அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Wednesday, March 1, 2017

ஏறுதழுவு! போராடு!

இனி
தமிழச்சி தாய் தன் மகனுக்கும் மகளுக்கும்
புத்தகக் கூட்டினிலே
வெயிலுக்குக் குடையும் குளிருக்குப் போர்வையும்
கட்டாயம் எடுத்து வைப்பாள்!
தமிழர்தம் நலம் காக்கப்  பிள்ளைகள் தயார்
எந்நாளில் எப்பொழுதில்
போராட்டம் தொடருமென யாரறிவார்?

கலிங்கத்துப் பரணியின்
   காளியாய்த் தலைவிரித்து
   ஊழலும் லஞ்சமும்
   பேயாய் ஆடினவே!
பொய்யையும் புளுகையும்
     வெள்ளுடையில் மறைத்து
     அரசியலும் ஆளுமையும்
     பகட்டாய்ப் வந்தனவே பவனி!
அவர்கள்
சில காதம் போவதற்கும்
பல நூறு வாகனங்கள்!

பொய்சொன்ன வாய்க்குப் போசனமும் கிடைக்காமல்
மாத்திரையே உணவாக மூன்று நேரம் உண்டாலும்
மெய்யே சொல்வதில்லை என்று
அரிச்சந்திரன் தலையில் கைவைத்துச்
சத்தியம் செய்தவர்கள்
மாண்புமிகு சிறுமக்கள்!

கீழடியைத் தோண்டினார்கள்
ஒளிர்ந்தது எங்கள் தமி்ழர் பண்பாடு!
அடடா அது
சிந்துவெளி நாகரிக
நீட்சி என்றறிந்த சூழ்ச்சி மனிதர்கள்
மண் ஓடு மட்டும் கிடைத்ததென்று
மண் மூடிப் போனார்கள்
அரிக்கமேடும் ஆதிச்சநல்லூரும்
நொந்த கதை இதே கதை!
ஆனாலும்
பண்பாட்டுக் காளை வெளியில் போந்தது
இருண்டவர் கண்ணும் அறியாமல் போயிற்று!

தைப்பொங்கல் வந்தது!
தமிழர் வாழ்வு பொங்காமற் போயிற்று.

சொட்டு நீரும் தராதவனுக்கும்
அள்ளி அள்ளிக் கொடுத்தனர் மணலை;
கர்ப்பத்தையும் சுரண்டும் கயவர் கூட்டம்!
வற்றாத பரணி வாடி நின்று போயிற்று
பாலாறு முழுமையும் பாழாறாயிற்று
வையை வறண்டது
காவிரியும் கைவிரித்தது;
உழவர்கள் மாண்டார்கள்!
சிலர் மானமே பெரிதென்று
நான்று நின்று போனார்கள்!

பாவம்!
காளைக்கும் ஏன் சோகம்?
கூடப்பிறந்தவன் அவனாவது
துள்ளிக் குதிக்கட்டும் என்று
வாடிவாசல் நாடினர்;
பண்பாடு குலைக்கவே திட்டமிட்டப் பீட்டாவின்
சட்டம் காட்டித் தடுத்தது அரசு!
தடி கொண்டு விரட்டித்
தாக்கியது காவல்துறை!

அடேய்ய். . . !
மார்தட்டி எழுந்தது மாணவர் படை;
தோள்கொட்டிக் கிளம்பியது இளைஞர் படை;
எண்திசையும் அதிர்ந்தது;
ஏழுலகும் வியந்தது!

அன்றொரு நாள்,
போரில் உயிர் நீத்தார் கணவன்
எனக்கேட்ட தமிழச்சிதாய் தன்
மகனுக்கும் பூச்சூடித் தலைவாரிக்
களம்கான அனுப்பிச்
சூளுரைத்து நின்றாளே!

இன்று அவள்,
பாலகன் உண்டே கையில் என
அவனையும் இடுப்பில்கொண்டுப்
பண்பாடு காக்கவென்றே
புயலாய்க் களம் புகுந்தாள்!

இப்படையை
எப்படைதான் வெல்லுமென்று
மேகத்துள் மறைந்து
பகலெல்லாம் ஓடிப் போந்தான் பகலவன்::
இரவினிலே விண்மீன்கள்
தமிழகத்தின் திசையெங்கும்
தரையினிலே வீழ்ந்த கதை
வியனுலகம் கண்ட
விந்தைக் கதை ஆனதே!

ஒன்றே எங்கள் இலக்கு என்று
எழுந்தது பார் இளைஞர் படை!
ஏறு தழுவுதல் எம் உரிமை!
வாடிவாசல்  திறக்கட்டும்!
காளைகள் சீறிப்பாயட்டும்!- அதனை
எங்கள் கைகள் தழுவட்டும்!

கேட்டதை மறுத்தார் மாண்பு இலார்;
சீப்பினை மறைத்திட்டால்
சீரிய திருமணம் நிற்குமென
வாடிவாசல் மறைத்திட்டார் பேடியர்.

அடடா!
செம்பருதிச் சுடரைக் கையால் தடுத்தவர்போல்
கருகிப்போய் வீழ்ந்தனர் கடையர்;
சூரியனைக் கண்டு
நாய்போல் குரைத்தவரும் சிலருண்டு.

எமக்கு,
நாட்கள் ஒரு கணக்கல்ல;
தடையேதும் பொருட்டல்ல;
நேர் எதிரே நிற்க வல்ல
நரன் எவனும் பிறக்கவில்லை!

வீரம் விளைந்தது!
அகிலமெங்கும் தமிழர்
ஆர்ப்பரித்து நின்றனர் ஆயினும்
அறவழி கொண்டனர்.

வாகனம் எரிந்து
மூவர் யாரும் சாகவில்லை;
அலுவலகம் எரிந்து
வெள்ளுடைகள் அழியவில்லை;
செல்லும்பாதைத் தடுக்கவில்லை;
குருதி ஏதும் சிந்தவில்லை;
குற்றங்களோ இல்லவே இல்லை!

உலகம் கண்டதுண்டா
இப் புரட்சி இந்நாளில்!
அறவழி உதவாதெனக் கூறியவர்
வாயடைத்துப் போனாரே!

இதோ!
விடியல் தெரிகின்றது!

தினம் தினம் சூரியன்
உதித்தெழும் நாடு
தமிழ்நாடென்று
சங்கே முழங்கு ! - வெற்றிச்
சங்கே முழங்கு!
வாழ்க தமிழ்!  வெல்க தமிழர்!