அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Wednesday, March 28, 2018

மண்ணில் புதைந்துள்ள பாண்டியர் போர்த்தளம்


உக்கிரன்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்.

ஊரைச் சுற்றித் துல்லியமான நீள்வளையத்தில் 6 கிமீ நீளத்தில் அகழியுடன் கட்டப்பட்ட கோட்டை.. மத்தியில் மேடான இடத்தில் கோயிலுடன் கூடிய போர்த்தளம்.

மதுரையை ஆண்ட பராந்தகன் நெடுஞ்சடையன் (கிபி 765-790) என்ற பாண்டிய மன்னன் கரவந்நபுரத்தில் அகழியும், மதிலும் , கோட்டையும் அமைத்து அப்பகுதியில் மிகப்பெரிய அளவிலான நிலப்படையை வைத்திருந்தான் என்பது குறித்த கல்வெட்டு மதுரை ஆனைமலையில் உள்ளது. 

இம்மன்னனது காலத்திய மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கும்  கல்வெட்டுகளும் செப்பேடுகளுமே மிகப் பழமையானது எனக் கருதப்படுகிறது. . 

மதுரையில் பராந்தகன் காலத்து ஆனைமலைக் கல்வெட்டில் ''களக்குடி நாட்டுக் கரவந்தபுரம்' என்று குறிப்பிடப்படுவது. ஆதலால் கோட்டையைக் கட்டி, போர்த்தளமாகப் பயன்படுத்தியவன் பராந்தகன் நெடுஞ்சடையனே என்ற தகவல் உறுதிப் படுத்தப் படுகிறது. 

களக்குடி எனும் ஊராளது, உக்கிரன்கோட்டைக்கு அருகில் உள்ள மற்றுமொரு சிற்றூர். இரு ஊர்களுக்கும் நடுவே 'சிற்றாறு' எனும் தாமிரபரணியின் துணை ஆறு ஓடுகிறது. இந்த ஆறு குற்றால மலையிலிருந்தும் அதன் நீர்வீழ்ச்சிகளிலிருந்தும் தொடங்குகிறது. கடனாநதி ஆறும் இவ்வாற்றில் வந்து சேர்கிறது.  அக்காலத்தில், களக்குடி,  குடியிருப்புகளுடன் கூடிய பெரிய ஊராக இருந்திருக்கலாம்.

பராந்தகனது காலத்தில் மாறன் காரி, மாறன் எயினன், சாத்தன் கணபதி, ஏனாதி சாத்தஞ் சாத்தன் ஆகியோர் அமைச்சர்களாகவும் மா-சாமந்தர்களாகவும் பேர்பெற்று வாழ்ந்தவர்கள் ஆவார். இவர்கள் அனைவரும் கரவந்தபுர நாட்டினர் என்பது சிறப்பான செய்தியாகும். இத்தகைய பேர்பெற்ற கரவந்தபுரமே இன்றைய உக்கிரன்கோட்டையாகும்.

"பராக்கிரம வீரநாராயணன் என்ற உக்கிர பாண்டியனால் (கிபி.768-815) இக் கோட்டை கட்டப்பெற்றது "  என்ற வரலாறு மெய்ப்பிக்கப் படவில்லை. மேலும் இவனது காலமும் மிகப் பிற்பட்டதாகவே இருக்க வேண்டும். ஆயினும், இவ்வூர் அவனது பெயரால் உக்கிரன்கோட்டை என அழைக்கப் படுவதால், இம்மன்னன் தென்காசியிலிருந்து ஆண்ட குறுநில மன்னனாக இருக்கவேண்டும். சிவன் கோயிலில் அல்லது கோட்டையில் இவன் மாற்றங்கள் செய்திருக்கலாம்.

கோட்டையும் அதைச்சுற்றிய அகழியின் எச்சங்களும் இன்றளவும் காணக் கிடைக்கின்றன.

கோட்டை, அரண்மனை, வாணிகத்தலம் போன்ற பண்டைய அமைப்பு உள்ள இடங்களில், அதைச் சுற்றி எல்லா தேவைகளும் நிறைவேற்றும் வகையில் குடியிருப்புகள் அமையப் பெறும்; இது ஒரு பொதுவான விதி. அதுபோலவே, கோட்டையும் படைத்தளமும் கொண்டு, வாணிகத் தலமாகவும் இருந்ததனால், இவ்வூரில் எல்லா இன மக்களும் இருந்துள்ளனர்; இப்போதும் உள்ளனர். கோயில் காரியங்கள், வேளாண்மை, தச்சு, கொல்லவேலை, கோட்டைக் காவற்பணி என அவரவர் வேலையைச் செய்ய மக்கள்  குடியிருப்புகள் கோட்டைக்கு உள்ளேயே அமையப்பெற்று இருந்திருக்கின்றன.

