அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Monday, October 19, 2020

ஆதிச்சநல்லூர் - தொடர் 3

 தொடர் – 3 : 

 ராபர்ட் புரூஸ் ஃபூட்டே – இவரைத்தாம் இந்திய உள்நாட்டு அகழாய்வின் தலைமகன் என்று சொல்லலாம். இந்தியா முழுவதும் பயணம் செய்து இவர் சேகரித்த தொல்பொருட்களை FOOTE collection எனும் பெரும் நூல் ஒன்றில் தந்துள்ளார். 

 அந் நூலின் தொடக்கம் இப்படித்தான் உள்ளது : 


“11-01-1883 :தாமிரபரணி ஆற்றுப் படுகையில் உள்ள செய்துங்கநல்லூரில் என்னால் கண்டெடுக்கப்பட்ட...” 

 என்னவொரு பெருமை பாருங்கள்!

 செய்துங்கநல்லூருக்கு அடுத்த பகுதியே ஆதிச்சநல்லூர். 

 திருச்செந்தூர்ச் சாலையின் இடப்பக்கம் தாமிரபரணி ஆறு. ஆற்றின் தென்கரைக்கும் சாலைக்கும் மத்தியில் உள்ள ஒரு பெரிய மண்மேட்டில் பாண்டிராசா கோயில் உள்ளது. இது உள்ளூர் மக்களின் நாட்டார் தெய்வக் கோயில். கோயிலைச் சுற்றியுள்ள மேட்டுப் பகுதி அனைத்துமே தொல்காலத்து இடுகாடாக இருந்து முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்ட இடம். 

ஆனால், முதலில் அகழ்வாய்வு நடந்த இடம் வலப்பக்கமுள்ள பெரும் பரம்புதான். 1876ல் செருமானி நாட்டின் பெர்லின் நகரத்தவரான முனைவர் ஜாகுவார் என்பவர் தொடங்கி வைத்த ஆய்வு இங்கேதான் நடந்தேறியது. அவரால் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் யாவும் பெர்லின் அருங்காட்சியகத்தில் சேர்க்கப்பட்டன. அப் பொருட்களின் முழு விவரம் கிடைக்கவில்லை. 


 114 ஏக்கர் அளவிலான பெரும் பரம்பு முழுவதும் சரளைக் கற்களாலும் கடினமான பாறைகளாலும் ஆனது. இதுவரை தாமிரபரணி ஆற்றை ஒட்டிய வட பகுதியில்தான் தொல்லாய்வுகள் நடந்து வந்துள்ளன. 

- தொடரும்