அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Thursday, March 22, 2018

கொற்கை

கொற்கையம் பெருந்துறை:

நீர் போற்றுதும்!  நீர் வார்க்கும் ஆறு போற்றுதும்!

தண்பொருநையாற்றின் இரு மருங்கிலும், மனிதக் குடியிருப்புகள் தோன்றி, நாகரிகம் போற்றி, வளமாக வாழ்ந்த வரலாறு காலத்தால் முந்தியது. உலகின் அனைத்து நாகரிகங்களுக்கும் முன்னோடி 'தமிழர் நாகரிகம்' என்று சொன்னால் அதுதான் உண்மை.

மிதவை, தெப்பம், வள்ளம், கட்டுமரம், பரிசல், ஓடம், படகு, தோணி, புணை, அம்பி, வங்கம், வத்தை, நாவாய், கப்பல், திமில், உரு, கலம் எனப் பலபல பெயர்களில் கடல்கலன்கள் கட்டி உலகெங்கும் வாணிகம் செய்தவர்கள் தமிழர்கள்.

தமிழாண்ட மன்னர்கள சேர, சோழ, பாண்டியர் மூவரும் பழங்காலம் தொட்டே திரைகடல் ஓடி வாணிகம் செய்து பொருளீட்டிய தமிழ் மாந்தர்களைப் புரந்தவர்கள்.  இத்தனை வாணிகமும் சிறப்புற நடந்தேறத் துணை புரிந்தவைதான் தமிழகத் துறைமுகங்கள்.

சங்க இலக்கியங்களில் வங்கக் கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும்.
கொற்கை – பாண்டிநாட்டுத் துறைமுகம்.
புகார் என்னும் காவிரிப்பூம் பட்டினம் – சோழநாட்டுத் துறைமுகம்
எயிற்பட்டினம் (நாகப்பட்டினம்) – ஒய்மா நாட்டுத் துறைமுகம்
நீர்ப்பெயற்று (மரக்காணம்) – தொண்டைநாட்டுத் துறைமுகம்.

மேலும், பண்டைய தமிழ் மன்னர் மூவரும் அரசுக் கட்டிலின் தலைமையிடமாகத் தலைநகரையும், வாணிகப் பொருளாதாரத்திற்கானத் தலைமையிடமாக ஒரு துறைமுகத்தையும்  ஏற்படுத்திக் கொண்டனர்.
'சேரருக்கு வஞ்சியும் முசிறியும்
சோழருக்கு உறையூரும் பூம்புகாரும்
பாண்டியருக்கு மதுரையும் கொற்கையும்' எனக் கொண்டனர்.

இலக்கியத்தில் கொற்கை:

"மறப்போர் பாண்டியின் அறத்தின் காக்கும்
கொற்கையம் பெருந்துறை முத்து" - அகநானூறு
உகுவாய் நிலத்த துயர்மணல் மேலேறி
நகுவாய் முத்தீன் றசைந்த சங்கம் – புகுவான்
திரை வரவு பார்த்திருக்கும்
தென் கொற்கைக் கோமான்" -  முத்தொள்ளாயிரம்
’சிறப்பின் கொற்கை முன்துறை அவிர்கதிர் முத்தம்’ (அகம் 201. 3-5)
என்றும்,

‘முத்துப்பட பரப்பின் கொற்கை முன்துறை’  (நற்றிணை 23-6)
‘நாரரி நறவின் மகிழ்தொடைக் கூட்டும் பேரிசைக் கொற்கை’(அகம். 296 8-10)
’இருங்கழி சேயிறா வினப்புள் ளாரும்
கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை’ (ஐங்குறு. 188)
’அலங்கிதழ் நெய்தார் கொற்கை முன்றுறை
இலங்குழுத் துறைக்கு மெயிறு கெழு துவர்வாய்’ (ஐங்குறு. 185)

'திரைதந்த ஈர்ங்கதிர் முத்தம் 

கவர்நடைப் புரவி கல்வடு தபுக்கும்’

நற்றேர் வழுதி கொற்கை’  (அகம். 130)
’கலிகெழு கொற்கை’   (அகம். 350)
’கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு’ (சிலம்பு. 14. 180)
என்றும் கொற்கைப் பெருந்துறை இலக்கியங்களில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது.

