23-11-2020 அன்று நெல்லை சுழல்கழக கூட்ட அரங்கில் ஆற்றிய எனது உரை :
தாயே தமிழே வணக்கம்!
... ... ... ...
கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிர் இள நீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
இன்னுயிர் என்பேன் கண்டீர்! என்பார் பாரதிதாசன்.
தமிழ் தோன்றிய பொதிகை மலையில்தாம் பொருநை நதியும் பிறந்து தவழ்ந்து வருகிறது.இவ்வாறு இரு பெரும் பெருமை கொண்ட நெல்லை மண்ணில் நாமும் பிறந்தோம் என்பது எத்துணை பெருமை நமக்கு. அனைவரும் அறிந்த இம் மண்ணின் பெருமையை எடுத்துக் கூற, சிறுவன் நானும் கொல்லர் தெருவில் ஊசி விற்ற கதையாக வந்து நிற்கிறேன். பெரியோர் பொறுக்க வேண்டும்.
“தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள செய்துங்கநல்லூர் எனும் ஊரில் நான் கண்டெடுத்த செதுக்கு உளி முதலானவைகள்..” என்கிறார் இராபர்ட் புருஸ் ஃபூட் எனும் ஆங்கிலேயர்.
நமது பெருமையை இராபர்ட் புருஸ் ஃபுட் எனும் ஆங்கிலேயரிடத்திலிருந்தே தொடங்கலாம் என எண்ணுகிறேன். இவரை, இந்திய தொல்லுலகின் தந்தை எனச் சொன்னால் அது மிகையில்லை. ‘வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியாவின் தொல்லாய்வை முன்னெடுத்துச் சென்ற முன்னத்தி ஏர் இவருடையது. தமிழகம், கருநாடகம், மத்திய பைதிரம், பீகார் என இந்தியா எங்கும் சுற்றித் திரிந்து தொல்பொருள் கண்டெடுத்துச் சேகரித்தவர் அவர். அவரது புகழ்பெற்ற நூலான Robert Bruce Foote collection எனும் நூலின் தொடக்கத்தைத்தான் முன்னம் குறிப்பிட்டேன்.
Scraper, Oval, Basalt, on the surface; Found myself, Seidunganallur, Tambrabarani Valley .. 11th January 1883 என்றுதான் அந்நூலைத் தொடங்குகிறார்.
தாமிரபரணி என்றாலே நமக்கெல்லாம் கெத்துதான். இல்லையா? அது வெற்று இல்லை. நமது தொல்நாகரிகத்தை மேலோட்டமாகப் படித்து அறிந்தாலே அது மெய்யான கெத்து என்பது புரிய வரும்.
நீர் என்பது மண்ணை மட்டுமல்ல, மனித மனங்களையும் குழைவாக்குகிறது. நீர் என்பது நெளிவு சுழிவால் மட்டும் அழகில்லை; அதன் நெடிய வரலாறும்தான் மிக்க அழகுடையது.
மேற்குத் தொடர்ச்சி மலையை அறிவோம் ஆயினும் அதன் தென்பகுதி தென்னம்பொருப்பு எனும் பெயரால் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுவதையும் அறிந்து கொள்வோம். . தென்னையிலிருந்து தோன்றியதே தென் எனும் திசைச் சொல். குடகு என்பது மேடான என்றும், குணக்கு என்பது தாழ்வான என்றும் விரிந்த எனும் பொருளில் வடக்கு என்றும் இயற்கை அமைப்பையே திசையாகக் கொண்டவர் தமிழர். தென்னம்பொருப்பு என்பது தென்மலையே அன்றி வேறில்லை.
தென்னம் பொருப்பில் உள்ள அகத்தியர்கூடத்தில் தோன்றி கொற்கை வரையிலான பொருநை நதியின் 130 கிமீ நெடும் பயணம் நைல் நதியைவிடக் குறைவானதாக இருக்கலாம்; அமேசானைவிடக் குறுகலாக இருக்கலாம்; ஆனால், பெருமையில் இமயம்போல் உயர்ந்தது நம் பொருநையாறு என்றால் அது மிகையில்லை. ஆண்டு 365 நாட்களும் நீர் ஓடுவது பொருநை நதி. Perennial River. உயிர் நதி.
