அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Monday, March 19, 2018

தமிழகத்தில் சமணம் - 2

தமிழகத்தில் சமணம் - 2

திருச்சாரணத்து மலை:

சிதறால் சிற்றூரை ஒட்டிய 'தேரி' என்று சொல்லப்படும் குன்று மேற்குத் தொடர்ச்சி மலையின் ஓர் அங்கமே. அத்தொடரின் ஒரு பகுதியாகத்தான் 'திற்பரப்பு நீர்வீழ்ச்சி, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைக்கட்டுகள் ஆகியன மிக அண்மையில் உள்ளன. பின்னர், மனம் கொஞ்சும் அழகுக்குக் கேட்கவா வேண்டும். மனம் மோனநிலைக்குச் செல்வதை யார் தடுக்க முடியும். உண்மையில் துறவிகளே இவ்வுலகில், இயற்கையில், அதன் அழகில் இன்புற்று வாழ்ந்தவர்கள்.

அடுக்கடுக்கான மலைகள், மேனி தழுவிச் சீராட்டும் தென்றல், மூலிகை வாசம் கலந்த காற்று, இவற்றுடன் மலை உச்சியில் நிற்கும்போது ஏற்படும் மனக் கிளர்ச்சி, இவற்றையெல்லாம் சொற்களில் அடைத்திடவா முடியும்.
வெயில் கொளுத்தும் கோடையில் குளிர்ச்சி,  விடாத மழையிலிருந்து பாதுகாப்பு, குளிருக்கு இதம், என மலைக் குகைகள் என்ன மாயம்தான் செய்யவில்லை. ஆதிமனிதனின் முதல் குடியிருப்பு. அதுவே என்றென்றைக்கும் மனிதனின் உயர்ந்த இருப்பு!

கோயில் அமைப்பு:

மேற்கு நோக்கிய மூன்று கருவறைகள். நடுவில் மகாவீரர். வலப்பக்கம் பார்சுவநாதர். இடப்பக்கம் பத்மாவதி துறவியார் திருவுருவம் அகற்றப்பட்டு பகவதியம்மை. திருமேனி வைக்கப்பட்டுள்ளது. கிபி.12ஆம் நூற்றாண்டில் உதய மார்த்தாண்ட வர்மா காலத்தில் இது இந்துக் கோயிலாக மாற்றம் பெற்றது, ஆனால்,பத்மாவதி சிலை மாற்றம் தவிர வேறு மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

பகவதியம்மைக்கு மட்டும். மின்விளக்கு வெளிச்சம் கொடுக்கப்பட்டுள்ளது. மகாவீரர், பார்சுவநாதர் கருவறைகள் மற்றும் முன் மண்டபம் அனைத்தும் இருட்டில் உள்ளன. ஒருவேளை, ஒருவிளக்குத் திட்டத்தின்கீழ் மின்சாரம் வழங்கியிருப்பார்களோ என்னவோ; ஒரு விளக்கு குடிசைபோல இது ஒரு விளக்கு கோயில்! கூடுதலாக மூன்று மின் விளக்குகள் பொருத்த என்ன தடையெனத் தெரியவில்லை.

எங்கும் இருட்டு. மகாவீரரின் கருவறையின் உள்ளே  வடபக்கச் சுவற்றில் சார்த்தி வைக்கப்பட்டிருக்கும் கல் பலகையில் ஐந்து ஆறு வரிகளாக எழுத்து தெரிகிறது; வாசிக்க இயலவில்லை. அதுபோல், பார்சுவநாதர் சிலையின் பின்பக்கச் சுவற்றில் சுதை ஓவியங்கள்(fresco) பல இருப்பதாகத் தோன்றுகிறது. மனமகிழ்வோடு பார்க்க இயலவில்லை. தொல்லிலாகா மனது வைத்துத் தேவையானபோது மட்டுமே பயன்படுத்தும் வகையில் மின்விளக்கு வசதி செய்யவேண்டும்.
கருவறைகள் மட்டுமே குடைவரை. அதற்கு முன்னர், செங்கல்லினால் கட்டப்பெற்ற கோயிலொன்று கோயிலின் மலைமுகட்டில் இருந்திருக்க வேண்டும். இப்போது அந்த இடத்தில் செங்கல்லினால் எழுப்பப் பெற்ற அழகிய விமானம் உள்ளது. பழைய செங்கல் அடித்தளம் இன்றும் விமானத்தின் அருகே காணக் கிடைக்கிறது.

