அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Saturday, October 10, 2020

ஆதிச்சநல்லூர் தொடர் 1ஆதிச்சநல்லூர்த் தொல்லியல்களப் பார்வை :

 நாள் 12-09-2020, வெள்ளிக்கிழமை 

வெகு நாட்கள் தள்ளிவைத்த ஆதிச்சநல்லூர் செலவு இன்று நிறைவேறியது. பெயர் ஆதிச்சநல்லூர் என்றாலும் தொல்லியல் ஆய்விடமாகிய பரம்பும் அருங்காட்சியகமும் இருப்பது ‘புளியங்குளம்’ எனும் ஊரில்தான். 

முதல் தடவை சென்று பார்த்து, அங்குள்ள அருங்காட்சியகத்தின் அவலங்களை 14-11-2017 அன்று சென்று பதிவு செய்திருந்தேன். தமிழக அரசையும் வேண்டியிருந்தேன். 22/11-2017 அன்று அமைச்சர் மாஃபா அவர்கள் அவ்விடத்திற்கு வந்திருந்தார். அன்றே எனது அந்தப் பதிவுக்கு ‘ஆவண செய்வதாகப்’ பதிலும் தந்திருந்தார். 

இதற்கிடையில், 07-02-2018ல் அருங்காட்சியகம் வந்திருந்த தூத்துக்குடி துணை ஆட்சியர் உடைந்த பானைகள் அனைத்தும் புதிய மாதிரிகள் என்றும் மெய்யானவை அல்ல என்றும் எரிகிற நெய்யில் எண்ணெய் ஊற்றிவிடுப் போனார்.


அதற்குப் பின் விரைவாக நடந்த பல மாற்றங்களில் ஒன்று ‘நடுவணரசு தமிழகத்தில் ஆய்வு செய்யப் பணம் ஒதுக்காது விலகிக்கொண்ட நற்செயல்’. நடுவணரசுக்கு ஒரு பெரிய கும்பிடு. 

 அதற்குப்பின் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையிலும் 02-02-2018ல் ஓரு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ‘ஆதிச்சநல்லூர் களத்தின் மாதிரிகளுக்கானக் கரிமப் பரிசோதனைக்கு அரசு நிதி ஓதுக்கீடு செய்யவேண்டும்’ என்பதே அவ் ஆணை.  

இப்போது தமிழக அரசு தன்னால் இயன்ற பணிகளை ஆய்வுலகுக்குச் செய்து வருகிறது. மகிழ்ச்சி! ஆதிச்சநல்லூரின் 6வது தொல்லியல் கள ஆய்வுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 32 இலக்கம். மே மாதம் 25ஆம் நாளிலிருந்து தொடர்ச்சியாக அகழாய்வு செய்யப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து தமிழகத் தொல்லாய்வு அலுவலர் பாஸ்கர் மற்றும் லோகநாதன் ஆகியோர் தலைமையில் ஆய்வு நடந்து வருகிறது. 


 இதுவரை 72 முதுமக்கள் தாழிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. கிடைத்துள்ள பலதரப்பட்ட பொருட்களைப் பட்டியல் இடும் வேலையும் மும்முரமாக நடந்து வருகின்றது. இனி எனது பயண நிகழ்வுகளைக் காண்போம்!  

தொடரும்