போகம் ஒன்று:
தென்மேற்கில் காற்றடித்துத்
தேன்போல நீர்பெருகி
ஆற்றில் புதுவெள்ளம்
ஆனந்தம் பாடிவர
மருதநிலப் பேருழவர்
கருமார் களம் போந்தார்.
கொழுவைக் கூராக்கி
மழுவைச் சீராக்கி
வீடுகொண்டு சேர்த்தனர்
வாசல்நின்று பார்த்தனர்!
ஆடையின்றிச் சிறுவர்கள்
ஆற்றினில் குதித்துஎழ;
குடுமுழுகிப் போச்சுதடா
இடிவந்து விழுந்ததென
கெண்டைமீன் துள்ளியெழ
கெழுத்திமீன் உளையில் புக
அயிரைமீன் சிலுசிலுக்க
ஆரல்மீன் அடிபதுங்க
மலையிலே பிறந்தமழை
மடுவெல்லாம் நிறைந்ததுவே!
மருதம் நனைஞ்சிருக்க
மனதெல்லாம் நிறைந்திருக்கக்
கால்வரத்தைச் சீராக்கிக்
கூவரத்தால் வயல்திருத்தி
கும்பிட்ட கையுடனே
கூம்பாலை விதையெடுத்து
ஆடியிலே நெல்விதைத்து
ஆவணியில் களைபறித்துப்
புரட்டாசிப் பூப்பூத்துப்
பூரணமாய் நெல்விளைய
பரணிலே கொட்டிவைத்துக்
குதிலிலே குலுக்கிவைத்துக்
கொல்லர்க்கும் நெல்அளந்தார்
கூலிக்கும் நெல்அளந்தார்
தானமாய் நெல்அளந்தார்
தவத்துக்கும் நெல்அளந்தார்
கதிர்மணியை உயர்த்திக்கட்டி
குருவிக்கும் நெல்அளந்தார்
ஒருபோகம் நெல்விளைந்து
மறுபோகம் காத்திருந்தார்!
போகம் இரண்டு:
வடகிழக்கில் இடிஇடித்து
வட்டப்புயல் சுழன்றடித்து
ஐப்பசியில் பெய்தமழை
கார்த்திகையில் குளிர்ந்ததுவே
ஆற்றுவெள்ளம் பெருகிவர
அணைகொண்டுத் தடுத்துஎழ
கால்பிரிந்து இடம்வலமாய்
கால்வாய்வழி ஓடியதே!
கரியொன்று மதங்கொண்டு
கடைவாயில் நுரைதளும்பக்
கோட்டை அரண்மோதிக்
கோவென்று விழுந்ததுபோல்
ஏரியென்றும் குளமென்றும்
பேரிகைபோல் நீர்முழங்கிக்
கடல்போல் கடந்தவெள்ளம்
கடைமடை அடைந்தபோது
அலைபோல் நுரைகொண்டு
ஆர்ப்பரித்து எழும்பியதே!
மதகெல்லாம் திறந்திருக்க
மறுகாலும் பாய்ந்திருக்க
வாய்க்கால் வழிஓடி
வயலில்நீர் சேர்ந்ததுவே!
சடுதியிலே உழவுசெய்து
சம்பாநெல் விதைவிதைத்துத்
தைத்திங்கள் நெல்அறுத்துத்
தைப்பொங்கல் படையலிட்டு
உற்றதோழன் காளைக்கும்
உவப்புடனே நாள்எடுத்து
வீடெல்லாம் நெல்நிறைய
விவசாயி வாழ்ந்துநின்றார்!
உலகுய்ய ஊண்தந்து
உழவரெல்லாம் உயர்ந்துநின்றார்!
கருணையோடு மழைதந்த
காரணனைப் போற்றிநின்றார்!