சங்கப் பாடல்களில் பொருநை, ஆன் பொருநை, தண்ணான் பொருநை எனும் மூன்று பெயர்கள் காணப்படுகின்றன. பொதுவாக, பாலக்காட்டுக்குத் தெற்கேயுள்ள தென்னம்பொருப்பில் உள்ள ஆறுகள் பொருநை எனும் பெயராலும், வானமலை என்னும் பாலகாகாட்டுக்கு வடக்கேயுள்ள பகுதியில் தோன்றிய ஆறுகள் ‘ஆனி’ என்றும் அழைக்கப்பட்டன. பூவானி, கீழ்ப்பூவானி, பொன்னானி, வானியாறு என்பவை இதற்கு எடுத்துக்காட்டுகளாம்.
பொலஞ்செய் கழங்கில் தெற்றி யாடும் தண்ணான் பொருநை வெண்மணல் சிதைய – என்பது புறநானூறு 36
சோழமன்னன் படையெடுப்பின்போது போர்புரிய வாராது அரண்மனையில் முடங்கிக் கிடந்த சேரமன்னன் ஒருவனைக் குறித்துப் பாடும் இப் பாடலில் இவ்வரிகள் வருகின்றன. பாடியவர் ஆலத்தூர் கிழார். இங்கே தண்ணான் பொருனை என்பது கரூர் அருகேயுள்ள அமராவதி என்பார் ஔவை சு. துரைசாமி பிள்ளையவர்கள் . தமது ‘சேர மன்னர் வரலாறு’ எனும் நூலில்தாம் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
அகநானூற்றுப் பாடலிலும் இந்தத் தண்ணான் பொருநை குறித்த பாடல் வருகிறது. தென் நீர் உயர் கரைக் குவைஇய தண் ஆன்பொருநை மணலினும் பலவே – என்பது அகநானூறு 93
இப்பாடலின் முன்னுள்ள ஒரு வரியில் ‘வியல் நகர்க் கருவூர் முன்துறை’ எனக் கருவூர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதால் ஔவை. சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் கூறுவது சரிதான் எனலாம்
இவ்வாறு கரூர் அருகில் உள்ள ஆறு தண்ணான் பொருநை எனப் பாடல்களில் குறிப்பிடப்பட்டாலும் பின்னர் பேச்சு வழக்கில் ஆன் பொருநை என்றும் இப்போது அமராவதி என்றும் ஆகிவிட்டது. பொதியமலையில் தோன்றிய ஆறும் தண்ணான் பொருநை என்றே அழைக்கப்பட்டுப் பின்னர் பொருநை என்றும் தாமிரபரணி என்றும் நிலைத்துவிட்டது.
“அதஸ்யாஸ்னம் நகல்யாக்ரே மலயங்ய தாம்ரபரணம் க்ராக ஜிஸ்டாம் த்ரத்யச்” என்ற வரிகள் வால்மீகி இராமாயணத்தில் உண்டு.
அகத்தியரின் தென்னாட்டு வருகையைக் குறிக்கும் வரிகள் இவைதாம். இவ்வாறு வால்மிகி இராமாயணத்தில் வழங்கி வருவதைப் பார்த்தால் தாமிரபரணி எனும் பெயர் நெடுங்காலமாக வழங்கி வருகிறது என்றே தோன்றுகிறது.
மகாபாரதத்திலும் , ‘குந்தியின் மகனே, தாமிரபரணியின் பெருமையை உனக்கு நினைவுபடுத்துகிறேன்’ எனும் வரிகள் வருகின்றன.
காளிதாசரின் ரகுவம்சத்தில், ‘தாமிரபரணி மேதயை முக்தா சாரம்ம கோததே’ எனப்பாடப்பட்டுள்ளது.
இவ்வாறு வடமொழி இலக்கியங்கள் தாமிரபரணி என்று அழைக்க, தமிழ் இலக்கியங்களோ ‘பொருநை’ என்ற பெயரையே பெருமையாகப் பாடி மகிழ்கின்றன.
‘தண் பொருநைப் புனல் நாடு’ என்கிறார் சேக்கிழார்
‘பொன் திணிந்த புனல் பெருகும் பொருநைத்திருந்தி’– என்பார் கம்பர்
மேலும், பெரிய புராணத்திலும் திருவாய் மொழியிலும்கூட ‘பொருநை’ என்றே புகழப்படுகிறது.