இவ்வளவு ஏன்? சிலப்பதிகார வழக்குரை காதையில், கண்ணகி மதுரை அவையில் வீற்றிருந்த பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்து,
‘நல் திறம் படராக் கொற்கை வேந்தே! என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே’ என பாண்டிய மன்னனைக் கொற்கை வேந்தே என்றுதானே விளிக்கிறாள்.

சங்க இலக்கியம் மற்றும் வரலாற்றில் ‘மதுரோதய நல்லூர், பாண்டிய கபாடம், கொல்கை, கொல்கை குடா’ என்றெல்லாம் கொற்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

"கி.பி. 130 வரை கொற்கை பாண்டியரின் முதன்மைத் தலைநகராக இருந்தது. இதன் பின்னரே ஆட்சித் தலைமை மதுரைக்கு மாற்றப்பட்டது" எனும் அரிய செய்தியைத் தாலமி என்ற அயல்நாட்டுப் பயணியின் குறிப்பிலிருந்து உணரமுடிகிறது. கிபி130 வரை பாண்டியரின் தலைமையிடமாக இருந்தது  கொற்கையில் மணலூர் எனும் பகுதி என்பதும், பின்னர் இப்போதைய மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் மணலூர் எனும் பகுதிக்கு மாற்றப்பட்டது என்பதும் அறியத் தக்கது. 

கொற்கை,  விறற்போர்ப் பாண்டியன், மறப்போர்ப் பாண்டியர், வெற்றிவேல் செழியன்  முதலான பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த செய்தியை  இலக்கியங்களில் காணமுடிகிறது. தற்போதைய தொல்லாய்வுகளும் இதை உறுதிப் படுத்துகின்றன. பிற்காலத்தில், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மதுரையில் இருந்துகொண்டு ஆண்டாலும் கொற்கை மக்களின் எதிர்பார்ப்புகளை யெல்லாம் நிறைவேற்றி வைத்தான்.எனும் செய்தியும் இலக்கியத்தில் உண்டு.

கொற்கை, பண்டைய தமிழகத்தின் பெரும் துறைமுகம்.  யவனரும் அரபியரும் சீனரும் தமிழரோடு கலந்து பெருமித நடைபோட்ட மண். பொன்னும் மணியும் பவழமும் முத்தோடு உரசி 'கலுங் கலுங்'கென ஓசையிட்டுத் தோளில் இட்ட துணிப்பைகளில் குலுங்கத் தெருவெங்கும் பன்னாட்டுக் கால்கள் நடைபயின்ற மண்.

கொற்கையின் முத்து:

இப்பி யீன்ற இட்ட எறிகதிர் நித்திலம்
கொற்கையே யல்ல படுவது – கொற்கைக்
குருதிவேல் மாறன் குளிர்சாந் தகலம்
கருதியார் கண்ணும் படும்’   (முத்தொள்ளாயிரம். 68)
என கொற்கைக் கரையில் மட்டுமா முத்துக்கள் பிறக்கும்? கொற்கையை ஆளும் பாண்டியனின் மார்பைத் தழுவ எண்ணும் பெண்களது கண்களிலும் பிறக்கும் என்ற பொருளமைந்த பாடல், முத்துக்கள் என்றாலே அது கொற்கைதான் எனச் சுட்டிக் காட்டுகிறது.

முத்துக்களின் சிறப்பு:

‘பல்லரண் கடந்த பசும்பூப் பாண்டின்
மல்குநீர் வரைப்பிற்கொற்கை முன்றுறை
ஊதை யீட்டிய வுயர் மண லடைகரை
ஒத வெண்டிரை யுதைத்த முத்தம்’ (தொல். களவு. நூ. 11. நச். உரை மேற்கோள்)
‘பொரையன் செழியன் பூந்தார் வளவன்
கொல்லி கொற்கை நல்லிசைக் குடந்தை
பாவை முத்தம் ஆயிதழ் குவளை’ (யா.வி.சூ. 15 மேற்கோள்)
என இலக்கியங்கள் கொற்கையின் முத்தைச் சிறப்பித்துள்ளன. மேலும், கொற்கையின் முத்துக்கள் மரக்கலமேறி கடல் கடந்து சென்று பிற நாட்டு மன்னர்கள் முடியிலும், மாதர்கள் அணியிலும் இடம்பெற்றன என்பதைப் பல நூலாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொற்கையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் பற்றிய குறிப்புகள்:

