அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Sunday, April 2, 2017

கானப் பறவை


உருவொன்றும் வேண்டாம்
கனவொன்றே போதுமென்றால்
காற்றைக் குடித்துத்
தாகம் தீர்க்குமோ
கானப் பறவை?

மதியொன்றும் வேண்டாம்
மந்திரமே போதுமென்றால்
கம்பளத்தில் பறந்து
வாழ்க்கையைத் தேடிடுமோ
சாதகப் பறவை?

மலரெதுவும் வேண்டாம்
மதுவொன்றே போதுமென்றால்
அமர்வதற்கு இடம்தேடிச்
சந்திரனைக் கொணர்ந்திடுமோ
தேன்சிட்டுப் பறவை?

மண் எதுவும் தேவையில்லை
வானமே போதுமென்றால்
காதலியைத் தேடிச்
சூரியனில் புகுந்திடுமோ
காதல் பறவை?

பணம்ஒன்றே போதுமெனப்
பரிதவித்து வாழ்ந்திருந்துப்
பிணத்திலும் காசுவாங்கி
நிணம் அழுகி வீழ்ந்துபோய்ப்
பதவியே போதுமெனப்
போக்கற்று ஆகிவிட்டுப்
பரமனின் அடிதேடித்
தலைகீழாய்த் தொங்கிடுமோ
வாழ்க்கையெனும் வௌவால்?