அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Sunday, March 26, 2017

உழைத்துப் பிழைக்கணும்

குடிகாரக் கணவன்:
ஊரெல்லாம் மகிழ்ந்திருக்க,
     உறவெல்லாம் சேர்ந்திருக்க,
ஊரெங்கும் கொண்டாடும்
உற்சாகப் பானமடி;
ஊக்கமோடு நான்உழைக்க
     அரசுதரும் பானமடி;
ஊக்கிவிடும் நம்அரசு
     ஊருக்கே  சேமமடி!

மனைவியின் கவலை:
விளைந்துவரும் கடலைச்செடி
     கால் அடியும் ஓங்கவில்லை;
களையெடுக்க நாளாச்சு
     கைக்காசும் போயாச்சு
விளையாது போய்விட்டால்
     விடியாமல் போய்விடுமே
விளையாட்டு கொள்ளாமல்
     உழைக்கவா மச்சானே!

தேறுவானோ இவன்?
பிச்சைக்கார வேடம்போட்டும்
     பத்துகாசு தேறலியே
எச்சிலிலை தொடப்போனா
     நாய்கூட பொறுக்கலியே
மிச்சமேதும் கையிலானால்
     மறுக்காமல் தந்துவிடு
சச்சரவு பண்ணாதே
     சுருக்கா நான்வந்திடுவேன்.

மனைவியின் கோபம்:
கொடுத்தக்காசு கரியாச்சு
     கொண்டதெல்லாம் கோலமாச்சு
அடுத்தஅடி வைக்குமுன்னே
     எட்டுஅடி இறங்கியாச்சு
கெடுப்பதெல்லாம் அரசுஎன்றால்
     கேடுவேறு என்னவாச்சு?
விடுப்பதெல்லாம் ஒன்றேதான்
     ஒழியட்டும் தீயரசு!

குடிகாரன் பேச்சு:
எல்லாமும் தந்தாங்க
     இலவசமாய்த் தந்தாங்க
நல்லாதான் நாம்வாழ
     நாலுகாசும் தந்தாங்க
பொல்லாத நேரத்தால்
     போக்கற்றுப் போனோம்நாம்
நல்லநேரம் வந்துவிட்டால்
     நாமகூட வாழ்ந்திடலாம்!

மனைவியின் அறிவுரை:
வளமெல்லாம் தானேவரும்
     வேலைசெய்ய மனதிருந்தால்!
வளமான நேரம்வரும்
     வாழும்வழி புரிஞ்சிருந்தால்!
அளவில்லா சூழ்ச்சிசெய்து
     அத்தனையும் சுரண்டுகின்ற
களவாணிக் கூட்டமதைக்
     கூண்டிலிடும் நேரம்வரும்!

என்ன நடந்தது?
கைகொட்டிச் சிரிப்பதற்குக்
     கையிரண்டு வேண்டாமா;
கையொன்றாய் அரசிருக்க
     குற்றவாளி நானாகூறு!
குடிவாழக் கொடுத்ததெலாம்
குடிக்கவும் போதலையே;
குடிமூழ்கிப் போனமாயம்
     கொஞ்சமும்தான்  புரியலையே

புரியும் வழி பார்:
விளைத்தவன் தன்பொருளை
விலைவைக்க உரிமையில்லை;
விளைநிலத்தில் ஊறுகின்ற
      நீரகூடச் சொந்தமில்லை;
இலவசங்கள் தந்துவிட்டு,
     ஏய்த்துஉடல் வாழ்ந்துவிட்டு,
சிலவற்றைக் கொடுத்துவிட்டு,
     சீரழித்தார் புரிந்துகொள்ளு!

இனி(து) வாழ்வோம்!
அரசுஇடும் திட்டங்கள்
அத்தனைக்கும் கணக்குவேண்டும்!
அரசியலில் அனைவருமே
     தன்காசில் வாழவேண்டும்!
உரம்கொண்டு உழைப்பவனே
உயர்வாக இருக்கவேண்டும்!
தரமான வாழ்வினையே
     தரணியுளார் பெறல்வேண்டும்!