பாளையங்கோட்டையிலிருந்து புறப்பட்டுத் திருச்செந்தூர் சாலையில் சென்றால் கருங்குளம் தாண்டியவுடன் வருவது புளியங்குளம். இடம் வலமாக இருபக்கமும் பிரியும் சிறிய சாலையின் வலமாக உள்ளவை 13 ஏக்கரில் அமைந்த பெரிய பறம்பும் அதன் சரிவுப் பகுதியில் உள்ள ஒரு சிற்றூரும். இடமாகத் திரும்பிச் செல்லும் சாலையில் இருப்பவை அருங்காட்சியகக் கட்டிடமும், பாண்டிராசா கோயிலும்.
முந்தைய தொல்லாய்வுகள் அனைத்தும் இப் பறம்பில்தான் நடந்தேறின. அதனால் வலமாகத் திரும்பி அப் பெரும் பரம்பின் மீதேறிச் சுற்றுமுற்றும் அலைந்து திரிந்து பார்த்ததில் தொல்லாய்வு நடக்கும் ஓர் அடையாளமும் கிடைக்கவில்லை. அதனால், கீழிறங்கிப் பரம்பின் அடிவாரத்தில் உள்ள ஊரின் முகப்புக்குச் சென்று, அங்கேயொரு அரசமரத்தடியில் ஓய்வாக இருந்த ஊர்மக்களிடம் உசாவியதில் இரு தகவல்கள் கிடைத்தன.
ஆதி மித்த நெல்லூர் – ஆதியிலேயே மிகுந்த நெல்லை விளைவித்த நெல்லூர் என்பதே பேச்சு வழக்கில் ஆதித்தநல்லூர் ஆகியது என்பது ஒரு தகவல்.
திருச்செந்தூர் சாலையின் இடதுபுறம் உள்ள மண்மேட்டில் பாண்டியராசா கோயில் உள்ளது. அந்த மண்மேட்டில்தான் தற்போது தொல்லாய்வு நடக்கிறது என்பது இரண்டாம் தகவல்.
தகவல் கேட்டுக்கொண்டிருக்கும்போது பறம்பின் தென்கிழக்கு இறக்கத்திலிருந்து ஆறு மகிழுந்துகள் என்னைக் கடந்து சென்றன. தொல்லாய்வுக்குழு தான் செல்கிறது எனப் புரிந்தது. பின் தொடர்ந்தேன். சென்ற வண்டிகள் அனைத்தும் அருங்காட்சியக வாசலுக்குச் சென்று நின்றன. நானும்தான்.
அதில் முதல் மகிழுந்திலிருந்து இறங்கியவர்களுள் ஒருவர் உதயச்சந்திரன், தொல்லாய்வு இயக்குனர். தினச் செய்தி வாசிப்பில் இருந்து ஊகித்தது. மற்றொருவர்... யாரெனத் தெரியவில்லை.
அருகில் நின்ற அலுவலர் ஒருவரிடம் கேட்டேன். ‘கா.ராசன், தொல்லாய்வு அறிஞர்’ என்ற பதில் வந்தது. எதிர்பார்க்கவில்லை. அவரைப்பற்றி நிறைய வாசித்திருக்கிறேன். புதுவை பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்தாலும் தொல்லாய்வுத் துறையில் அவர் ஆற்றி வரும் அரும் பணியினை அறிந்து மனத்தில் போற்றியிருக்கிறேன். இன்று நேரில் கண்டேன்.
மகிழுந்திலிருந்து இறங்கியவர்கள் சுருசுருப்பாக பாண்டிராசா கோயில் மண்மேட்டில் ஏறத் தொடங்கினார்கள். அங்கே, பல குழிகள் தோண்டப்படும் அடையாளம் தூரத்திலேயே தெரிந்தது.
நானும் பேசாமல் பின் தொடர்ந்தேன்.
- தொடரும்.