப்புட்டான் - பேசிவிட்டான் "கட மொதலாலி என்னப் பேசிப்புட்டாரு" - திட்டினார் பேசிப்போடுவேன் - பேசிவிடுவேன் "நல்லாப் பேசிப்போடுவேன் பாத்துக்க. ஓடிப் போயிரு" - திட்டுவேன் "என்னா பேச்சு பேசுறான், சின்னப்பய" -மிகையாகப் பேசுதல் ஆமா, அப்படியே நீரு பேசீட்டாலும் - பேச்சில் குறைவு

46 : முனி – நுனி (edge)
“அவனுக்கு அடிக் கரும்பு, எனக்கு மட்டும் முனிக் கரும்பா. எனக்கு வேண்டாங் ஆத்தா..” “முருகன்தான் முனி விழுதப் புடிச்சத் தொங்கட்டான் ஆடினான்” (ஆலமரத்தின் நுனி விழுது) படித்தோர் மத்தியில் ‘நுனி’யாக இருந்தாலும் நெல்லைக் கிராமங்களில் ‘முனி’ என்பதுதான் வழக்கு. பேச்சு அநாகரிகம்போல் தெரிந்தாலும் ‘முனி’ என்பதிலிருந்து பிறந்ததுதான் ‘நுனி’ என்பது வியப்பே. கிராமத்துத் தமிழை எள்ளல் வேண்டா. முள்-முன்-முனை-முனி = முற்பகுதி.

47. உடல் மொழி – நெல்லை
ஒக்கல் – இடுப்பு
ஒன்ட்ரக் கண்ணு - ஒரு கண் ஊணம்
கண்ணுமுளி - கண்விழி
கொதவளை– குரல்வளை
கோணக்காலு – நொண்டி
சங்கு - கழுத்து
செவுளு, செவுடு – செவிள்
தெத்துப் பல்லு - தெற்றுப் பல்
நெஞ்சான்கொல – நெஞ்சகம்
நெத்தி – நெற்றி
மண்ட – மண்டை
நொட்டாங்கை – இடது கை
பிட்டி – பிட்டம்
பொடதி, பொடறி - பிடரி
பொறத்தால – புற!முதுகில்
மயிரு – இழிசொல்
முட்டங்கால், முட்டி – முழங்கால்
முட்டி – விரல்களை மடக்கிய கை
மேலுக்கு - உடம்புக்கு
மொகர, மூஞ்சி – முகம்
மொகரக் கட்ட – முகக் கட்டு
மொண்ண, மொழுக்க - வழுக்கை
மொளி - மொழி, கணு, கைகால்களின் முட்டி எலும்பு




சொல்லத் தவறியவை

தவறி விழுந்த
மீனவன் உடலைப்
பொறுப்பாய்க் கொணர்ந்து
கரையில் சேர்த்தது
#கடல்

சிரிப்பது எப்படி?



சிரிப்பது எப்படி எனக்
கால ஊழியில் மறந்த மனிதன்
தேடியலைய வேண்டாம்;
அங்கேயிங்கே வைத்துவிட்டோம்
பெரிய பெரிய சிலை
#சிரிக்கும்_புத்தர் !

வட்டம் மறந்த சப்பாத்திகள்

அம்மா சுட்ட
வட்டம் மறந்த சப்பாத்திகள்
தட்டில் விழும்போது
மறந்துபோன ஞாபகமூட்டல்
மனதை அறுக்கின்றது!
 'கைவலிக்குத் தைலம்
 வாங்கித் தா மகனே!'

ஒய்யாரமா ஒரு தந்தி வேலை

அப்பாவிடமிருந்து கடிதம் :

பெரிய ஊருல வேலை
ஒடம்ப பாத்துக்க மவனே!
வரணுமுன்னு விருப்பம்தான்
ஒனக்கு ஏன் வீண்செலவு;
வீராவரம் போயி
தந்தி ஆபீசு பாத்தேன்
எம் மகன் ஒன்னைப்போல
ஒசந்த சேரில ஒரு தம்பி
ஒய்யாரமா அடிச்ச தந்தி வேல
அதுதான நீயின்னு
மனம் நெறஞ்சு போச்சி! ...

