அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Monday, March 20, 2017

தமிழர் விளையாட்டு


மாலைநேரம் வந்தாச்சு
     பள்ளிக்கூடம் விட்டாச்சு
மான்போலத் துள்ளித்துள்ளி
     வீட்டுக்கும் வந்தாச்சு
ஆசையோடு அம்மாதந்த
     அடைதோசை தின்னாச்சு
ஆரவாரக் கூச்சலோடு
     ஆலமரம் வந்தாச்சு!

பாண்டி:

எட்டடிக்கு நாலடியில்
     எட்டுக்கட்டம் போட்டாச்சு
ஒட்டாஞ்சில் எடுத்துவந்து
     வட்டமாக்கி வச்சாச்சு
அட்டில்லை பாங்கியரே
     பாண்டியாட வாருங்கள்
சுட்டிகுட்டி எல்லோரும்
     சுற்றிநின்று பாருங்கள்!

பச்சைக்குதிரை:

வரிசையிலே ஒருவனைத்தான்
     குதிரையெனக் கொள்ளவேணும்
சிறுவரெல்லாம் முதுகுதொட்டு
      குதிரையைத்தான் தாண்டவேணும்
வரிசைஒன்று முடிஞ்சதுமே
      உயரமதைக் கூட்டவேணும்
சிறுவன்யாரும் தாண்டலைனா
      குதிரையாக மாறவேணும்!

குள்ளமணி முன்னால்வந்து
     குனிந்தபடி நிற்கிறான்
குண்டுமணி ஓடிவந்து
     குதிரைமேல விழுகிறான்
கைஉதறிக் கால்உதறிக்
     குள்ளமணி வையுறான்
கைச்சூப்பும் பிச்சுமணி
     கலகலன்னு சிரிக்கிறான்.

கிளியந்தட்டு:

நாற்பதுக்கு இருபதடி
     நாலிரண்டு தட்டாச்சு
நான்குபேர் கைவிரித்து
     மறிப்பதற்கு நின்னாச்சு
எட்டித்தொடும் கிளியொன்று
     கோடெங்கும் ஓடிவர
எதிரணியில் ஐந்துபேர்
     எல்லைதொடும் கிளித்தட்டு.

தப்படித்துக் கிளியோட்டும்
     குறிஞ்சிநிலக் கொல்லையிலும்
உப்பெடுக்க அளங்களிலே
      நீர்பெருக்கும் நெய்தலிலும்
வரப்புயர நீர்பாய்ச்சும்
     மருதநிலம் காணுகின்ற
ஒப்பில்லா உழைப்பே
     ஓடியாடும் கிளித்தட்டு!

தட்டாங்கல்:

எடுப்பான ஏழுகல்
     தரையிலே வீசியாச்சு
அடுத்தகல் அலுங்காமல்
     ஒருகல் எடுத்தாச்சு
எடுத்தகல் மேல்வீசி
     தரைகல் ஒன்றெடுத்து
விடுத்தகல் எடுத்தகல்
      ஒருகை அடக்கமாச்சு!

எடுக்குங்கல் இரண்டிரண்டாய்
     எண்ணிக்கை கூடலாச்சு
தொடுப்பாக ஆறுகல்லும்
     ஒன்றாகப் பிடிச்சாச்சு
விடுகின்ற ஒருபணமும்
     இருமூன்றாய் சேரலாச்சு
எடுத்தாண்ட உவமானம்
     தட்டாங்கல் ஆட்டமாச்சு!

ஆடிடுவோம்:

கிட்டிப்புள், உப்புமூட்டை,
     கண்பொத்தி, கோலிக்காய்.
பட்டம் விடு,  பல்லாங்குழி,
     கிச்சுகிச்சு தாம்பாளம்,
வெட்டும்புலி, மரம் ஏறி,
     குலைகுலையாய் முந்திரிக்காய்
தொட்டுப்பிடி என்பதெலாம்
     தமிழர்தம் விளையாட்டே!

அத்தனையும் ஆடிடுவோம்
      ஆனந்தம் அடைந்திடுவோம்!
நித்தநித்தம் விளையாடி
      நலமனைத்தும் பெற்றிடுவோம்!
வித்தைபல கற்றிடுவோம்
      வீரமுடன் வாழ்ந்திடுவோம்!
  எத்திசையும் வென்றெடுக்கும்
      தமிழரென உயர்ந்திடுவோம்!