வெறிச்சோடிய வீதியில்
பசிநேர விலங்கென
வெயில் தன்னந்தனியே
உலாத்திக்கொண்டிருந்தது!
சொறிபிடித்தத் தேகமென பனைகள்
சொல்லொணா சோகத்தில்;
அலைகின்ற காற்றும் அலைகடலும்
கலையாத மவுனத்தில்!
நீர் நீர் என்று அலைந்த
காற்றின் முகத்தில் கானல் நீர்;
தீயில் உருகி ஓடும்
ஒற்றைக் கோடுகளாய்த்
தார்ச் சாலைகள்!
தாங்கமுடியவில்லை எனச்
சூரியனும்
சூடு போக்கி உடல் குளிர
மலை தேடி மறைந்து
மேல்கடலில் மூழ்கிப் போனான்!