நாமம் போட்ட ஒருத்தன்தான்
ரொம்பவே நச்சரிச்சான்
இல்லைன்னா கொஞ்ச நேரம்
கூடுதலா இருந்திருப்பேன்.
அப்புறமா அவனும்கூட
தந்தி அடிக்கிற பையனிடம்
பணிவாப் பேசுனதுல
மனம் குளுந்து போச்சு எம் மவனே;
அவனவிட ஒசத்தியாமே வேலயில நீ!

மாடசாமி எஞ்சாமி
எம்மவன ஒசத்திப்புட்டான்!

பூனையின் தவம்

கனகமூலம் சந்தையின்
கால்கிலோ கொழிஞ்சம்பாறை
காலிரண்டின் நடுவே அரிவாள்மனையில்;
அருகே,
கண்களிரண்டும் மோன நிலை
துறவுக்கோலப் பூனை!
நான் ஞானி!
நான் சைவன் இன்றுமுதல்!

சரகர சரகர…
தோல் செதில் உரசப்பட்டு,
கரீச் கரீச்…
முதுகிலும் விலாவிலும் செவுள் அறுபட்டுத்
தூர விழுந்தன;
காக்கைக் கூட்டம்
கூச்சலும் கரைச்சலுமாய்,
ஆளுக்கொன்று எனத் தூக்கிப் பறந்தன;
சீ சீ இந்தக் காக்கைகள்
ஆலாய்ப் பறக்கின்ற இழிபிறவிகள்!
பூனை மோனத் தவத்தில்!

 சொத்தென்று வீசப்பட்ட குடர்,
நாய்களின் ஊளைச் சத்தம் காதில்,
கிடைத்த நாய் ஓடியது
கிடைக்காதது துரத்தியது;
சீ சீ இந்த நாய்கள்
அலைந்து திரியும் ஈனப் பிறவிகள்!
பூனை மோனத் தவத்தில்!

 கரகர கரகர…
 மீன்தலை அறுபட்டுக்
காற்றில் மிதந்துக்
கீழே வரும்முன்
அது இருந்தது பூனையின் வாயில்;
ஞானிக்கு விடுதலை!

Friday, June 14, 2019

நெல்லைத் தமிழ் - பகுதி 1

நெல்லைத் தமிழ்ப் பேச்சே ஒரு கோளாறாகத் தான் இருக்கும். வாருங்கள்! சில சொற்கள் பழகுவோம்!

1- வெலம் - ஆங்காரம், ஆவேசம் "ராமசாமி பொஞ்சாதிக்கு இவ்ளா 'வெலம்' கூடாதுப்பே"

 2. கண்டமாணி = மனம் போனபடி "கண்டமாணிக்குச் செலவு பண்ணிட்டுக் கண்ணத் தள்ளிட்டு நிக்காதிய.."

 3. கத்திக்கிட்டு - சினந்து கசந்து வெளியேறு முருகன் மாம்பழம் கிடைக்காததால் தந்தையிடம் கத்திகிட்டுப் போய்விட்டான்

 4. கொடக்கம் - வளைவுநெளிவு, தகிடுதத்தம் (குடங்கம் மரூவு) டாக்டர் பயலுவோ துட்டுக்காவச்சுட்டி என்ன கொடக்கம்னாலும் செய்யுவானுவோ

 5. மொதண்டாதிக - முரண்டு(அடம்) பிடிக்காதீர் “அண்ணாச்சி! நீங்க ஒரேடியா மொதொண்டாதிக. இப்பதக்கி நெலத்துக்கு இதுதான் வெல.."

 6. வைக்கச்சண்டு - வைக்கோல் சண்டு, கூளம், பதர் “பலவேசம் இருக்கானே, கட்டேலே போவான், ஒரு வைக்கச்சண்டுக்கும் பெறாத பய.."

 7. மானாங்கண்ணி - ஒழுங்கீனம் (மானாங்காணி மரூவு) "இந்தா, எங்கிட்ட வம்புவளக்காத. அப்றமேட்டு நான் மானாங்கண்ணியா பேசிப்புடுவேன்"

 8. வழிச்சுக் கொட்டு - மொத்தமாக் காலியாக்கு "மருதூர்க்காரி குடும்பத்தோட வந்து வழிச்சுக் கொட்டித் தின்னுட்டுப் போய்ட்டா.."