'குளிர்நீர்ப் பொருநை சுழி பலவாய்' என்றுரைப்பது சடகோபர் அந்தாதி
இப் பொருநை நதி தொடங்கும் பொதிய மலையின் தென் பகுதியிலும் வட பகுதியிலும், பொருநை நதியின் போக்கிலுமாக, அகத்தியமுனிவர் மட்டும் அல்லாது, மேலும் வாழ்ந்தவர்களாகக் குறிப்பிடப் படுபவர்கள் :
அதங்கோட்டாசான், தொல்காப்பியர், செம்பூட்சேய், காக்கைப் பாடினியார், நத்தத்தனார், பனம்பாரனார், அவிநாயனார்,வாய்ப்பியனார், வாமனார், வையாடிகளார் எனப் பட்டியல் நீண்டு உள்ளது. தமிழ்ப் பல்கலைக் கழகமே இங்கேதான் இயங்கியதோ என எண்ணத் தோன்றுகிறது இப் பெயர் வரிசைகளைக் கண்டால்.
தண்பொருநையாற்றின் இரு மருங்கிலும், மனிதக் குடியிருப்புகள் தோன்றி, நாகரிகம் போற்றி, வளமாக வாழ்ந்த வரலாறு காலத்தால் முந்தியது.
தென்னம் பொருபில் உள்ள அகத்தியர்கூட மலை உச்சியில் தோன்றி கொற்கை வரைக்கும் நெடும்பயணம் கொள்கிறது பொருனையாறு. பொருனையாறு கடலில் கலக்கும் அந்த இடத்தைச் சேர்ந்தபூமங்கலம் எனும் அழகிய பெயரால் வழங்குவதும் உண்டு. மங்கலம் என நிறைவு செய்வது தமிழர் வழக்குத்தானே.
பொருனை நாகரிகம் எனும்போது கொற்கையை நாம் தவற விட்டுவிடவா முடியும்? முற்கால, பிற்காலப் பாண்டியர் வரலாற்றில் மதுரைக்கு இணையாகப் புகழ்பெற்றது கொற்கை.
"மறப்போர் பாண்டியின் அறத்தின் காக்கும் கொற்கையம் பெருந்துறை முத்து" – என்பது அகநானூறு
பாண்டிநாடு முத்துடைத்து என்று கூறப்படும் காரணமே கொற்கைதாம். மதுரை அரசியல் தலைநகர் என்றால் கொற்கை பாண்டியர்களுக்கு வணிகத் தலைநகராக இருந்தது. பாண்டிய இளவல்கள் கொற்கையிலேயே இருந்து ஆட்சி செய்திருக்கின்றனர்.
நற்றேர் வழுதி கொற்கை’ என்பது (அகநானூறு. 130) – இங்கே வழுதி என்பது பாண்டியனைக் குறிப்பதாம்.
கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை’ என்கிறது (ஐங்குறு. 188).
உகுவாய் நிலத்த துயர்மணல் மேலேறி
நகுவாய் முத்தீன் றசைந்த சங்கம் –
புகுவான் திரை வரவு பார்த்திருக்கும்
தென் கொற்கைக் கோமான்" – என்று உரைக்கிறது முத்தொள்ளாயிரம்
’சிறப்பின் கொற்கை முன்துறை அவிர்கதிர் முத்தம்’ என்கிறது (அகநானூறு 201. 3-5)
இவ்வாறான கொற்கையைப்பற்றிய சங்கப் பாடல்கள் பலப்பலவாம். இவ்வளவு ஏன்?
சிலப்பதிகார வழக்குரை காதையில், கண்ணகி மதுரை அவையில் வீற்றிருந்த பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்து, ‘நல் திறம் படராக் கொற்கை வேந்தே! என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே’ என பாண்டிய மன்னனைக் கொற்கை வேந்தே என்றுதானே விளிக்கிறாள்.
சங்க இலக்கியம் மற்றும் வரலாற்றில் ‘மதுரோதய நல்லூர், பாண்டிய கபாடம், கொல்கை, கொல்கை குடா’ என்றெல்லாம் கொற்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
"கி.பி. 130 வரை கொற்கை பாண்டியரின் முதன்மைத் தலைநகராக இருந்தது. இதன் பின்னரே ஆட்சித் தலைமை மதுரைக்கு மாற்றப்பட்டது" எனும் அரிய செய்தியைத் தாலமி என்ற அயல்நாட்டுப் பயணியின் குறிப்பிலிருந்து உணரமுடிகிறது.
