அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Monday, March 19, 2018

தமிழகத்தில் சமணம் - 1

தமிழகத்தில் சமணம் - 1

சமண மதத்தில் ரிசபநாதர்(ஆதிநாதர்) முதல் மகாவீரர் வரையிலான 24 திருத்தங்கரர்களின் வரிசை கற்பிக்கப் படுகிறது. இவர்களுள், 23ஆம் திருத்தங்கரராகிய பார்சுவ நாதரே (கிமு.817 - கிமு.717) சமணக் கொள்கைகளை வரையறுத்தார் என்றும், அவருக்குப் பின் வந்த 24ஆம் திருத்தங்கரராகிய வர்த்தமான மகாவீரர் (கிமு.599 - கிமு.527) அக்கொள்கைகளைச் சீரமைத்தார் எனவும் கூறுவர்.

புத்தமதத்தை உண்டாக்கிய கௌதமபுத்தரும், ஆசீவகமதத்தை உண்டாக்கிய மற்கலியும் வர்த்தமான மகாவீரர் காலத்தவர்களே. இவர்களுள் மகாவீரர் வயதில் மூத்தவர். மற்கலியும் மகாவீரரும் ஆறு ஆண்டுகள் ஒருங்கிருந்தனர். பிறகு மகாவீரருடன் மாறுபட்டு மற்கலி ஆசீவகமதம் என்னும் புதிய மதத்தை உண்டாக்கினார். இதனால், புத்தமதமும் ஆசிவகமதமும் மகாவீரர் காலத்தில் தோன்றிய மதங்கள் என்பதும் இவ்விரு மதங்களுக்கு முற்பட்டது சமணமதம் என்பதும் விளங்குகின்றன.

மகாவீரருக்குப் பின் பலர் தலைமை யேற்று சமணமதத்தை வழிநடத்தினர். அவர்களுள், பத்திரபாகு (கிமு 327 - கிமு.297) காலத்தில்தான் தமிழகத்தில் சமணமதம் பரவியதாகக் கூறுவர்.

பத்திரபாகு, சந்திரகுப்த மௌரிய அரசனின் ஆசிரியராகவும் இருந்தார். சந்திரகுப்தரும் பத்திரபாகுவும் தங்களுடைய இறுதிக் காலத்தில் தென்னகத்துக்குப் பயணம் செய்து சிரவணபெளகொளாவில் தென்னிந்தியக் கிளையின் தலைமையிடத்தைத் தொடங்கி வைத்தனர். இருவரும் தங்கள் இறுதிக் காலத்தை இங்கேயே முடித்துக் கொண்டனர். பத்திரபாகுவின் முதன்மைச் சீடருள் ஒருவராகிய விசாகமுனிவர்தாம் தமிழகத்தில் சமண மதத்தைப் பரப்பினார்.

சமண மதம் கிமு 3ஆம்நூற்றாண்டிலேயே தமிழகத்தில் தளைத்து வளரத் தொடங்கியது. அந்நேரம், புத்தமதத்தின் செல்வாக்கு காரணமாகச் சமணமதம் வட இந்தியாவில் தொய்வு பெறத் தொடங்கியது.விசாக முனிவர் தமிழகத்தின் பல இடங்களிலும் சமணப் பள்ளிகளை உருவாக்கினார். அப்பள்ளிகளுள் ஒன்றுதான் சிதறாலில் உள்ள திருச்சாரணத்து மலை. ஷ்ராவணம் - சாரணம் என்பது சமணத்தின் வடமொழிப் பெயரே. திருச்சாரணரது மலையே மக்கள் வழக்கில் திருச்சாரணத்து மலையாக அறியப்பட்டிருக்க வேண்டும்.

சிதறால்:

கன்னியாகுமரி மாவட்டம், சிதறால் எனும் சிற்றூருக்குச் சற்று மேற்கே கவினுறக் காட்சி தரும்  திருச்சாரணாத்து மலையில் அழகிய சமணக் குடைவரைக் கோயில் ஒன்று உள்ளது.  இதனை உள்ளூர் மக்கள் 'மலைக்கோயில்' என்றே அழைக்கின்றனர்.

முன்னரே தமிழகத்தில் மேம்போக்காக அறிமுகமாகியிருந்தாலும், கிமு.3ஆம் நூற்றாண்டில் விசாகமுனிவர்தாம் பல இடங்களில் சமணப்பள்ளி ஏற்படுத்தி சமணத்தைச் சீராக வளர்த்தவர் எனலாம். அவ்வாறு, கிமு 1ஆம் நூற்றாண்டில் செழித்து வளர்ந்து, இந்தியாவின் தென்முனையில்  நன்கு பரவி நின்ற சமணமதத்தின்  அடையாளமே இக்கோயில். கிமு 1 முதல் கிபி12ஆம் நூற்றாண்டு வரை பல கட்டங்களாக, அழகாக, நுணுக்கமாகச் செதுக்கப் பெற்ற கலைச் சிற்பங்கள், சுதை ஓவியங்கள்,  குடைவரைக் கோயில் எனக் கண்கொள்ளாக் காட்சியாக விரியும் கலைப் படைப்பு இது.

நாகர்கோவில் - மார்த்தாண்டம் - பயணம்(ஊரின் பெயர்தான்) - ஆத்தூர்.- ஆத்தூரிலிருந்து இடப்பக்கமாக அருமனை செல்லும் வழியில் சிதறால் உள்ளது. மொத்தம் 45 கிமீ தூரம். வாருங்கள்! பார்ப்போம்.

(அடுத்து:  சிதறால் சமண சமயக் கோயில் குறித்த பதிவு )