 9. வடிச்சுக் கொட்டு - சமையலறையே தஞ்சம்
"ஒங்க மொத்தக் குடும்பத்துக்கும் வடிச்சுக் கொட்டத்தான் ஏமாளி நா இருக்கேனே.."

 10. நீத்தண்ணி - நீராகாரம்
" பால் இல்லைனா என்ன. . என் புள்ளெகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக்கிடும்" என்றார் பிள்ளைவாள்.

 11. நீச்சத்தண்ணி - நீராகாரம் (நீர்த்த+தண்ணீர்) (நீச்சு, நீர்த்து என்பதின் மரூவு)
" கஞ்சி இல்லாட்டி ஒரு வாய் நீச்சத்தண்ணியாவது குடு தாயி. . " கேட்டாள் மாடத்தி. குறிப்பு: நகரம்: நீத்தண்ணி = நீர்+தண்ணீர் ? கிராமம்: நீச்சத்தண்ணி = நீர்த்த(மரூவு)+தண்ணீர். சோற்றில் ஊற்றிய நீர் நீர்த்துப் போவதாலேயே நீராகாரம் ஆகிறது. கிராம மக்களின் உச்சரிப்பு கொச்சையாகத் தெரிந்தாலும், கிராமங்கள்தான் தமிழின் தொன்மையை அடைகாத்து வருகின்றன.

 12. பொசங்கெட்டு - மனம் திரிந்து
 "அவன்தான் பொசங்கெட்டுப் போய் பேசுறாம்னா நீயுமாடே ஒத்து ஊதுற..."

13. பொசமுட்டிட்டு - பொசம் முட்டிக்கொண்டு

 14. இம்பிட்டு, அம்பிட்டு, எம்பிட்டு = இவ்வளவு, அவ்வளவு, எவ்வளவு. (இம்மட்டு, அம்மட்டு, எம்மட்டு ஆகியவற்றின் மரூவு)
இ+மட்டு=இம்மட்டு (தோன்றல் விகாரம்)
 “இம்பிட்டுஞ் செஞ்சிட்டுத் திருதிருன்னு முழியப் பாரு” = இவ்வளவும் செய்துவிட்டுத் திருதிருவென்று விழிப்பதைப் பார்

 15. சீக்காளி - நோயாளி (சீக்கு+ஆள்+இ) சீக்கு - நோய்; சீழ்க்கை = நோய்
தொடர்ந்து நோயாளியாக இருப்பவரைச் சீக்காளி என்பார்.
"ராமசாமியல்லாம் கூப்புடாத. அவென் ஒரு சீக்காளிப்பய. ஒரு சோலிக்கும் ஒதவமாட்டான்"

16. சேக்காளி = நண்பன்
 சேர்க்கை+ஆள்+இ = சேர்க்கையாளி, சேக்காளி என மருவியது.
மற்றொருவனோடு சேர்ந்து நட்பாகும் ஒருவனைச் சேக்காளி என்கின்றனர்.
 "உன் சேக்காளி வந்துட்டுப் போனான்."  "அவன் சேக்காளிதான நீயி. புத்தியும் அவனப்போலத்தான்..."

 17. கூட்டாளிங்க = நண்பர்கள் கூட்டு+ஆள்+இ =பலரும் நட்போடு கூடும்போது அவர்களைக் கூட்டாளிகள் என்றனர். பொதுவாகப் பலர்பாலிலேயே இச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.
"குறிச்சி மாடசாமிக் கோயிலு கொடைக்கி கூட்டாளிங்கூட போன எடத்துல வம்பு வளத்திருக்கான்."