திருநெல்வேலி - சங்கரன்கோயில் சாலையில், அழகியபாண்டியபுரம் ஊரிலிருந்து தெற்காக 5 கிமீ தொலைவில் உள்ளது இவ்வூர். திருநெல்வேலியிலிருந்து 32கிமீ தூரத்திலும்  சங்கரன்கோயிலிலிருந்து 41 கிமீ. தூரத்திலும் உள்ளது.

ஊரின் ஓர் ஓரமாக அழகிய சிவன் கோயில் உள்ளது. யாருக்கும் இடைஞ்சல் இல்லாது சமத்தாக இருந்து வருகிறது. சுவாமி சொக்கலிங்கர் உடனுறை மீனாட்சியம்மை கோயில். 1200 ஆண்டுகள் பழமையான இக்கோயிலும் உக்கிர பாண்டியன் காலத்தில் கட்டப் பட்டிருக்க வேண்டும்.

7-8ஆம் நூற்றாண்டுத் தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் மூன்று உள்ளன.
12ஆம் நூற்றாண்டுத் தமிழ் கல்வெட்டுகள் இரண்டு உள்ளன.
18ஆம் நூற்றாண்டுத் தற்காலத் தமிழ் கல்வெட்டுகள் இரண்டு உள்ளன. 

மேலும், கோயிலுக்கு வெளியே மண்தரையில் கிடக்கும் இரண்டு தூண்களிலும் வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது.  எழுத்துகள் பல இடங்களில் தேய்ந்து போய் உள்ளன. மேலும் தேய்ந்து போகாமல் இருக்க, கோயிலுக்கு உள்ளேயே ஓரிடத்தில் நாட்டிவைத்துப் பாதுகாத்தால் நல்லது. கோமுகியின் அருகேயுள்ள கல்வெட்டின் முதல் வரி எழுத்துகள் காரைச் சாந்தால் மறைக்கப்பட்டு விட்டது. அது சுத்தம் செய்யப்பட வேண்டும். 

ஆக, பெரும் கல்வெட்டுப் புதையலே இங்கு உள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை.

திரு. கண்ணன் பட்டர் அவர்கள் கோயிலுக்கு வருபவர்களிடம் அழகான விளக்கங்கள் தந்து உதவுகிறார். எங்களுக்கும் அவரது உதவி கிடைத்தது. அவருக்கு மிக்க நன்றி.

இக்கோயில் இந்து அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒருகாலப் பூசை நடைபெறுகிறது. கோயில் கல்வெட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டு விட்டனவா எனத் தெரியவில்லை.

கோயில் மண்டபம் மற்றும் சுற்றுப் பிரகாரத்தின் மேல் விதானத்தில் ஏழு இடங்களில் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.பாண்டிய மன்னர்கள் கட்டிய கோயிலின் அடையாளங்களுள் இதுவும் ஒன்று. இரண்டு இடங்களில் மகர மீன் போன்றும், ஒரு இடத்தில் பெரிய மீன் சிறிய மீன் ஒன்றை விழுங்குவது போலும் உள்ளது.மற்றவை வழக்கமான மீன் சின்னங்களே.

கோயில்வாசலின் அருகே உள்ள உத்திரத்தில் சங்கு சக்கரம் பொறித்த வைணவ அடையாளமும் உள்ளது. சுற்றுப் பிரகாரத்தின் மேற்குப் பக்க மேடையில், மிகப் பழைய லிங்கம், திருமால் திருமேனி ஆகியவை வைத்துப் பாதுகாக்கப் படுகின்றன. சைவ வைணவ மேலாண்மை  இக்கோயிலில் மாறிமாறி நடைபெற்றிருந்ததை  இது வெளிப்படுத்துகிறது.

