அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Friday, June 14, 2019

நெல்லைத் தமிழ் - பகுதி 1

நெல்லைத் தமிழ்ப் பேச்சே ஒரு கோளாறாகத் தான் இருக்கும். வாருங்கள்! சில சொற்கள் பழகுவோம்!

1- வெலம் - ஆங்காரம், ஆவேசம் "ராமசாமி பொஞ்சாதிக்கு இவ்ளா 'வெலம்' கூடாதுப்பே"

 2. கண்டமாணி = மனம் போனபடி "கண்டமாணிக்குச் செலவு பண்ணிட்டுக் கண்ணத் தள்ளிட்டு நிக்காதிய.."

 3. கத்திக்கிட்டு - சினந்து கசந்து வெளியேறு முருகன் மாம்பழம் கிடைக்காததால் தந்தையிடம் கத்திகிட்டுப் போய்விட்டான்

 4. கொடக்கம் - வளைவுநெளிவு, தகிடுதத்தம் (குடங்கம் மரூவு) டாக்டர் பயலுவோ துட்டுக்காவச்சுட்டி என்ன கொடக்கம்னாலும் செய்யுவானுவோ

 5. மொதண்டாதிக - முரண்டு(அடம்) பிடிக்காதீர் “அண்ணாச்சி! நீங்க ஒரேடியா மொதொண்டாதிக. இப்பதக்கி நெலத்துக்கு இதுதான் வெல.."

 6. வைக்கச்சண்டு - வைக்கோல் சண்டு, கூளம், பதர் “பலவேசம் இருக்கானே, கட்டேலே போவான், ஒரு வைக்கச்சண்டுக்கும் பெறாத பய.."

 7. மானாங்கண்ணி - ஒழுங்கீனம் (மானாங்காணி மரூவு) "இந்தா, எங்கிட்ட வம்புவளக்காத. அப்றமேட்டு நான் மானாங்கண்ணியா பேசிப்புடுவேன்"

 8. வழிச்சுக் கொட்டு - மொத்தமாக் காலியாக்கு "மருதூர்க்காரி குடும்பத்தோட வந்து வழிச்சுக் கொட்டித் தின்னுட்டுப் போய்ட்டா.."

 9. வடிச்சுக் கொட்டு - சமையலறையே தஞ்சம்
"ஒங்க மொத்தக் குடும்பத்துக்கும் வடிச்சுக் கொட்டத்தான் ஏமாளி நா இருக்கேனே.."

 10. நீத்தண்ணி - நீராகாரம்
" பால் இல்லைனா என்ன. . என் புள்ளெகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக்கிடும்" என்றார் பிள்ளைவாள்.

 11. நீச்சத்தண்ணி - நீராகாரம் (நீர்த்த+தண்ணீர்) (நீச்சு, நீர்த்து என்பதின் மரூவு)
" கஞ்சி இல்லாட்டி ஒரு வாய் நீச்சத்தண்ணியாவது குடு தாயி. . " கேட்டாள் மாடத்தி. குறிப்பு: நகரம்: நீத்தண்ணி = நீர்+தண்ணீர் ? கிராமம்: நீச்சத்தண்ணி = நீர்த்த(மரூவு)+தண்ணீர். சோற்றில் ஊற்றிய நீர் நீர்த்துப் போவதாலேயே நீராகாரம் ஆகிறது. கிராம மக்களின் உச்சரிப்பு கொச்சையாகத் தெரிந்தாலும், கிராமங்கள்தான் தமிழின் தொன்மையை அடைகாத்து வருகின்றன.

 12. பொசங்கெட்டு - மனம் திரிந்து
 "அவன்தான் பொசங்கெட்டுப் போய் பேசுறாம்னா நீயுமாடே ஒத்து ஊதுற..."

13. பொசமுட்டிட்டு - பொசம் முட்டிக்கொண்டு

 14. இம்பிட்டு, அம்பிட்டு, எம்பிட்டு = இவ்வளவு, அவ்வளவு, எவ்வளவு. (இம்மட்டு, அம்மட்டு, எம்மட்டு ஆகியவற்றின் மரூவு)
இ+மட்டு=இம்மட்டு (தோன்றல் விகாரம்)
 “இம்பிட்டுஞ் செஞ்சிட்டுத் திருதிருன்னு முழியப் பாரு” = இவ்வளவும் செய்துவிட்டுத் திருதிருவென்று விழிப்பதைப் பார்

 15. சீக்காளி - நோயாளி (சீக்கு+ஆள்+இ) சீக்கு - நோய்; சீழ்க்கை = நோய்
தொடர்ந்து நோயாளியாக இருப்பவரைச் சீக்காளி என்பார்.
"ராமசாமியல்லாம் கூப்புடாத. அவென் ஒரு சீக்காளிப்பய. ஒரு சோலிக்கும் ஒதவமாட்டான்"

16. சேக்காளி = நண்பன்
 சேர்க்கை+ஆள்+இ = சேர்க்கையாளி, சேக்காளி என மருவியது.
மற்றொருவனோடு சேர்ந்து நட்பாகும் ஒருவனைச் சேக்காளி என்கின்றனர்.
 "உன் சேக்காளி வந்துட்டுப் போனான்."  "அவன் சேக்காளிதான நீயி. புத்தியும் அவனப்போலத்தான்..."