 18. தொம்பர = (வேலையற்று) ஊர் சுற்றுபவன்/ள் வாயாடித் தொம்பர = ஊர் சுற்றி வம்பு பேசித் திரிபவன்/ள்
"ஆத்தா, மேல ஊரு காளியம்மாவ எனக்கு பொண்ணு பாக்க போவேண்டா. அவ ஒரு வாயாடித் தொம்பர. அப்பறம் வம்பு தீத்தே நம்ம வாநாள் தீஞ்சிரும்" (குறிப்பு: தொம்பறை = தானியக் களஞ்சியம், குதிர். தொம்பரை அதிகப் பயன்பாடு காரணமாகத் 'தொம்பறை'க்குப் பதில் குலுக்கை, குதிலு(குதிர்) பயன்படுத்துகின்றனர்)

 19. துப்புக் கெட்டவன் = தெரிந்து செயல்வகை செய்யாதவன். துப்பு = துப்புதல் எனும் செயல்வகை. ( துப்பு = திறமை, வலிமை, அறிவு, உளவு எனப் பொருள்தரும் என்றாலும், துப்புதல் மற்றும் உளவு பார்த்தலோடு பயன்பாட்டை நிறுத்திக் கொள்கிறார்கள்)
 "பிச்சாண்டி மவன் துப்புக்கெட்டுப்போயி படிச்ச மூதியக் கட்டிட்டு வந்து நிக்கான். நாலு கை வேல பாத்தாத்தான விவசாயி மிச்சம் பாக்க முடியும்"
"ஏல கண்டமானிக்குத் துப்பிக்கிட்டு அலயாத. உனக்கு உங்கப்பன் சப்பாணின்னு பேரு வெச்சதுக்கு துப்பாணின்னு வெச்சிருக்கலாம்.

20. கங்குகரை - அளவு, எண்ணிக்கை நெல்லை எழுத்தாளர்களின் கதைகளில் இச்சொல்லைக் காணமுடியும். பேச்சு வழக்கில் இல்லை. 'அவன் வாழ்வுக்கு என்று மாசம் நான்கு ரூபாய் சம்பாவனை கொடுப்பதாக பாதிரியார் வாக்களித்ததில் கோனாருக்கு மகிழ்ச்சி கங்குகரையில்லாமல் பிறந்தது. ' - புதுமைப் பித்தன் 'கங்கு கரையில்லாத அந்தத் தேரிக் காட்டில். . ' - தாமரை செந்தூர் பாண்டி

 21. சொக்காரங்க - சொந்தக்காரர்கள், உறவினர் சொந்தக்காரங்க என்ற நேரடிச் சொல்லின் மரூவு. " ஏப்பே. . சொக்காரங்க எல்லாம் வந்து பட்டம் கட்டிக்கங்க. . ." வெட்டியான் சங்கை ஊதி அறிவிப்பு கொடுத்தான். இறந்துபோன ராமசாமியின் உறவினரும், சிறு குழந்தைகளும் வெட்டியானிடம் ஔஇஷஷபட்டத்தை வாங்கித் தலையில் வைத்துக் கொண்டனர். பட்டம் - சிறிய பனைஓலைக் கொட்டான். உள்ளே கொஞ்சம் உதிரிப்பூவை போட்டு வைத்திருப்பார்கள்.

22. வேசடை - மனவேதனையில் தளர்ந்து போதல் வேசடை = வேதனை + சடைவு " தண்ணியில்லாம பயிரெல்லாம் காஞ்சு கெடக்குன்னு நானே வேசடையில் இருக்கேன். இப்ப எதுக்கு ஆத்தா எனக்கு கல்யாணம்.." பச்சமுத்து அம்மாவிடம் வேதனைப்பட்டான்.

 23. பண்ணுதல் - சமைத்தல் பண்ணுதல் என்பதற்கு திருத்தி அமைத்தல், அலங்கரித்தல், இசைப்படுத்துதல் என்று பொருள் உண்டு. ஆயினும், "நீ என்ன பண்ணுகிறாய்? = நீ என்ன செய்கிறாய்?" என்ற பொதுபயன்பாட்டையே அதிகம் கொண்டுள்ளது. நெல்லைச் சிற்றூர்களில் சமைத்தல் என்ற பொருளில் வெகு எளிதாகப் பயன்படுத்தப்படுகிறது. "ஏட்டீ கோமு, உங்க வீட்டுல என்ன பண்ணீங்க?" இது என்ன கேள்வி? வீட்டில் ஆயிரம் நடந்திருக்கும். இந்தக் கோமதி என்ன சொல்லப் போகிறாள் என்றுதானே எண்ணுவோம்? "எங்க வீட்டுல கத்தரிக்காக் கொழம்பு." என்று கோமதியிடமிருந்துப் பதில் உடனடியாக வருகிறது. சமைத்தல் என்பதே பண்ணுதலின் நேரடி பொருளாகக் கொள்ளப்பட்டமை வியப்பாக இருந்தது.