‘கொற்கைக் கோமான் தென்புலம்’ (சிறுபாணாற்றுப்படை. 62-63)
’நற்றேர் வழுதி கொற்கை’    (அகநானூறு. 130)
”விறல் போர்ப் பாண்டியன், புகழ்மலி
சிறப்பின் கொற்கை”     (அகநானூறு 201; 3-5)
”பொற்றேர்ச் செழியன் கொற்கையம் பேரூர்” (மணிமேகலை 13;84)
‘பொற்றேர் செழியன் மதுரை மாநகர்க்கு
உற்றதும் எல்லாம் ஒழிவின்றி உணர்ந்து’   (சிலம்பு. 27; 83-84)
‘கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன்’ (சிலம்பு. 27; 127)
என்று  கொற்கைப் பதியில் பாண்டியர்கள் ஆட்சி செய்தமை பற்றி பெருமைப்பட இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.

வெளிநாட்டுத் தொடர்புகள்:

இடைச்சங்கத்தைத் தொடங்கி தமிழை வளர்த்த கொற்கை, தலைநகராக, துறைமுகமாக விளங்கி தமிழகத்தின் வளம்கொழிக்கும் பூமியாக இருந்திருக்கிறது. பல நாட்டோடு வாணிபத் தொடர்புகொண்டு இருந்திருக்கிறது.

கிளாடியசு, நீரோ (கி.பி. 54-68) போன்றவர்களோடும், பிற மன்னர்களோடும் அரச தூதுவர்களைப் பரிமாறிக்கொண்டு வணிகம் செய்து வந்திருக்கிறது.

“கொற்கையை ஆண்ட பாண்டிய மன்னர்கள், ரோம் நாட்டின் அகஸ்டஸ் மன்னனின் அரசவைக்கு கொற்கை முத்துக்களை பரிசாக அளித்தார்கள்” என்று குறிப்பிடுகிறார் வரலாற்று அறிஞர் ஸ்டிராபோ.

பாண்டிய மன்னர்களின் குதிரைப்படைகளுக் காக ஆண்டுதோறும் கொற்கைத் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான பாய் மரக் கப்பல்களில் 16,000 அரேபியக் குதிரைகள் வந்திறங்கின என்று குறிப்பிடுகிறார் வரலாற்று ஆசிரியர் வாசப்.

"முத்துக்களும் பல வகை ஆடைகளும் மேனாடுகளுக்கு அனுப்பப்பெற்றன. மேனாடுகளிலிருந்து குதிரைகளும் கண்ணாடிச் சாமான்களும் கொற்கை பெருந்துறையில் வந்திறங்கின” என மதுரைக் காஞ்சியும் புறநானூரும் குறிப்பிடுகின்றன.

***** வாருங்கள், இன்றைய கொற்கையைத் தேடுவோம்! *****

தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் முக்காணி என்ற அழகிய கடற்கரைச் சிற்றூர். முக்காணியிலிருந்து மேற்காகப் பிரிந்து ஏரல் நோக்கிச் செல்லும் சாலையில் உமரிக்காடு. அங்கிருந்து வடக்கு நோக்கிச் சென்றால் 2கிமீ தூரத்தில் பெரிய கொற்கை என மக்கள் அழைக்கும் நாம் தேடிவந்த கொற்கை. தூத்துக்குடி-கொற்கை 27கிமீ. திருச்செந்தூர்-கொற்கை 23கிமீ.

ஊரின் நட்ட நடுவே பஞ்சாயத்து அலுவலகம். அருகே தொல்பொருள் காப்பகக் கட்டிடம் வாயிலில் பூட்டோடு.. உள்ளே ஒன்றுமில்லை. உள்ளே வைக்கப்பட்டிருந்த தொல்பொருட்கள் சென்னைக்கும் பாளையங்கோட்டைக்கும் கொண்டுபோக ப்பட்டன எனச் சொல்கிறார்கள். ஆனாலும், கட்டிடம் எங்கேயும் போய்விடாமல் இருக்கத்தான் அந்தப் பூட்டு.

இதன் மேற்புறம் வியப்பின் குறியீடாய் ஒரு வன்னிமரம்!
2000 ஆண்டுகளைக் கண்ட மரம். வங்காள விரிகுடாக் கடலையும், தாமிரபரணி ஆற்றையும் அருகிருந்து பார்த்த மரம். இப்போது, சுற்றுச் சுவருக்குள் முடங்கி, மண்ணில் கிடந்த நிலையிலும் பெருமையில் உயர்வாக, இப்போதும் தளிர் விட்டுக்கொண்டு, வியப்பின் வியப்பு இந்த வன்னி மரம்!