கோயிலின் உள்ளே ஒரு சுரங்கப் பாதை இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால்,  காணமுடியவில்லை. கோயில் வாசலில் அழகிய கருங்கல் திண்ணை. திண்ணையின் மேல்விதான முகப்பில் குரங்குகள் வெகு இயல்பான சிலை உருவத்தில் உள்ளன. திண்ணை,  வெளியூர் ஆட்கள் இரவில் தங்கிச் செல்ல அருமையான ஏற்பாடு. ஊருக்கு வருபவர்கள் பசியோடு தூச்கிவிடக் கூடாது என்று அக்கறையோடு உணவு அளிக்கும் பண்பாடு காத்த மேடை இது. வீடுகளிலும் இருந்த இவ்வமைப்பு இப்போது இல்லை.

இவ்வூர் வெள்ளையர் காலத்திலும் போர்ப்படைத் தளமாகச் செயலபட்டதும் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டின் சிற்றூர்களை அயன், ஜமீன் ஆகிய அடைமொழியோடு வழங்கியுள்ளனர். 'அயன்' என்பது ஆஙீகிலேயர் அவ்வூரில் தங்கியிருந்து நேரடிக் கண்காணிப்பில் நேரடி வரிவரவு செய்துள்ள இடம். 'ஐமீன்' என்பது பிறரிடம் கொடுத்து கப்பம் வாங்கிய இடம். உக்கிரன்கோட்டையை அயன் உக்கிரன்கோட்டை என ஆங்கிலேயர் பதிவு செய்துள்ளனர். பக்கத்திலுள்ள ஜமீன் ஊத்துமலை என்பது ஜமீனுக்கு எடுத்துக் காட்டாகும்.

கிபி,2015ல் சென்னை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இவ்வூரில் தங்கியிருந்து மூன்று மாதங்கள் ஆய்வு செய்துள்ளார்கள். கோட்டையின் உள்ளே மையமும் மேடுமாக இருக்கும் இடத்தில் 5 குழிகள் 4 அடி ஆழம் 15 அடி அகலத்தில் தோண்டி ஆய்வு செய்திருக்கிறார்கள்.

ஆய்வின்போது 1200 ஆண்டுகள் பழமையான ரோமநாட்டுக் கைவினைப் பொருட்களும், வேறு சில சிறியஅளவுப் பொருட்களும் (artifacts) கிடைத்துள்ளன. அவை சென்னைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு விட்டதாக ஊர்மக்கள் தெரிவித்தனர்.  ரோம் நாட்டுடன் வாணிகம் நடந்துள்ளதையும், இவ்வூர் வாணிகத்தலமாக இருந்துள்ளதும் இதன்மூலம்  தெரிய வந்துள்ளது.

இந்த மேடான இடத்தில்தான் போர்த் தளவாடங்களைப் பாதுகாக்கும் கட்டிடம் ஒன்று இருந்திருக்கிறது. இது போர்ப் பயிற்சிக் கூடமாகவும், படைவீரர்கள் தங்குமிடமாகவும் இருந்திருக்கிறது. போர்ப்படைத்தளத்தின் அருகில் ஒரு சிவன் கோயில் இருந்ததற்கான ஆதாரங்களும் உள்ளன. 

இந்த மேட்டிடத்திற்கு மேற்கே சொக்கநாச்சியம்மன் கோயில் உள்ளது. ஆயிரக் கணக்கான மக்கள் குலதெய்வமாக வணங்குகின்றனர். இக்கோயில, தங்குமிடம், நீர் வசதி, அழகிய முன்மண்டபம் என விரைவான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கருவறையில் சொக்கநாச்சியம்மன் எட்டுக் கரங்களோடும் கனிவான முகத்தோடும் காட்சி தருகிறாள்.

சொக்கநாச்சியம்மன் கோயில் வளாகத்தின் உள்ளே, குலதெய்வ அய்யனார் பரிவார தேவதைகளோடு அரச மனத்தடியில் வாசம் செய்கிறார். வேறொன்றுமில்லை. வெயில் அதிகமாக அடிக்கிற ஊர்.  கருவறையில் புழுக்கம் அதிகம். அதுதான் அரச மரத்தடிக்கு இடம் பெயர்ந்து விட்டார்.

உக்கிரன்கோட்டையைக் காண இருவராகச் சென்றோம், நானும் நண்பர் அருண் பாண்டியனும். ஒருவர் காணாததை மற்றவர் சுட்டிக் காட்ட, ஒருவர் அறியாததை மற்றவர் எடுத்துரைக்க இனிதே நிறைவுற்றது எங்கள் பயணம். 

நிறைவாகக் கண்ட காட்சிகளை மனது அசைபோட. . .  இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்!