கிபி130 வரை பாண்டியரின் தலைமையிடமாக இருந்தது கொற்கையில் மணலூர் எனும் பகுதி என்பதும், பின்னர் இப்போதைய மதுரைக்கு அருகில் உள்ள மணலூர் எனும் பகுதிக்கு மாற்றப்பட்டது என்பதும் அறியத் தக்கது. பெருமணலூர் எனப் புலவர்கள் பாடித் தொழும் கீழடிப் பகுதியே அன்றைய தலைநகர் என்று தொல்லியலார்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கிபி 130க்குப் பின்பும்கூட கொற்கை, விறற்போர்ப் பாண்டியன், மறப்போர்ப் பாண்டியர், வெற்றிவேல் செழியன் முதலான பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த செய்தியை இலக்கியங்களில் காணமுடிகிறது. தற்போதைய தொல்லாய்வுகளும் இதை உறுதிப் படுத்துகின்றன. பிற்காலத்தில், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மதுரையில் இருந்துகொண்டு ஆண்டாலும் கொற்கை மக்களின் எதிர்பார்ப்புகளை யெல்லாம் நிறைவேற்றி வைத்தான்.எனும் செய்தியும் இலக்கியத்தில் உண்டு.
கொற்கை, பண்டைய தமிழகத்தின் பெரும் துறைமுகம். யவனரும் அரபியரும் சீனரும் தமிழரோடு கலந்து பெருமித நடைபோட்ட மண். பொன்னும் மணியும் பவழமும் முத்தோடு உரசி 'கலுங் கலுங்'கென ஓசையிட்டுத் தோளில் இட்ட துணிப்பைகளில் குலுங்கத் தெருவெங்கும் பன்னாட்டுக் கால்கள் நடைபயின்ற மண்.
கொற்கையின் முத்து குறித்த சிறப்பும் ஆதனால் எய்திய உலகத் தொடர்பும் நாம் அறிந்துகொள்ளவேண்டியவை ஆகும்.
இப்பி யீன்ற இட்ட எறிகதிர் நித்திலம் கொற்கையே யல்ல படுவது – கொற்கைக் குருதிவேல் மாறன் குளிர்சாந்து அகலம் கருதியார் கண்ணும் படும்’ என்கிறது (முத்தொள்ளாயிரம். 68)
கொற்கைக் கரையில் மட்டுமா முத்துக்கள் பிறக்கும்? கொற்கையை ஆளும் பாண்டியனின் மார்பைத் தழுவ எண்ணும் பெண்களது கண்களிலும் பிறக்கும் என்ற பொருளமைந்த பாடல், முத்துக்கள் என்றாலே அது கொற்கைதான் என எண்ணத் தோன்றுகிறது.
பொருநை நாகரிகத்தின் பின்னணியில் கொற்கை நகரம் எகிப்து, கிரேக்கம், அரேபியா எனப் பல மேலை நாடுகளுடன் பெரும் வணிகம் செய்துள்ளது. தமிழகத்தின் வளம் கொழிக்கும் பூமியாக இருந்துள்ளது. கிளாடியசு, நீரோ (கி.பி. 54-68) போன்றவர்களோடும், பிற மன்னர்களோடும் அரச தூதுவர்களைப் பரிமாறிக்கொண்டு வணிகம் செய்து வந்திருக்கிறது.
“கொற்கையை ஆண்ட பாண்டிய மன்னர்கள், ரோம் நாட்டின் அகஸ்டஸ் மன்னனின் அரசவைக்கு கொற்கை முத்துக்களை பரிசாக அளித்தார்கள்” என்று குறிப்பிடுகிறார் வரலாற்று அறிஞர் ஸ்டிராபோ.
பாண்டிய மன்னர்களின் குதிரைப்படைகளுக்காக ஆண்டுதோறும் கொற்கைத் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான பாய் மரக் கப்பல்களில் 16,000 அரேபியக் குதிரைகள் வந்திறங்கின என்று குறிப்பிடுகிறார் வரலாற்று ஆசிரியர் வாசப்.