 17. கூட்டாளிங்க = நண்பர்கள் கூட்டு+ஆள்+இ =பலரும் நட்போடு கூடும்போது அவர்களைக் கூட்டாளிகள் என்றனர். பொதுவாகப் பலர்பாலிலேயே இச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.
"குறிச்சி மாடசாமிக் கோயிலு கொடைக்கி கூட்டாளிங்கூட போன எடத்துல வம்பு வளத்திருக்கான்."

 18. தொம்பர = (வேலையற்று) ஊர் சுற்றுபவன்/ள் வாயாடித் தொம்பர = ஊர் சுற்றி வம்பு பேசித் திரிபவன்/ள்
"ஆத்தா, மேல ஊரு காளியம்மாவ எனக்கு பொண்ணு பாக்க போவேண்டா. அவ ஒரு வாயாடித் தொம்பர. அப்பறம் வம்பு தீத்தே நம்ம வாநாள் தீஞ்சிரும்" (குறிப்பு: தொம்பறை = தானியக் களஞ்சியம், குதிர். தொம்பரை அதிகப் பயன்பாடு காரணமாகத் 'தொம்பறை'க்குப் பதில் குலுக்கை, குதிலு(குதிர்) பயன்படுத்துகின்றனர்)

 19. துப்புக் கெட்டவன் = தெரிந்து செயல்வகை செய்யாதவன். துப்பு = துப்புதல் எனும் செயல்வகை. ( துப்பு = திறமை, வலிமை, அறிவு, உளவு எனப் பொருள்தரும் என்றாலும், துப்புதல் மற்றும் உளவு பார்த்தலோடு பயன்பாட்டை நிறுத்திக் கொள்கிறார்கள்)
 "பிச்சாண்டி மவன் துப்புக்கெட்டுப்போயி படிச்ச மூதியக் கட்டிட்டு வந்து நிக்கான். நாலு கை வேல பாத்தாத்தான விவசாயி மிச்சம் பாக்க முடியும்"
"ஏல கண்டமானிக்குத் துப்பிக்கிட்டு அலயாத. உனக்கு உங்கப்பன் சப்பாணின்னு பேரு வெச்சதுக்கு துப்பாணின்னு வெச்சிருக்கலாம்.

20. கங்குகரை - அளவு, எண்ணிக்கை நெல்லை எழுத்தாளர்களின் கதைகளில் இச்சொல்லைக் காணமுடியும். பேச்சு வழக்கில் இல்லை. 'அவன் வாழ்வுக்கு என்று மாசம் நான்கு ரூபாய் சம்பாவனை கொடுப்பதாக பாதிரியார் வாக்களித்ததில் கோனாருக்கு மகிழ்ச்சி கங்குகரையில்லாமல் பிறந்தது. ' - புதுமைப் பித்தன் 'கங்கு கரையில்லாத அந்தத் தேரிக் காட்டில். . ' - தாமரை செந்தூர் பாண்டி

 21. சொக்காரங்க - சொந்தக்காரர்கள், உறவினர் சொந்தக்காரங்க என்ற நேரடிச் சொல்லின் மரூவு. " ஏப்பே. . சொக்காரங்க எல்லாம் வந்து பட்டம் கட்டிக்கங்க. . ." வெட்டியான் சங்கை ஊதி அறிவிப்பு கொடுத்தான். இறந்துபோன ராமசாமியின் உறவினரும், சிறு குழந்தைகளும் வெட்டியானிடம் ஔஇஷஷபட்டத்தை வாங்கித் தலையில் வைத்துக் கொண்டனர். பட்டம் - சிறிய பனைஓலைக் கொட்டான். உள்ளே கொஞ்சம் உதிரிப்பூவை போட்டு வைத்திருப்பார்கள்.

