தத்தத் தரிகிட தம்தம் தரிகிட
தித்தத் திரிகிட திம்திம் திரிகிட
(தத்தத்)
தொட்டுப் பாரடா கொட்டும் இடியடா
வட்டப் பரிதியை சுட்டும் எரியடா!
முட்டப் பகையெனில் எட்டப் பாய்ந்திடும்
கொட்டும் கைகளில் கோட்டை மண்ணடா!
(தத்தத்)
பட்டுத் தெறித்திடும் கொட்டும் பனியும்
சீற்றக் கனலில் சட்டென மறையுது!
எட்டப் பறந்திடும் எச்சல் காக்கையே
வட்டப் புயலிது தொட்டுப் பாரடா!
(தத்தத்)
கொட்டும் மழையிலும் கோடை இடியிலும்
வெட்டிப் பாய்ந்திடும் வீரத் தமிழடா!
எட்டுத் திசையிலும் வெற்றி எமதெனக்
கொட்டி முழங்கிடும் வீரத் தமிழடா!
(தத்தத்)
முட்டி தெறிபட பிட்டி இடிபட
எட்டிப் போய்விடு வருகுது தமிழ்படை!
கொட்டம் அடக்கிட பகையும் பொடிபட
கொட்டு முழங்கிட வருகுது தமிழ்படை!
(தத்தத்)