"முத்துக்களும் பல வகை ஆடைகளும் மேனாடுகளுக்கு அனுப்பப்பெற்றன. மேனாடுகளிலிருந்து குதிரைகளும் கண்ணாடிச் சாமான்களும் கொற்கை பெருந்துறையில் வந்திறங்கின” என மதுரைக் காஞ்சியும் புறநானூரும் குறிப்பிடுகின்றன.
இவ்வளவு பெரிய நாகரிகத்தற்குச் சொந்தக்காரர்கள் நாம் எனும்போது பெருமையில் மனம் பூரிப்பது உண்மைதானே.
பொருநை நாகரிகம் எனும் அழகிய சொல்லைத் தலைப்பாக எனக்குப் பேசத் தந்தீர்கள். பொருநை நாகரிகமா பொருநைப் பண்பாடா? – இதில் பொருநை நாகரிகம் என்பதே நான் எடுத்துக்கொண்ட தலைப்பு. . பண்பாடு என்பது வேறு. பண்பாட்டிலிருந்து கிளைத்து எழும் நாகரிகம் என்பது வேறு. நாகரிகத்தை ‘நாகரீகம்’ என்று கூறுவது வடவழக்கு. ஆன்மீகம், நாகரீகம் என்பன வட வழக்குகளாம். நாகரிகம் என்பது தமிழ் வழக்கு.
சற்று நாட்களுக்கு முன், கீச்சுலக நண்பர் ஒருவர் ‘நாகரிகம் என்றால் என்ன?’ எனும் கேள்வியை எழுப்பியிருந்தார். ‘நீர்ச்சீலை’ என்று பதில் அனுப்பியிருந்தேன். கீச்சுலக நண்பர்கள் பலரும் புரியாமல் கடந்து சென்றனர். அதனை இன்றைய தமிழில் எழுதியிருந்தால் கட்டாயம் புரிந்திருப்பர். நீர்ச்சீலை என்பது வேறொன்றுமில்லை. கோவணம் என்று சொல்கிறோமே அதுதான்.
யாரும் பார்க்காத நிலையிலும் உடல்நலம் பேண உள்ளாடை அணிவதை முதன்மை என்று கருதினானே தமிழன். அதுதான் பண்பாடு - தமிழர் பண்பாடு. கந்தையானாலும் கசக்கிக்கட்டு எனத் துப்புரவு செய்து உடுத்த வேண்டும் என்று சொன்னானே அது தமிழர் நாகரிகம். அதனையே எல்லோருக்கும் தெரியுமாறு அணியும் நாகரிகத்துக்குக் கொண்டுவந்துவிட்டோம் இன்று. அது அநாகரிகம்.
‘நாகரிகம்’ என்பதைத் ‘திருந்திய வாழ்க்கை’ எனும் அழகிய சொற்றொடரால் நிறைவு செய்வார் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்.
திருந்திய வாழ்க்கை என்பது எல்லா வகையிலும் துப்புரவாக இருப்பது, காற்றோட்டம் உள்ளதும் உடல் நலத்திற்கு ஏற்றதுமான வீடுகள் கட்டி குடியிருப்பது, சமுதாய இணக்கத்தை வரையறுத்து வாழ்வது. இவையெல்லாம் நாகரிகம் என்பேன்.
திருந்திய வாழ்க்கையே நாகரிகம் என்றால் ‘திருந்திய ஒழுக்கமே’ பண்பாடு எனலாம். எளியாரிடத்தும் இனிதாகப் பேசுதல், விருந்தோம்பல், இரப்போர்க்கு ஈதல், தன்னின மானம் கெடும் காலத்தே போரிடுவதும் பண்பாட்டுக் கூறுகளாம். சுருக்கமாகச் சொன்னால் செம்மையான பண்பாட்டின் வெளிப்பாடுதான் நாகரிகம்.
அதனையே, ‘அகநாகரிகம், புறநாகரிகம்’ எனக் குறிப்பிடுவார் பாவாணர். பண்பாடு எனாபது அகநாகரிகம். வெளித்தோற்றங்களால் சிறப்புறுவது புறநாகரிகம்.