மரத்தின் அருகில் ஒரு நடுகல், பொற்கை பாண்டியன் வணங்கிய 'ஆஞ்சநேய மூர்த்தி' எனும் நாமத்தோடு உள்ளது.  'ஸ்ரீராமஜெயம்' காகிதம் சுருட்டிய மாலை ஒன்று இடப்பட்டிருந்தது. தேர்வு நேரம். ஆஞ்சநேயர் உதவுவாராக! மாணவர்/மாணவி அதிக மதிப்பெண் எடுக்க வாழ்த்துகள்!

ஆஞ்சநேயர் நடுகல்லின் பின்புறம் திரிசூலக் குறி! உள்ளது. பொற்கைபாண்டியனின் காலம் கிபி.2ஆம் நூற்றாண்டு. சூலக்குறி கற்களின் காலம் மிகப் பிந்தையது. அதனால் ஆஞ்சநேய மூர்த்தி நடுகல்லின் காலக் கணிப்பில் ஐயம் தோன்றுகிறது! 

தமிழகத்தில் தனி நடுகல் ஆஞ்சநேயர் வழிபாடு என்பது விஜயநகரப் பேரரசு காலத்தில்தான் தொடங்கியது. குறிப்பாக, கிருஷ்ணதேவராயரின் (கிபி1509-1529)  தலைமைக் குருவாகிய வியாசராயர்தான் இதுபோன்ற சிற்பங்களை தமிழகத்தில் அறிமுகம் செய்தார் எனலாம். இவர் இந்தியா முழுவதும் 732 எண்ணம் இதுபோல் சிற்பங்களை வைத்ததாகக் கூறுவர்.
"தலைக்குமேல் உயர்ந்த அனுமனின் வால், ஆசி வழங்குவதற்காக உயர்ந்த வலது கரம், தொடையின்மேல் இடது கரம், இடது கரத்தில் சௌகந்தி மலர், உயர்ந்து நிற்கும் வாலில் கட்டப்பட்ட ஒரு மணி", இவையே வியாசராயர் செய்து வைத்த அனுமர் அமைப்பு. அறிஞர்கள் மேலாய்வு செய்து விளக்கம் கூற வேண்டுகிறேன்.

'கொற்கை சிற்றூரின் வடக்கே 250 ஏக்கர் பரப்பில் விரிந்து கிடக்கும் குளம். குளத்தின் மத்தியில் 'கண்ணகி கோயில்' . பாண்டிய மன்னன் வெற்றிவேல் செழியன் வணங்கி நின்ற கோயில்! அதனால் அதன் பெயர் 'வெற்றிவேல் அம்மன் ஆலயம்' என வழங்கப் பெறுகிறது. பழைய கண்ணகி சிலை சிதைவுபட்டதால் புது சிலை 2015 குடமுழுக்கின்போது வைக்கப்பட்டுள்ளது. எட்டுக் கரங்களுடன், முகத்தில் கனிவுடன் காளிதேவி!

இந்த இடம்தான் கொற்கை துறைமுக வாயில் எனலாம்.  பெரும் நாவாய்கள் வந்து வாணிகப் பொருட்களை இறக்கவும் ஏற்றவும் செய்த இடமும் இதுவே. இப்போது  கடலும் இல்லை. அருகில் ஓடிய தண்பொருநை ஆற்றையும் காணவில்லை. இலக்கியச் சான்றுகளைக் காணும்போது, பொருநை ஆறு கொற்கையை ஒட்டி, அதன் வடபுறத்தில் ஓடியுள்ளது.எனத் தெரிகிறது. இப்போது, 3கிமீ தொலைவில் தெற்கே ஓடுகிறது.

2000 ஆண்டுக் காலம், கடலையும் ஆற்றையும் கொற்கையிடமிருந்து தொலைவில் பிரித்து வைத்துவிட்டது. குளக்கரையில் ஒரு தோரணவளைவு: 'பாண்டியரின் தொன்மைத் துறைமுகம்' என்று நம்மை வரவேற்கிறது. 


கண்ணகி கோயிலின் எதிரேயுள்ள பெரிய குளத்தையே கடலாகக் கொண்டு வரலாற்றைப் பின் நோக்கி அசை போட்டது மனது. எத்துணை பேர்பெற்ற இடம் இது. கடல் அத்தனையிலும் நாவாய் செலுத்தி "கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்" எனத் திரைகடல் ஓடி வாணிகம் செய்து வண்பொருள் ஈட்டிய, "எம் தமிழனே, நீ வாழி! வாயிலோன் வாழி! எம் கொற்கை வேந்தே வாழி’  எனச் சிலம்பு சொன்னதை வழிமொழிந்து நின்றேன்.