மலைமுகட்டில் விமானத்தின் முன்புறம் தற்போது பெரிய ஆலமரம் உள்ள சமமான பகுதியே மாணாக்கர் பயிலும் இடமாக இருந்திருக்க வேண்டும்.  விமானத்தின் நேர்கீழே மலையைக் குடைந்து மூன்று கருவறைகள் கிபி.5 - 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. அதனை ஒட்டி, முன்புறம் விரிந்து பரந்த மண்டபம் கிபி.12ஆம் நூற்றாண்டின் பிற்சேர்க்கை; கற்களால் கட்டப் பெற்றது. மண்டபத்தின் முன்புறம் திறந்தவெளி முற்றமும் பலிபீடமும்.
கோயிலின் வடபுறச் சுவற்றின் வெளிப்பக்கம் செதுக்கி வைத்த மகாவீரர், பார்சுவநாதர், பத்மாவதி, திருத்தங்கர்கள் மற்றும் அடியார்களின் மிக அழகிய புடைச் சிற்பங்கள் (bas relief) உள்ளன. பிற்காலத்தில், கிபி.7ஆம் நூற்றாண்டிற்குப் பின், செதுக்கப் பட்டிருக்க வேண்டும். கருவறைச் சிற்பங்களைவிட மிக நேர்த்தியாக உள்ளன.

கல்வெட்டு எழுத்துகள்:

கோயிலின் வெளியே தென்பக்கத்தில்  சமையற்கூடம் மற்றும் ஒரு சீரான புல்தரை உள்ளது.  புல்தரையைச் சுற்றிச் சூழ்ந்த பாறைகளின் அரவணைப்பு, அந்த இடத்தை அழகிய பூங்காவாகத் தோற்றுவிக்கிறது.
புல்தரையின் தென்பக்கம், 12×12அடி அளவில், கற்பாறை சீராகச் சமமாக்கப்பட்டு தமிழ் வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு, பாரிய தொலைக்காட்சிப் பெட்டி போன்று உள்ளது.

இது, விக்கிரமாதித்திய வரகுணப் பாண்டியனின் 28வது ஆட்சியாண்டுக் காலத் தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டாக உள்ளது. இம்மன்னனின் வரலாறு எதுவும் கிடைக்கவில்லை. கல்வெட்டில், முத்துவாள நாராயணக் குரத்தியார் எனும் சமணசமயப் பெண் துறவி விளக்கு ஒன்றும் பொன்மலரும் அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இவரே கல்வெட்டை எழுதுவித்ததாகவும் உள்ளது.

பேராயிற்குடி அசிட்டநேமி பட்டாரகரின் சீடையாகிய குணந்தகி குரத்திகள் பொன் அணிகலன்கள் வழங்கியதாகவும் எழுதப் பட்டுள்ளது. (இங்கிருந்து நேர்கிழக்கில், அழகியபாண்டிபுரம் அருகே 'குறத்தியறை' எனும் ஊர் உள்ளது கவனிக்கத் தக்கது. அறை=பாறை; குரத்திப்பாறை, குறத்தியறையாக வழக்கில் வந்திருக்கலாம்). இருவரும் ஒருவரா வேறானவர்களா என்பது ஆராயத் தக்கது.அந்தப் பெண்துறவியின் மக்களுக்கு இங்கே சமயப் பாடம் பயிற்றுவிக்கப்பட்டதும், பெண் துறவி சமயப் பணி ஆற்றியதும் மேலும் தெரிய வரும் செய்திகளாகும்.

சிதறால் சமணக் கோயிலுடன் இணைந்து சமண சமயப் பள்ளி ஒன்று சீரான முறையில் இயங்கியுள்ளது. மாணாக்கர்கள் இங்குத் தங்கியிருந்து சமயக் கல்வி பயின்றுள்ளனர். முன்னர்க் குறிப்பிட்ட பெண் துறவி வழங்கிய கொடைகள் சமயக் கல்விக்காக எனவும் அறிய முடிகிறது.
கருவறையின் முன்பு உள்ள மண்டபத்தில் கிபி 12ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில்,  பகவதி அம்மன் வழிபாட்டுக்காக நாராயணன் அப்பல்லவராயன் பணம் கொடுத்தது குறித்து தமிழ் வட்டெழுத்தில் எழுதப் பட்டுள்ளது.

சமண வீழ்ச்சி:

பெரும்பேருடனும் புகழுடனும் விளங்கிய சமண மதம், கிபி.7ஆம் நூற்றாண்டில் எழுச்சி பெற்றெழுந்த இந்துமதப் 'பக்தி' இயக்கம் காரணமாகத் தமிழகமெங்கும் வீழத் தலைப்பட்டாலும், தென்தமிழக நாஞ்சில் பகுதியில் கிபி.12ஆம் நூற்றாண்டு வரை விளக்கமுடன் திகழ்ந்தது என உறுதியாகக் கூறலாம். சிதறால் சமணக் கோயில் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும். கிபி.12ஆம்நூற்றாண்டில் மக்கள் விருப்பத்தை ஏற்று, உதய மார்த்தாண்ட அரசர், பத்மாவதி திருத்தங்கரரின் சிலையை அகற்றிவிட்டுப் பகவதியம்மையின் திருமேனி வைத்த நிகழ்வோடு சமண மதமும் இப்பகுதியிலிருந்து  நிறைவு பெற்று விலகியது எனக் கொள்ளலாம்.