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று. தன் செய்வினைப் பயனே. சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கன் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே” – நற்றிணை 210 (5-9)
இங்கே ‘செல்வம்’ என்பது நாகரிகம் எனும் பொருளிலேயே கூறப்படுகிறது. புகழ்ந்து பேசுதல், விரைவாகச் செல்லும் ஊர்தியைப் பெற்றிருத்தல் நாகரிகம் ஆகாது. இது தனது உழைப்பால் பெற்ற உயர் நிலை. தன்னைச் சேர்ந்தோருடைய துன்பத்தை மனதில் அறிந்து அவர் கேட்கும் முன்னே நீக்குதல் பண்பு என்கிறார். இது தமிழர் பண்பாடு.
ஆகவே நாம் பார்க்கப் போவது பொருநை நாகரிகம் மற்றும் அதன் பிறப்பிடமாகிய பண்பாடு. பொருநை பண்பாட்டையும் நாகரிகத்தையும் அறிய நமக்கு உதவுவன சங்கப் பாடல்களே. நாகரிகத்தை அறிய உதவுவன தொல்லாய்வுகள்.
தொல்லாய்வு முடிவுகளிலிருந்து அறியவரும் நாகரிகக் கூறுகளைப் பண்பாட்டின் எச்சமாகப் பிரித்து அறிய தொல்லாய்வு அறிஞர்கள் உதவுவார்கள்.
நாகரிகத் தொட்டில்கள் என்று அழைக்கப்படும் பெரும் நாகரிகங்கள் ஆற்றங்கரையில் தோன்றியவை என்பதை அனைவரும் அறிவோம். அதுபோல் நமது சிறப்பான பொருநை நதியில் தோன்றிய நாகரிகத்தையும் உலகறிய எடுத்துச் சொல்லும் பல தொல்லியல் ஆய்வுகள் நடந்துள்ளன.
மதுரை வைகைக் கரை மற்றும் அருகில் உள்ள தொல்லாய்வு இடங்களாக 293 இடங்கள் குறிக்கப்பெற்று ஆய்வு நடத்தக் கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் பொருநையின் கரையிலும் கொங்கராயக்குறிச்சி, மணக்கரை, வல்லநாடு, வாழவல்லான், செய்துங்கநல்லூர், குதிரைமொழித் தேரி ஆகிய பல இடங்களில் தொல்லாய்வு நடத்தக் கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளன. தமிழக அரசிடமும் நடுவண் அரசிடமும் கோரிக்கைகளை வைத்துப் போராடிக்கொண்டிருகாகிறார்கள் நண்பர்கள். நீதிமன்றத்தையும் அணுகிக் கொண்டிருக்கிறார் முத்தாலங்குறிச்சி காமராசு ஐயா அவர்கள். மற்றும் சமுக ஆர்வலர் நாறும்பூநாதன் ஐயா அவர்களும் நெல்லைத் தொல்லியல் ஆய்வுலக ஆர்வலர்கள் குழுவும் இதற்கான பெரு முயற்சியில் விடாது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதைக் காண்கிறேன்.
அதன் விளைவாக ஆதிச்சநல்லூரில் 6ஆம் கட்ட தொல்லாய்வும், சிவகளையில் முதல் கட்டத் தொல்லாய்வும் இவ்வாண்டு மே மாதம் தொடங்கி அக்டோபர் 2020 இறுதியில் நிறைவு பெற்றுள்ளது. ஆதிச்சநல்லூரில் தொல்லாய்வு அலுவலர்கள் பாஸ்கரன் மற்றும் லோகநாதன் தலைமையிலும், சிவகளையில் தொல்லாய்வு அலுவலர்கள் பிரபாகரன் மற்றும் தங்கதுரை ஆகியோர் தலைமையிலும் அகழ்வாய்வுகள் நடைபெற்றன. மீண்டும் ஆய்வுகள் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.
1876ல் செருமானிய நாட்டின் ஜோகோர்தான் ஆதிச்சநல்லூரில் முதல் ஆய்வைத் தொடங்கியவர். கிடைத்த பொருட்கள் எண்ணற்றவை. கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் பெர்லின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்திய எல்லைக்குள் ஆற்றங்கரையில் நடந்த தொல்லாய்வுகளில் முதல் ஆய்வு இதுதான் என்பர் தொல்லியலார். ஆகவே, இந்தியத் தொல்லியல் ஆய்வின் பிறப்பிடம் பொருனையாறு என்று சொன்னால் அது மிகையில்லை.