குளத்தின் மேற்குக் கரையில் 100அடி தூரம் நடந்தால், மிகப்பழைமையான பிள்ளையார் கோயில். வாழைத்தோப்பின் நடுவே, ஏகப்பட்ட புதர்களுக்கு மத்தியில் உள்ளது.இடம் அச்சமூட்டும் வகையில் உள்ளது. மனவலிமையுள்ள பிள்ளையார்! தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டு எழுத்துகள் முன்பக்கச் சுவற்றில் உள்ளது.யாரும் வாசித்து விடக்கூடாது என்ற அக்கறையில் எழுத்துகளின்மேல் கெட்டியான மஞ்சள் சாந்து பூசிவிட்டனர். கோயில், கிபி ஏழாம் நூற்றாண்டில் வளர்மாற்றம் பெற்றிருக்கும் எனத் தோன்றுகிறது.

இன்னும் சற்று வடக்கே நடந்தால் 'அக்கசாலைத் தெரு' என்ற பெயர்ப்பலகை நம்மை வரவேற்கிறது. குளத்தின் வடகரையில் முழு நீளத்துக்கும் வலிய கவர்ந்து நிற்கும் 'பாண்டிய நாணய சாலை'. இருந்த இடம். இப்போதும் பொற்கொல்லர் தெருவாக உள்ளது. கடலோடி வாணிகம் செய்த தமிழருக்குப் பொற்காசுகள் உருவாக்கித் தந்த இடம் இது! இங்கே கிடைத்த காசுகளில் 'வெற்றிவேல் செழியன்' எனும் தமிழ் வட்டெழுத்து உள்ளது.

நான் எதிலும் தாமதம்தான். எனக்கு எந்தக் காசும் கிடைக்கவில்லை. ஆயினும், சொக்கா! இக்கட்டுரையை வாசித்த அத்தனை பேருக்கும் ஆயிரம் 'செழியன் பொற்காசு' கொடுத்துவிடு!

அகழாய்வுகள்:

கொற்கையில் எங்கே தோண்டினாலும் கடற்சிப்பிகள், சங்குகள் கிடைக்கின்றன, ஒரு காலத்தில் இங்கே சங்கில் அலங்காரப் பொருட்கள் செய்யும் தொழிற்சாலை இருந்திருக்க கூடும் என்கிறார்கள், அக்கசாலை எனப்படும் பண்டைய நாணயச்சாலை, அங்கேயிருந்திருக்கிறது, அக்கசாலை ஈசுவரமுடையார் எனும் கோயில்தான் குளத்தின் மேற்குக் கரையில், புதர்களுக்கு இடையில் நாம் பார்த்த பிள்ளையார் கோயில்.

கொற்கை இடைச்சங்க சங்க காலம் தொட்டே ஒரு துறைமுகப் பட்டினமாய் இருந்து வந்தது. இதன் பழைமையை அறிய தமிழ் நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையினர் 1968, 1969களில் இவ்விடத்தில் 12 அகழாய்வு குழிகள் இட்டனர். அதன்மூலம் கி.மு. 850 ஆம் ஆண்டு மதிக்கத்தக்க பழம்பொருட்கள் கிடைத்துள்ளன. 

மேலும் இங்கு தமிழி எழுத்துக்கள் பொறித்த பானையோடு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் காலம் கரிம நாற்படுத்தல் மூலம் கி.மு. 755 ± 95 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இவ்வெழுத்தே அசோகப் பிராமியின்(கிமு.300) முன்னோடி.  எமது தமிழ் மூத்தது, முந்தையது. அதனால், அசோகப் பிராமியை 'அசோகத் தமிழி' என வகைப்படுத்துவதே சரி!. 

இறுதியாக, ஆனால் உறுதியாகப் பண்டைத்தமிழரின் பெருமைகளை விரித்துரைக்க உதவிய  கொற்கை அகழாய்வுகள் தமிழ் எழுத்து வளர்ச்சியினை அறிய உதவும்  ஒரு திருப்புமுனையாகவும் இருக்கிறது என்பதே கொற்கையின் பெருமை எனக் கூறி அமைகிறேன்.