அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Monday, March 12, 2018

தமிழகத்தில் ஆசீவகம்


ஆசீவகம்:

ஆசீவகம் என்பது மெய்யியல் நெறி. அஃது ஓர் அறிவியல் மரபு; "வைதிகநெறி" எனும் விதிக் கொள்கைக்கு எதிரான வாழ்க்கை முறை. குறிப்பாக, கிமு 600 முதல் கிபி 250 வரை தமிழ் மக்களின் பேரியக்கமாகத் தழைத்தோங்கி வாழ்ந்த ஒரு சமய நெறி.


அருகமும் ஆசீவகமும்:

சமணமதம், 'அருகம்' என்று அழைக்கப்படுகிறது. மகாவீரர் எனும் அருக முனிவரின் போதனைகளைப் பின்பற்றுபவர் அருகநெறியாளர் என்பர். "ஜைனம்" என்பது சமணத்தின் வடசொல் வழக்கு.
அமணமதம், 'ஆசீவகம்' என்று அழைக்கப்பெறும். தோற்றுவித்தவர் மற்கலி. இவர் 'மற்கலிகோசாளர்'/'மக்கலிகோசாலர்' என்று வடநாட்டில் அழைக்கப்படுகிறார்.ஆசீவகம் வடமொழியில் 'ஆஜீவிகா' என அழைக்கப்படுகிறது.

திருத்தங்கரர் (தீர்த்தங்கரர்) மரபு:

அருகம், ஆசீவகம் இரண்டனுக்கும் திருத்தங்கரர்களே அடிப்படை மரபு. ஆதிநாதர்(ரிஷப தேவர்) முதலாக மகாவீரர் இறுதியாக 24 திருத்தங்கரர்கள் அருளிய கொள்கை நெறிகளே சமணர் வாழ்க்கை மரபு.ஆதிநாதர், பார்சுவ நாதர் ஆகிய திருத்தங்கரர்களை ஆசீவகமும் போற்றி வழிபடுகிறது. ஆனால், மகாவீரரின் போதனைகளில் மாற்றம் தெரிவிப்பதே ஆசீவகம். ஆசீவகம் தோற்றுவித்த மற்கலி, மகாவீரர் காலத்தவர். காலம் கிமு.6ஆம் நூற்றாண்டு, இருவரும் ஒன்றாக வாழ்ந்ததாகவும் கூறுவர்.

பிடவூர்ப் பெருஞ்சாத்தன்:

"செல்லா நல்லிசை உறந்தைக் குணாது
நெடுங்கை வேண்மா னருங்கடிப் பிடவூர்
அறப்பெயர் சாத்தன் கிளையேம் பெரும"
எனும் புறநானூற்றுப் பாடல்,. சோழநாட்டுப் பிடவூர்க் கிழானின் மகன் பெருஞ்சாத்தன் திருப்பிடவூர் எனும் திருப்பட்டூரில் வாழ்ந்ததாகக் கூறுகிறது.. சாத்தன் எனும் சொல் தமிழ்வழக்கில் ஐயனார் என்றே அறியப்படுகிறது. 


சாத்து என்றால் கூட்டம் என்று பொருள். பொதுவாக, வணிகக் கூட்டங்களை சாத்து என்று அழைப்பர். வணிகக் கூட்டங்களின் காவல் தெய்வமாக விளங்கிய ஐயனார்க்குச் சாத்தன் எனும் பெயர் வழக்காயிற்று. வணிகக் கூட்டங்களின் தலைவனும் சாத்தன் என்றே அழைக்கப்பெறுகிறான்.

ஐயனாரே மற்கலி:

திருப்பட்டூர் என்று அழைக்கப்பெறும் திருப்பிடவூர், திருச்சி-பெரம்பலூர் சாலை வழியில் உள்ளது. இங்கே ஐயனார் கோயில் உள்ளது. ஐயனார் வழக்கமாக இடங்கையில் வைத்திருக்கும் செண்டுக்குப் பதிலாக, இங்கே, குட்டையான ஓலைச் சுவடியை வைத்திருக்கிறார்.