22. வேசடை - மனவேதனையில் தளர்ந்து போதல் வேசடை = வேதனை + சடைவு " தண்ணியில்லாம பயிரெல்லாம் காஞ்சு கெடக்குன்னு நானே வேசடையில் இருக்கேன். இப்ப எதுக்கு ஆத்தா எனக்கு கல்யாணம்.." பச்சமுத்து அம்மாவிடம் வேதனைப்பட்டான்.

 23. பண்ணுதல் - சமைத்தல் பண்ணுதல் என்பதற்கு திருத்தி அமைத்தல், அலங்கரித்தல், இசைப்படுத்துதல் என்று பொருள் உண்டு. ஆயினும், "நீ என்ன பண்ணுகிறாய்? = நீ என்ன செய்கிறாய்?" என்ற பொதுபயன்பாட்டையே அதிகம் கொண்டுள்ளது. நெல்லைச் சிற்றூர்களில் சமைத்தல் என்ற பொருளில் வெகு எளிதாகப் பயன்படுத்தப்படுகிறது. "ஏட்டீ கோமு, உங்க வீட்டுல என்ன பண்ணீங்க?" இது என்ன கேள்வி? வீட்டில் ஆயிரம் நடந்திருக்கும். இந்தக் கோமதி என்ன சொல்லப் போகிறாள் என்றுதானே எண்ணுவோம்? "எங்க வீட்டுல கத்தரிக்காக் கொழம்பு." என்று கோமதியிடமிருந்துப் பதில் உடனடியாக வருகிறது. சமைத்தல் என்பதே பண்ணுதலின் நேரடி பொருளாகக் கொள்ளப்பட்டமை வியப்பாக இருந்தது.

 24. மேலுக்கு - உடம்புக்கு மேலுக்கு - மேலோட்டமான உடல் சார்ந்த நிலை. 'பண்ணுதல்' என்பது நெல்லைப் பெண்களிடையே 'சமைத்தல்' என வழக்கில் இருப்பதுபோல 'மேலுக்கு' என்ற பொதுசொல் 'மேல் உடம்பு' எனும் குறிப்புப் பெயராகப் பயனுறுகிறது. "ஏலே, பொழுது போயி கூதலு அடிக்கிது. மேலுக்கு ஒண்ணியும் போத்திக்காம எங்க கெளம்பிட்ட?" என முருகாயி மகனைக் கண்டித்தாள். "என்னவே.. ஒருமாதிரியா இருக்கீரு...மேலுக்கு என்னாச்சி. வைத்தியரப் பாக்க வேண்டிய தானே" என்று சுடலைமுத்து தன் நண்பரிடம் கேட்டார்.

 25. தொங்கட்டான் - காதணி (ஜிமிக்கி) 'தொங்கட்டான்' என்பது எவ்வளவு எளிய பொருள் பொதிந்த சொல்லாகயிருக்கிறது.. குதம்பை, குழை, கடிப்பிணை என்று பனையோலையாலும், சங்கினாலும் செய்த காதணிகளை அணிந்தனர் பண்டைய தமிழர். அண்மைக் காலங்களில்கூடத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வயது முதிர்ந்தோர் பாம்படம் அணிவதும் வழக்கமாக இருந்துள்ளது. எல்லாப் பெயர்களும் காரணத்தோடுதான். "நேத்துதா செல்விக்குக் கம்மலும் தொங்கட்டானும் கூலக்கடை பசார்ல வேங்கிட்டு வந்து போட்டன். வயசுக்கு வந்த புள்ள ஈக்குச்சிய சொருவிட்டு நின்னா நல்லா இருக்காதில"

 26. யாரூங்குவ - யார் என்குவை? = யார் எனக் கேட்பாய்? இவன் யார் என்குவை ஆயின், இவனே. - புறம் 13 நெல்லைச் சிற்றூர்களில் 'யாரூங்குவ' என்பது இனிய தமிழின் ஓர் இன்புறும் சொல். இருவருக்கு இடையேயான உறவு குறித்த வினாவாகவே இது எழுப்பப்படுகிறது. "மாடசாமிக்கி கொளத்தூரான் யாரூங்குவ? ரெண்டுபேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு சொக்காரங்கல்ல" யாரும்ப, யாருன்னுவ - யார் என்பாய்? யாருங்கிற - யார் என்கிறாய்? ஊர்ப்புறங்களில் 'யாரும்ப' என்றும், நகர்ப்புறங்களில் 'யாருன்னுவ', 'யாருங்கிற' என்றுமே அது வினவப்படுகிறது.