பின்னர் 1903ல் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லூயிசு லாபிக்யூ என்பார் தம் பங்குக்குச் சிலவற்றைத் தோண்டி எடுத்துப் பிரென்சு நாட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார். இருவருடைய தொல்பொருட்களும் கணக்கில் வராமல் போயின.
அதே வேளையில் 1903ல் அலெக்ஸாண்டர் ரியா என்பவரும் ஆதிச்சநல்லூரில் தம் ஆய்வைத் தொடங்கினார். இவர்தாம் முறைப்படியான அரசுஆணையின் பேரில் நியமிக்கப்பட்ட முதல் தொல்லியலாளர். இவர், தாம் கண்டெடுத்த பொருட்களை 13 படங்களாக முறைப்படி வெளியிட்டார். இவ்வாறு பல கட்டங்களாக நடந்த தொல்லாய்வின் ஆறாம் கட்டம் கடந்த அக்டோபர் 2020 இறுதியில் நிறைவு பெற்றுள்ளது.
ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் முதன்மையானவை மூன்று மண்டையோடுகள், தமிழி எழுத்துகள் பொறிக்கப்பெற்ற மண்பானைத் துண்டுகள், தங்க நெற்றிச் சுட்டி, இரும்புக் கருவிகள், சங்கு அணிகலன்கள் ஆகியவையே. எல்லாமே முதுமக்கள் தாழிகளாகவும் அதனோடு உள்வைக்கப்பட்டதாகவும் கிடைத்தவைதாம்.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த தொல்லியல் பொருட்களை கொண்டு அங்குள்ள மக்களின் பண்பாட்டை கமில் சுவிலபில் கீழ்வருமாறு வகைப்படுத்துகிறார்.
1. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் போர் வீரர்களாக இருந்தனர்.
2. குதிரைகளைப் பயன்படுத்தக் கற்றிருந்தனர்.
3. இரும்பை உருக்கவும் வார்க்கவும் அதை வைத்து போர் கருவிகள் செய்யவும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது.
4. முருகனையும் கொற்றவையையும் தெய்வமாக வழிபட்டனர். ஆதிச்சநல்லூரில் கிடைத்த சிறிய வேல், முருகு வழிபாட்டின் எச்சம் எனலாம்
5. ஆதிச்சநல்லூர் நாகரிகம் ஒரு நெல் நாகரிகம்.
தற்போது 6ஆம் கட்ட அகழாய்வில் மட்டும் 72 முது மக்கள் தாழிகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. சிவகளையிலும் பெரும்பான்மையாகக் கிடைத்தவை முது மக்கள் தாழிகளே.
முன்னம் கிடைத்த பானைத் துண்டுகளை கரிமம் 14 ஆய்வுக்கு உட்படுத்தியபோது அவை கிமு 905 மற்றும் 791 காலத்தியவை எனத் தெரிய வந்துள்ளது. 3000 ஆண்டுகளாகத் தொடர்ச்சியான தமிழர் வரலாற்றை இதுவரை நடந்த ஆய்வுகள் மூலம் கண்டுள்ளோம்.
வரலாற்றுக் காலம் என்பது ஓர் இனத்தின் பேச்சு மொழியானது எழுத்தாக மாறி எழுது பொருட்கள் தோன்றிய காலம ஆகும். . அதற்கு முந்தைய காலத்தை வரலாற்றுக்கு முந்தைய காலம் என்போம்.
வைகையிலும் பொருநையிலும் நடக்கும் ஆய்வுகள் சற்று வேறுபட்டன. ஐந்து கட்டங்களாக நடந்துள்ள வைகை ஆய்வில் கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் என மக்கள் வாழ்விடமே அதிகமாகக் கண்டெடுக்கப் பெற்றது. ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் முதுமக்கள் புதைகுழிகளே அகழ்ந்தெடுக்கப் பெற்றன.