"கயிலையிற் கேட்டமா சாத்தனார் தரித்தந்தப் பாரில் வேதியர் திருப்பிட வூர்தனில்" என்று பெரியபுராணம் உரைக்கும் 'திருப்பிடவூர் பெருஞ்சாத்தன்' இவரே. 'கயிலையில் ஆதிநாதரிடமிருந்து 'ஆதி உலா' நூலைப் பெற்று வந்தவர் 'திருப்பிடவூர் பெருஞ்சாத்தன்' என்பது பெரியபுராணச் செய்தி. ஆதிநாதர் என்பவர் 'ரிஷப தேவர்' எனும் முதல் சமண-அமணத் திருத்தங்கரர் ஆவார். ஆதிநாதரிடம் பெற்ற மெய்யியல் கோட்பாட்டையே இந்நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது. ஆதி உலா என்பது மற்கலி எழுதிய 'ஒன்பதாம் கதிர்' எனும் நூல் என்ற ஐயப்பாடு தெளிவுபடுத்தப்பட வேண்டியிருக்கிறது.


பொதுவாக ஐயனார் கோயிலில் கல்வெட்டு இருப்பதில்லை. ஆனால், இக்கோயிலில் கல்வெட்டு உள்ளது. அதில்,
"திருமண்டப முடையார் கோயிலிற் கூத்தாடுந் தேவர்க்கு" எனும் வரிகளில், 'கூத்தாடும் தேவர்' எனும் வரிகள் நோக்கத் தக்கனவாகும். எனில், மற்கலியின் இறுதிப் பெருநடனமே இதன் பொருளாகும் எனவாம்.
ஆசீவகத் தலைவர் பூரணரை உறையூரில் கண்டு சமய வழக்காடியதாக நீலகேசி உரைப்பது, திருப்பிடவூர், உறையூர், ஆசீவகம் இவற்றுக்கு இடையேயான உறவை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் கொள்ளலாம்.
ஆக, பிடவூர்ப் பெருஞ்சாத்தன் எனும் ஐயனாரே மற்கலி எனலாம்.

ஆசீவக மூவர்:

அருகம், ஆதிநாதர் முதலான 23ஆம் திருத்தங்கரரான பார்சுவநாதர் வரையிலானவர்களின் போதனைகளின் அடிப்படையில் மகாவீரர் போதித்த நெறிகளைப் பின்பற்றுஙிறது. மகாவீரரை 24வது திருத்தங்கரராகக் கொண்டாடுகிறது.
ஆசீவகம், பார்சுவநாதருக்குப் பின் மற்கலியைத் திருத்தங்கரராகக் கொண்டு, மற்கலியின் போதனைகளையே பின்பற்றுகிறது.

ஆசீவகத்தின் முப்பெரும் திருத்தங்கரர்கள்:

திருப்பிடவூர் ஐயனார்/மற்கலி கோசாலர்
மாங்குளம் நந்தாசிரியன்/நந்தவாச்சா
மறுகால்தலை கிசசாங்கிசா/வெண்காசியபன்
ஆசீவக மரபில் கழிவெண் பிறப்பைக் கடந்து வீடடைந்தவர்களாக மூவர் குறிக்கப்படுகின்றனர். அம் மூவர் ஆசீவகத்தின் தோற்றுநராகிய மற்கலி, கிசசாங்கிசா, நந்தவாச்சா என்போராவர். இம் மூவருள் மற்கலி கோசாலரைத் தவிர்த்த மற்ற இருவரைப் பற்றியும் பாலி, பாகதம் முதலான வட மொழிகளில் குறிப்புகள் கிடைக்கவில்லை.

