கோட்டை விதைப்பாட்டில்
ஏழுகடல் நீர்தளும்ப
எட்டுஊர்க் காளைகளும்
ஏர்தாங்கி உழுதுவர
மட்டில்லாக் கானம்
மருதக் குயில்பாட
பெட்டைமயில் ஆணுடனே
தோகை விரித்தாட
விளைந்த நெல்மணிகள்
கோபுரமாய்க் குவிந்துஎழ
ஓஹோ ஹோவென்று
ஊரார் ஆர்ப்பரிக்க
தேவதைகள் வந்து
தலைமேல் பூப்போட
தூக்கம் கலைந்து
அண்ணாந்து பார்த்தால்
மருத இலை பறிக்கும் மந்திஒன்று பல்லிளிக்க
கனவெல்லாம் கலைந்து நினைவும் திரும்பியதே!
மேய்ச்சலுக்கு விட்டகாளை
எங்கென்று கண்நோக்க
நட்டநடு வயலில்
மேய்ச்சல் காளையது
இட்டம்போல் தலையாட்டி
ஊரான் பயிர்மேய
ஓஹோஹோ எனக்கூறி
வயல்காரன் கல்லெறியக்
களைபறிக்கும் பெண்டிரெல்லாம்
கைகொட்டிக் கூச்சலிட;
காளையதும் ஓடியது;
கட்டில்லாமல் ஓடியது!
உச்சைக்கு உறக்கம்
உழவனுக்கு ஆகாதென்று,
உழவனும் ஓடிப்போனான்
காளைசென்ற வழிதேடி!