அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Friday, February 24, 2017

ஒற்றை வேலி

தளதளன்னு விளையும் போது
    வேலியொரு படை வீடு
விளையாத நிலத்திலது
    வெற்றுக் குறியீடு
வேலியைப் பிரித்து வந்தால்
வரகு வேகும் அடுப்பிலே
வாயாறக் குடித்து வைக்க
     வயிறு உண்டு வீட்டிலே
கனத்த மனம் உதறிக்
     காடு வந்தான் விவசாயி
ஒற்றை ஓணான் வேலியிலே
     ஒற்றை ஆளாய் விவசாயி

ஒருவர்க் கொருவர் உறவில்லை
ஒவ்வாத பகையுமில்லை - ஆனாலும்
ஓணான் ஓடுவதும்
ஒளிந்து நின்று பார்ப்பதுவும்
வேடிக்கை என்றும் விவசாயிக்கு

இன்று அது ஓடவில்லை
ஓட ஓர் இடமுமில்லை
காடெல்லாம் கரடாச்சு
மேடெல்லாம் தரிசாச்சு
மழை இல்லா மண்ணாச்சு
தழை எல்லாம் சருகாச்சு

நீரின்று அமையா உலகில்
யாரின்றுப்  போனான் உழவன்
ஏர் ஓடாக் காட்டினிலே
ஏதிலியாய் ஓணான்
தலையைத் தலையை ஆட்டித்
தாங்கா வேதனை காட்டியது!
துண்டு உதறித் தோளில் போட்டுத்
திரும்பி நடந்தான் விவசாயி!