நந்தவாச்சாவும் கிசசாங்கிசாவும்:

"கணிய் நந்த அஸிரிய் இகுவ்அன் கே தம்மம்
இத்தாஅ நெடுஞ்செழியன் பண அன்
கடல்அன் வழுத்திய் கொட்டுபித்த அபளிஇய்"
"என கிமு 3ஆம் நூற்றாண்டு  மாங்குளம் கல்வெட்டு குறிப்பிடும் கணி நந்தாசிரியனே நந்தவாச்சா என பாலி மொழியில் குறிப்பிடப் படுகிறார்.. வானவியல் கணிப்பதில் வல்லவரான கணி நந்தாசிரியன் பேச்சு வழக்கில் நந்தவாச்சா ஆகியிருக்கிறார்.
ஆசிரியன் - ஆச்சாரியன் -ஆச்சான்
பெரியவாசிரியன் - பெரியவாச்சான்
நந்தாசிரியன் - நந்தவாச்சான் - நந்தவாச்சா
நந்தவாச்சாவைப் போலவே கிசசாங்கிசா என்பவரும் ஆசீவகத் துறவிகளுள் முதன்மையானவர்
"வெண்காசிபன் கொ(ட்)டுபித்த கல் கஞ்சணம்"
தூத்துக்குடி மாவட்டம், சீவலப்பேரி அருகே உள்ள மறுகால்தலையில் ஆசீவகப் படுக்கை கண்டுபிடிக்கப்பட்டபோது காணப்பட்ட கிபி.2ஆம் நூற்றாண்டு 'தமிழி' எழுத்து இது.இந்த மறுகால்தலை கற்படுக்கைக்குரிய வெண்காசிபன் என்பவரே கிசசாங்கிசா.
இவ்விருவரையும் பௌத்த தமிழ் இலக்கியங்களிள்கூட  ‘பரம சுக்க’ நிலையை அடைந்தவர்களாகப் போற்றுவதைக் காண்கிறோம். இம் மரபுக்கு ஏற்ப இவர்களைப் ‘பரம ஐயனார்’ என்று தமிழ் மக்கள் இன்றளவும் வணங்கி வருகின்றனர் என்பதும் வியப்பே.

தமிழர் அணுவியம் எனும் மெய்யியல் கோட்பாடு:

"ஆசிவகமானது பண்டைய தமிழர்களின் அறிவுக்களஞ்சியமாக திகழ்ந்தது" என  அமெரிக்க இந்தியவியல் அராய்ச்சியாளர் அறிஞர் ஹென்ரிக் ராபர்ட் ஜிம்மர் தனது ;இந்திய தத்துவவியல்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
ஆசிவகம் மூன்று முக்கிய பகுதிகளை ஒன்றிணைப்பதாகும். அவை:- ‘அணுக்கொள்கையியல்’, அறிவியல் பூர்வமான ‘தர்க்கவியல்’, உலக நியதி எனப்படும் ‘ஊழியல்’ என்பனவாம்.

தமிழகத்தில் ஆசீவகம்:

மோரியர் காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஆசீவகம் வடநாட்டில் செல்வாக்கை இழந்து விட்டது எனக் கூறிய ஆய்வாளர்கள், தமிழ் இலக்கியங்களிலோ கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆசீவகம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டினர். அதற்கான கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளை நிறையவே எடுத்துக் காட்டினார் ஏ.எல். பாசம்.கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியங்கள் ஆசீவகம் பற்றிக் குறிப்பிட்டாலும் ஆசீவகத்தின் தோற்றம் வடநாட்டுக்கு உரியதாகவே பாசம் உள்ளிட்ட அனைத்து அறிஞர்களும் நம்பினர்.
தமிழரின் ஊனோடும் உயிரோடும் கலந்து நிற்கும் ஓர் அறிவியல் மரபே ஆசீவகம். புத்தரும், மகாவீரரும் பொறாமைப் படும் அளவிற்கு ஒரு காலத்தில் மக்கள் சமயமாகவும் இது திகழ்ந்துள்ளது. சங்க காலத் தமிழரின் வாழ்வியலாகவும் சமயமாகவும் கூட ஆசீவகம் திகழ்ந்துள்ளது. எவ்வளவோ இடர்ப்பாடுகளைக் கடந்தும் அது தன்னைக் காத்துக் கொண்டு இன்றும் ஏதோ ஒரு வகையில் இயங்கிக் கொண்டிருப்பதையும் காண்கிறோம்.