 24. மேலுக்கு - உடம்புக்கு மேலுக்கு - மேலோட்டமான உடல் சார்ந்த நிலை. 'பண்ணுதல்' என்பது நெல்லைப் பெண்களிடையே 'சமைத்தல்' என வழக்கில் இருப்பதுபோல 'மேலுக்கு' என்ற பொதுசொல் 'மேல் உடம்பு' எனும் குறிப்புப் பெயராகப் பயனுறுகிறது. "ஏலே, பொழுது போயி கூதலு அடிக்கிது. மேலுக்கு ஒண்ணியும் போத்திக்காம எங்க கெளம்பிட்ட?" என முருகாயி மகனைக் கண்டித்தாள். "என்னவே.. ஒருமாதிரியா இருக்கீரு...மேலுக்கு என்னாச்சி. வைத்தியரப் பாக்க வேண்டிய தானே" என்று சுடலைமுத்து தன் நண்பரிடம் கேட்டார்.

 25. தொங்கட்டான் - காதணி (ஜிமிக்கி) 'தொங்கட்டான்' என்பது எவ்வளவு எளிய பொருள் பொதிந்த சொல்லாகயிருக்கிறது.. குதம்பை, குழை, கடிப்பிணை என்று பனையோலையாலும், சங்கினாலும் செய்த காதணிகளை அணிந்தனர் பண்டைய தமிழர். அண்மைக் காலங்களில்கூடத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வயது முதிர்ந்தோர் பாம்படம் அணிவதும் வழக்கமாக இருந்துள்ளது. எல்லாப் பெயர்களும் காரணத்தோடுதான். "நேத்துதா செல்விக்குக் கம்மலும் தொங்கட்டானும் கூலக்கடை பசார்ல வேங்கிட்டு வந்து போட்டன். வயசுக்கு வந்த புள்ள ஈக்குச்சிய சொருவிட்டு நின்னா நல்லா இருக்காதில"

 26. யாரூங்குவ - யார் என்குவை? = யார் எனக் கேட்பாய்? இவன் யார் என்குவை ஆயின், இவனே. - புறம் 13 நெல்லைச் சிற்றூர்களில் 'யாரூங்குவ' என்பது இனிய தமிழின் ஓர் இன்புறும் சொல். இருவருக்கு இடையேயான உறவு குறித்த வினாவாகவே இது எழுப்பப்படுகிறது. "மாடசாமிக்கி கொளத்தூரான் யாரூங்குவ? ரெண்டுபேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு சொக்காரங்கல்ல" யாரும்ப, யாருன்னுவ - யார் என்பாய்? யாருங்கிற - யார் என்கிறாய்? ஊர்ப்புறங்களில் 'யாரும்ப' என்றும், நகர்ப்புறங்களில் 'யாருன்னுவ', 'யாருங்கிற' என்றுமே அது வினவப்படுகிறது.

 27. தெம்மாடி - உதவாக்கரை "அவன் ஒரு தெம்மாடிப் பய. பொண்டாட்டிய வெச்சுக் காப்பாத்தத் தெரியாதவன்" மூலமோ, வேர்ச்சொல்லோ இல்லாததால் இது மிகப் பிற்காலத்தில் தமிழக வந்து வழங்கிய சொல்லாகவேணும். 'திம்மன்' என்றால் ஆண்குரங்கு. திம்மன் என்பதன் திரிபாக தெம்மன்+ஆடி=தெம்மாடி ஆகியிருக்கவும் கூடும். "பொம்மனோ திம்மனோ..அதோ, இரண்டுபேர் போனாங்க" என்பதில் தேவையற்ற இருவர் என்பதே பொருள் ஆவதையும் நோக்குக. பொம்மனோடு சேர்த்துப் புழங்குவதால் 'திம்மன்' என்பது நாயக்கர்கள் காலத்துச் சொல்லாகவும் இருக்கலாம். நாஞ்சில் நாட்டில் அதிகப் புழக்கத்தில் 'உதவாக்கரை' என்ற பொருளிலேயே வழங்குகிறது. ஆனால், நெல்லையில் 'ஆண்மையற்றவன்' என்ற இழிவுச் சொல்லாகப் பயனில் உள்ளது. (குறிப்பு: தெம்மாங்கு என்பது இனிய தமிழ்ச் சொல். அது வேறு)