 27. தெம்மாடி - உதவாக்கரை "அவன் ஒரு தெம்மாடிப் பய. பொண்டாட்டிய வெச்சுக் காப்பாத்தத் தெரியாதவன்" மூலமோ, வேர்ச்சொல்லோ இல்லாததால் இது மிகப் பிற்காலத்தில் தமிழக வந்து வழங்கிய சொல்லாகவேணும். 'திம்மன்' என்றால் ஆண்குரங்கு. திம்மன் என்பதன் திரிபாக தெம்மன்+ஆடி=தெம்மாடி ஆகியிருக்கவும் கூடும். "பொம்மனோ திம்மனோ..அதோ, இரண்டுபேர் போனாங்க" என்பதில் தேவையற்ற இருவர் என்பதே பொருள் ஆவதையும் நோக்குக. பொம்மனோடு சேர்த்துப் புழங்குவதால் 'திம்மன்' என்பது நாயக்கர்கள் காலத்துச் சொல்லாகவும் இருக்கலாம். நாஞ்சில் நாட்டில் அதிகப் புழக்கத்தில் 'உதவாக்கரை' என்ற பொருளிலேயே வழங்குகிறது. ஆனால், நெல்லையில் 'ஆண்மையற்றவன்' என்ற இழிவுச் சொல்லாகப் பயனில் உள்ளது. (குறிப்பு: தெம்மாங்கு என்பது இனிய தமிழ்ச் சொல். அது வேறு)

 28. நொள்ள நொட்ட - நொள்ளை நொட்டை = எல்லாவற்றையும் குறை சொல்லித் திரிபவன். நொள்ளை - குருடு; நொட்டை - குறை சொல்லுதல் 'நொள்ளை நொட்டை' என்பது 'நொள்ள நொட்ட' ஆகப் பேசப்படுகிறது. 'ஐ' என்பது இரண்டு மாத்திரை ஒலிக்குறிப்பு ஆனாலும் , செய்யுளில் ஒரு மாத்திரையாகக் (குறில் ஆக) கொள்ளலாம் என்ற விதி உண்டுதானே. "எந்த மாட்டக் காணிச்சாலும் நொள்ள நொட்டசொல்லுததே வேல ஒனக்கு. உருப்படியா வண்டிமாடு வேங்கிக்கெடமாட்ட நீயி" சந்தையில் வண்டிமாடுகள் வாங்க வந்த மாடசாமியிடம் மாட்டுத் தரகர் சலித்துக் கொண்டார். எல்லா மாட்டையும் குறை சொல்பவன் எந்த மாட்டையும் வாங்கமாட்டான் என்பதுதான் அதன் பொருள்.

 29 லெக்கு - திக்கு, திசை, அடையாளம் லெக்கு = இலக்கு எனும் சொல்லின் பேச்சு வழக்கு. "அவனடியில் நதி ஒன்று ஓடியது. ஆனால், லெக்கு புரியவிலலை. சாவதானமாகக் கண்களை வெகுதூரம் ஓட்டினான்" - புதுமைப் பித்தன் 'இலக்கு' எனும் சொல் மனதில் உறுதியாக கொள்ளும் 'குறிக்கோள்' எனவும் கொள்ளப்படும். ஆயினும், 'அடையாளம்' எனும் இடக் குறிப்புச் சொல்லாகவே அதிகம் பயன்படுத்தப் படுகிறது. நெல்லைப் பேச்சு மொழி: "பூநாத புள்ள தோட்டத்துல பெரிய நாவ மரத்துக்கு அடீல லெக்கு வெச்சிருக்கேன். அங்கணதான் நகய பொதச்சி வெச்சிருக்கேன்." போலீஸ்காரரிடம் உண்மையைக் கக்கிவிட்டான். "எந்த லெக்குல அடிக்கே நீயி. குப்பாத்தா வீட்டுக் கூர மேலயா அடிப்ப. இப்ப யாரு போயி எடுக்கது", கம்புக் குச்சி விளையாடிய சிறுவர் பேசினர்.

 30. வக்கணை - திறமையான பேச்சு. கேலி, கிண்டல், வெற்றுத்துதி, நிந்தனை என இடத்துக்குதக்கவாறு பேச்சின் பொருள் மாறும். "வக்கணையால் இன்பம் வருமோ?" - தாயுமானவர் : பராபரக்கண்ணி 213 நெல்லைப் பேச்சு: “ஏலே… ஒன் வக்கணையெல்லாம் இருக்கட்டுமிலே, என்னா, எருமை அத்துக்கிட்டு ஓடுது? மறிச்சுப் பிடிச்சா?” என்றாள் கிழவி. "வக்கணையாப் பேசுனா காரியம் ஆயிடுமாவே. உம்ம சொல்லுலா இங்க செலவாகாது. தெரிஞ்சிக்கிடும்" பட்டா கேட்டுவந்த விவசாயியிடம் தலையாரி எடுத்துரைத்தான்.