வளம் போச்சு - தமிழர்
நலம் போச்சு!
உடைஞ்சுபோன மனசாலே - நானூறு
உயிரும் போச்சு;
உடைமையெல்லாம் போனபின்னே
மானம்மட்டும் தங்கிப்போச்சு!
நீரெதுவும் இல்லாமல்
நிலமெல்லாம் காஞ்சிபோச்சு
விட்டகுறை தொட்டகுறை
அத்தனையும் பட்டுப்போச்சு!
தில்லியில் எமது
மூத்தகுடி விவசாயி
வெட்ட வெளியிலே
வெற்றுத் தரையிலே
வென்றெடுக்கும் வென்சமரை
வெற்றிகொள்ளும் முனைப்பிலே
சுட்டெரிக்கும் வெயில்தாங்கி
சுகம்போக்கும் குளிர்தாங்கி
மனதிலே உரமேற்றி
உடலிலே உயிர்தேக்கி
உன்னதமாய்ப் போராடுகிறான்!
ஓட்டு எனப்பேரிட்டு
இட்ட பிச்சையிலே
பாராளு மன்றத்திலே
பாங்குடனே அமர்ந்துகொண்டு
கீழ்மேலாய் வீடுகட்டி
குளிருகின்ற காரெடுத்து
ஏரெடுத்துப் பாராமல் - நீ
எட்டிஎட்டிப் போவாயோ?
கடந்தும் செல்வாயோ - எமைக்
கண்டும் காணாமலும்?
பொறுமைஇன்னும் போகவில்லை
புரிந்துகொள் எம்வலியை!
இல்லையேல்,
எங்கள் கலப்பை இனி
உழுது புரட்டாது மண்ணை
உழுது புரட்டும் - உன்
புரட்டு அரசியலை!
எழும் எமது வீரகரம்
தொழும் இந்த வையகமே!
வலி = துன்பம், வலிமை.