 28. நொள்ள நொட்ட - நொள்ளை நொட்டை = எல்லாவற்றையும் குறை சொல்லித் திரிபவன். நொள்ளை - குருடு; நொட்டை - குறை சொல்லுதல் 'நொள்ளை நொட்டை' என்பது 'நொள்ள நொட்ட' ஆகப் பேசப்படுகிறது. 'ஐ' என்பது இரண்டு மாத்திரை ஒலிக்குறிப்பு ஆனாலும் , செய்யுளில் ஒரு மாத்திரையாகக் (குறில் ஆக) கொள்ளலாம் என்ற விதி உண்டுதானே. "எந்த மாட்டக் காணிச்சாலும் நொள்ள நொட்டசொல்லுததே வேல ஒனக்கு. உருப்படியா வண்டிமாடு வேங்கிக்கெடமாட்ட நீயி" சந்தையில் வண்டிமாடுகள் வாங்க வந்த மாடசாமியிடம் மாட்டுத் தரகர் சலித்துக் கொண்டார். எல்லா மாட்டையும் குறை சொல்பவன் எந்த மாட்டையும் வாங்கமாட்டான் என்பதுதான் அதன் பொருள்.

 29 லெக்கு - திக்கு, திசை, அடையாளம் லெக்கு = இலக்கு எனும் சொல்லின் பேச்சு வழக்கு. "அவனடியில் நதி ஒன்று ஓடியது. ஆனால், லெக்கு புரியவிலலை. சாவதானமாகக் கண்களை வெகுதூரம் ஓட்டினான்" - புதுமைப் பித்தன் 'இலக்கு' எனும் சொல் மனதில் உறுதியாக கொள்ளும் 'குறிக்கோள்' எனவும் கொள்ளப்படும். ஆயினும், 'அடையாளம்' எனும் இடக் குறிப்புச் சொல்லாகவே அதிகம் பயன்படுத்தப் படுகிறது. நெல்லைப் பேச்சு மொழி: "பூநாத புள்ள தோட்டத்துல பெரிய நாவ மரத்துக்கு அடீல லெக்கு வெச்சிருக்கேன். அங்கணதான் நகய பொதச்சி வெச்சிருக்கேன்." போலீஸ்காரரிடம் உண்மையைக் கக்கிவிட்டான். "எந்த லெக்குல அடிக்கே நீயி. குப்பாத்தா வீட்டுக் கூர மேலயா அடிப்ப. இப்ப யாரு போயி எடுக்கது", கம்புக் குச்சி விளையாடிய சிறுவர் பேசினர்.

 30. வக்கணை - திறமையான பேச்சு. கேலி, கிண்டல், வெற்றுத்துதி, நிந்தனை என இடத்துக்குதக்கவாறு பேச்சின் பொருள் மாறும். "வக்கணையால் இன்பம் வருமோ?" - தாயுமானவர் : பராபரக்கண்ணி 213 நெல்லைப் பேச்சு: “ஏலே… ஒன் வக்கணையெல்லாம் இருக்கட்டுமிலே, என்னா, எருமை அத்துக்கிட்டு ஓடுது? மறிச்சுப் பிடிச்சா?” என்றாள் கிழவி. "வக்கணையாப் பேசுனா காரியம் ஆயிடுமாவே. உம்ம சொல்லுலா இங்க செலவாகாது. தெரிஞ்சிக்கிடும்" பட்டா கேட்டுவந்த விவசாயியிடம் தலையாரி எடுத்துரைத்தான்.


Thursday, April 18, 2019

பிறமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் அறிய, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

👇

தமிழ் அகராதி