வைகையின் போக்கு காலப்போக்கில் மதுரைக்கு அண்மையில் தெற்கிலிருந்து சற்று வடக்காக நகன்றுவிட்டது. இப்போது நடந்த ஆய்விலும்கூட அகரம் என்ற பகுதியில் ஆறு உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டு அது வைகையின் திசை மாற்றத்தை உறுதி செய்வதாகக் கூறுகின்றனர். . மக்களும் தங்கள் வாழ்விடங்களைத் தெற்கிலிருந்து வடக்கேயுள்ள மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி அமைத்துக் கொண்டனர். பழைய குடியிருப்பாகிய தென்பகுதி நகரம் அகழாய்வில் வெளிப்பட்டது. பொருநை நதிக்கரையில் மக்கள் வாழ்விடங்கள் 3000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்விடமாகவே உள்ளதால் ஆய்வில் அவற்றை உட்படுத்த இயலவில்லை. ஆதலால், பொருநையின் வாழ்விட நாகரிகம் இன்னமும் அறியப்படாமலேயே உள்ளது.
தமிழர் வரலாற்றைப் பொறுத்த அளவில், கீழடிதான் தொடக்கமோ அன்றி ஆதிச்சநல்லூர்தான் தொடக்கமோ என்று உறுதிப்படுத்தத் தேவையில்லை. ஏனென்றால் அதற்கு முன்னரே 15 லட்சம் ஆண்டுகளாகவே தமிழகத்தில் மனித இனம் வாழ்ந்தது என்பதற்கான சான்றுகள் கிடைத்துக் கொண்டுதான் உள்ளன. அவற்றில் ஒன்று அத்திரம்பாக்கம். சென்னைப் பூண்டி நீர்த்தேக்கப் பகுதிதான் அத்திரம்பாக்கம். அத்திரம்பாக்கத்தைத் தற்செயலான ஒரு பயணத்தில் கிபி 1863ல் கண்டுபிடித்ததும் இராபர்ட் புருஸ் ஃபுட்தான்.
அத்திரம்பாக்கத்தில் கி.மு. 15,10,000 என மதிக்கத்தக்க பழமையான தழும்பழி (Acheulean ) ஆயுதங்கள் கிடைத்துள்ளன. தழும்பழி, தழும்புரி என்னும் வேட்டைக் கருவிகளின் பயன்பாட்டைத் தொல்லியலாளர்கள் கிமு. 15 லட்சம் ஆண்டு முதல் கிமு.20லட்சம் ஆண்டுவரை எனக் குறிப்பிடுகின்றனர். அதனால் தமிழகத்தில் கீழைப்பழங்கற்காலத் தொடக்கம் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னும் எனச் செல்லலாம். தமிழகத்தில் வாழ்ந்த அம்மனிதர்கள் ‘ஹோமோ எரக்டஸ்’ என வரையறுத்துள்ளார்கள்.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடுமுன்தோன்றி மூத்த குடி” என்பார்களே அது மெய். ஏறக்குறைய 20 இலக்கம் ஆண்டுகளுக்கு முன்னரே தழும்பழி, தழும்புரி எனும் வேட்டைக்கருவிகளைச் சுமந்தவன் தமிழன். ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதன்மைப் பொருட்களுள் இரும்பினால் செய்த வாள்களும் உண்டு எனும்போது ‘மூத்தகுடி’ எனும் பெருமை உடையோர் நாம்தாமே.
ஆக, ஆதிமானுடர் தோற்றமும் வளர்ச்சியும் தமிழகத்தில் உண்டு என்பது ஆய்வின் முடிவு தெரிவிக்கும் கருத்துகள் எனத் தெரிய வருகிறது. இது குறித்து ஆய்வுகள் தொடரவேண்டிய சூழலில் காத்துக் கொண்டிருக்கிறோம். காத்துக்கொண்டே இருக்கிறோம் என்பது சற்று வேதனையாக உள்ளது.
இறுதியாக, நாம் பொதிய மலைக்கே திரும்புகிறோம். பொதியம், தென்பொதியம் என்றெல்லாம் போற்றப்படும் பொதிகை மலையில்தாம் தமிழ் பிறந்தது என்பர்.
அதனால்தான், ‘வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே” எனத் தமிழன்னை போற்றப்படுகிறாள்.
அந்தப் பொதிய மலையில் தோன்றிக் கொற்கையில் கடலோடு கலக்கும் ‘தண்பொருனை’ ஆற்று நாகரிகமே தமிழரின் முதல் நாகரிகம் என்பார் நுண்கலை அறிஞர் சாத்தான்குளம் ஆ. ராகவன்.
அதையே நானும் வழிமொழிந்து என் சிற்றுரையை முடிக்கிறேன். நன்றி! வணக்கம்! === === === === ===